Thursday, September 17, 2020
நமது சொந்த வீடு விண்ணகம்.
Wednesday, September 16, 2020
."நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக." (எபிரே. 10:23)
."நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக."
(எபிரே. 10:23)
***************************************
"ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.
32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
( மத். 6:31 - 33)
நம்மைப் படைத்து, இரட்சித்து, ஆண்டு வரும் நம் ஆண்டவராகிய இயேசு நம் ஒவ்வொருவருக்கும் கூறும் வாழ்வு தரும் வார்த்தைகள் இவை.
நமது ஒவ்வொரு தேவையும் இறைவனுக்குத் தெரியும்.
நமது ஒவ்வொரு தேவைக்கும் நாம்
இறைவனைத்தான் சார்ந்திருக்கிறோம்.
தனது அருள் வரங்களால் ஒவ்வொரு விநாடியும் நம்மைப் பராமரித்து வருபவர் அவரே.
அவர் நம்மைப் படைத்து பராமரித்து வருவதன் நோக்கம் விண்ணரசில் அவரோடு நிலை வாழ்வு வாழ்வதற்காகத்தான்.
நமக்கென்று தனி ஒரு நோக்கம் கிடையாது, இறைவனது நோக்கம் எதுவோ அதுவே நமது நோக்கம்.
நம்மை முழுவதும் அவரிடம் ஒப்படைத்து விட்டால்
அவர் தன் நோக்கத்தை நிறைவேற்றி விடுவார்
அதாவது
அவர் நம்மை விண்ணகத்தில் சேர்த்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வேண்டும்.
எப்படி இறைவன் நம்மை படைத்தார் என்று விசுவாசிக்கிறோமோ
அதேபோல் அவர் நம்மை காப்பார் என்றும் நம்ப வேண்டும்.
எல்லா புனிதர்களும் தங்களை வழி நடத்தும் இறைவன் எப்போதும் தங்களோடு இருப்பதை உணர்ந்தார்கள்.
அதை நம்ப இறைவனிடமிருந்து எந்த புதுமைகளையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
புனித ஒன்பதாவது லூயிஸ் பிரான்ஸ் நாட்டின் மன்னன்.
ஒரு முறை அரண்மனை சிற்றாலயத்தில் (palace chapel) நடந்த திருப்பலியின்போது எழுந்தேற்ற நேரத்தில் ஒரு புதுமை நடந்தது.
இயேசு குழந்தை வடிவில் பீடத்தில் தோன்றினார்.
அனைவரும் ஆச்சரியத்தோடு குழந்தை இயேசுவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் அரசன் அவரது அறையில் இருந்தான்.
ஒரு சேவகன் வேகமாக அரசனிடம் ஓடி சென்று
"அரசே திருப்பலியில் எழுந்தேற்ற நேரத்தில் குழந்தை இயேசு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாகவே இருக்கிறார் என்பதை அவரே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
உடனே வாருங்கள் குழந்தை இயேசுவை பார்க்க."
"திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாகவே இருக்கிறார் என்பதை நான் உறுதியாக விசுவசிக்கிறேன்.
விசுவாசம் குறைந்தவர்களுக்கு புதுமை தேவைப்படலாம்.
எனது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக நான் புதுமையைப் பார்க்க வந்தால்
எனது விசுவாசத்தின் மீது எனக்கே நம்பிக்கை இல்லை என்று ஆகிவிடும்.
காணாமல் விசுவசிக்கின்றவர்களே பாக்கியவான்கள்."
கடைக்குச் சென்று "பூட்டு இருக்கிறதா?" என்று கேட்டால் கடைக்காரன் பூட்டோடு சாவியையும் தருவான்.
"சாவி இருக்கிறதா?" என கேட்டால் நம்மை வினோதமாகப் பார்ப்பான்.
"ஆண்டவரே உமது அரசை எங்களுக்குத் தாரும்'
என்று கேட்டால்
அதோடு நமது உடல் தேவைகளையும் சேர்த்து இலவச இணைப்பாக ஆண்டவர் தருவார்.
அவரே சொல்லியிருக்கிறார்,
"-ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும்
(உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகள்)
உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
இப்போ ஒருவர் சொல்கிறார்,
"ஹலோ, நான் இறையரசைத் தேடவில்லை, இறைவனையும் தேடவில்லை,
எனது சொந்த முயற்சியால் தேவைகளுக்கு அதிகமாகவே சம்பாதித்து வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சொல்வது புரிகிறதா?"
"நன்றாகவே புரிகிறது.
இவ்வுலக வாழ்க்கை ஒரு நாள் முடியும்.
முடிந்தவுடன் தேவைகளும் இருக்காது, வசதிகளும் இருக்காது.
இறையரசைத் தேடியவர் நிரந்தரமாக அங்கே இறைவனோடு பேரின்ப வாழ்வில் இணைந்து இருப்பார்.
நீங்கள்? கேள்வி புரிகிறதா?"
நித்திய பேரின்ப வாழ்வு வேண்டும் என்பவர்கள் இறையரசை முதலில் தேட வேண்டும், தேவையற்ற வசதிகளை அல்ல.
இறைவனுக்காக தங்களது வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்த புனிதர்கள் உணவைப் பற்றி கவலைப் பட்டதே இல்லை.
புனித அன்னைத் தெரெசா உணவுக்காகவும் வசதிகளுக்காகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்
அவளால் முற்றிலுமாக தன்னை இறைப்பணிக்கு அர்ப்பணித்திருக்க முடியுமா?
எந்த அளவிற்கு நாம் இறைவனை மட்டும் நம்பி அவரது பணிக்காக நம்மை முற்றிலும் அர்ப்பணிக்கிறோமோ,
அந்த அளவிற்கு இறைவன் நமது அன்றாட தேவைகளை கவனித்துக் கொள்வார்.
தங்களது நலன்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்
முழுநேர பணியாளர்களாக இறைவனுக்காக மட்டும் வாழ்பவர்களுடைய நலன்களை இறைவன்,
தேவைப்பட்டால் புதுமைகள் செய்தாவது,
கவனித்துக்கொள்வார்.
ஒரு புனிதருடைய வரலாற்றில் வாசித்தது. புனிதர் பெயர் ஞாபகத்தில் இல்லை.
அவர் ஒரு மடத்தில் (monastery) துறவியாக இருந்தார்.
அவருடைய மடத்தின் தலைவர் அவரிடம் மடத்திற்கு வாங்க வேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியல் (list) ஒன்றைக் கொடுத்து,
கொஞ்சம் பணத்தையும் கொடுத்து,
"மடத்துக்கு வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியல் இது அதற்கான பணம் இது.
ஆனால் பணம் பொருள்களின் பாதி அளவு கூட வாங்க போதாது.
பொருள்கள் வாங்க வேண்டும். என்ன செய்யலாம்?"
துறவி கையிலிருந்த பணத்தை மொத்தமாக ஜன்னல் வழியே வெளியே வீசி எறிந்து விட்டார்.
"சுவாமி என்ன செய்தீர்கள்? மொத்தத்தையும் வெளியே வீசி விட்டீர்கள்!"
"வெளியே வீசவில்லை. கடவுளிடம் கொடுத்திருக்கிறேன். அவர் பார்த்துக் கொள்வார்."
தலைவர் சுவாமிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இவருடைய பக்தி அவருக்குத் தெரியும். ஆகவே வேறு எதுவும் சொல்லாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் முன்பின் தெரியாத ஒருவர் வந்து ஒரு பெருந் தொகையை மடத்துக்கு நன்கொடையாக தலைவரிடம் கொடுத்தார்.
"எதற்காக இந்த பணம்?" தலைவர் கேட்டார்.
" ஒவ்வொரு ஆண்டும் வருமானத்தில் ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம்.
நேற்று இரவு தூங்கும் போது யாரோ ஒரு மடத்தின் பெயரை என் காதில் சொல்வது போல் இருந்தது.
காலையில் மடத்தின் பெயரைச் சொல்லி விசாரித்தேன்.
உங்கள் மடத்திற்கு வழி காட்டினார்கள். உடனே வந்துவிட்டேன்."
"கடவுளுக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி."
கடவுள் மேல் 'முழு நம்பிக்கை' உள்ளவர்கள்,
நாளை என்ன நடக்குமோ என்று பயப்பட மாட்டார்கள்,
கவலைப்படவும் மாட்டார்கள்.
இன்றுவரை காப்பாற்றியவர்
நாளையும் காப்பாற்றுவார்.
எப்போதும் காப்பாற்றுவார்
என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்.
எந்தக் குழந்தையாவது நாளைக்கு பால் கிடைக்குமோ கிடைக்காதோ என்று கவலைப்பட்டு பார்த்திருக்கிறீர்களா?
எவ்வளவு வயதானாலும் கடவுளுக்கு நாம் குழந்தைகள்தான்.
கடவுள் மீது நாம் முழு நம்பிக்கை வைத்தால் அவரது சக்தியே
நம்மை இயக்கும்.
நமது சக்தி அல்ல.
நடக்கும்போது நாம் நமது வேகத்தில் போகிறோம்.
' பஸ்ஸில் ஏறி விட்டால் பஸ் வேகத்தில் போவோம்.
விமானத்தில் ஏறி விட்டால் விமானத்தின் வேகத்தில் போவோம்.
அதே போன்றுதான் நமது ஆன்மீக வாழ்விலும்.
முற்றிலுமாக இறைவனுக்குள் நுழைந்து விட்டால், வேகத்தைப் பற்றி
கவலைப்படவே வேண்டாம்.
இருட்டில் தனியாகப் போக பயப்படும் பிள்ளை தாயுடன் போகும்போது பயப்படுமா?
எப்போதும் இறைவன் நம்முடனே இருக்கும்போது நமக்கு பய உணர்ச்சி வரலாமா?
" இறைவா உம்மை நம்புகிறோம்"
என்று இறைவனிடம் அறிக்கை சமர்ப்பித்தால் மட்டும் போதாது.
உண்மையிலேயே நம்ப வேண்டும்.
உறுதியாக நம்ப வேண்டும்.
நமக்குள் இருந்து அவரே செயல்படுவார்.
லூர்து செல்வம்.
Tuesday, September 15, 2020
"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்." ( மத். 5:7)
Monday, September 14, 2020
நிறைவை நோக்கிய பயணம்.
நிறைவை நோக்கிய பயணம்.
*************************************
நாம் யாரும் நிறைவானவர்கள் அல்ல.
None of us are perfect.
நிறைவை நோக்கி பயணிக்கிறோம்.
விதையிலிருந்து பெரிய மரம் வெளிவருவதில்லை.
முதலில் இரண்டே இரண்டு இலைகள் மட்டும் எட்டிப் பார்க்கின்றன.
அவை தான் கன்றாகி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மரம் ஆகின்றன.
மனிதனும் குழந்தையாகத்தான் பிறந்து, வளர்கிறான்.
இயேசு இறைவன், ஆகவே நிறைவானவர்.
நம்மையும் நிறைவாய் இருக்க அழைக்கிறார்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவிக்கும் ஒரே சித்தம் தான்.
ஆனாலும் இயேசு நமக்குத் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைக் கற்பிப்பதற்காக
."என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."
என்று சொன்னார்.
அதேபோல் நம்மையும் நிறைவாய் இருக்க அழைக்கும் போது,
"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத் 5:48)
என்றார்.
இத்தகைய தாழ்ச்சி நமது நிறைவு நோக்கிய பயணத்தில் வேகத்தைக் கொடுக்கும்.
நம் ஆண்டவர் தனது நற்செய்தியை உலகெங்கும் பரப்ப குறைவுள்ள மனிதர்களையே (Imperfect people) சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.
குறைகள் நிறைந்த சீடர்கள்தான் அவரது பயிற்சியால் சிறிது சிறிதாக நிறைவை நோக்கி வளர்ந்தார்கள்.
அவர்களது ஆரம்ப கால நிலையையும்
பரிசுத்த ஆவியின் வருகைக்குப் பின்னால் அவர்கள் போதிக்க ஆரம்பிக்கும்போது இருந்த நிலையையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களுடைய வளர்ச்சி புரியும்.
இயேசு விண்ணகத்திற்கு எழுந்தருள்வதற்கு முன்னால் தனது சீடர்களுடன் வெளிப்படையாக இருந்தே அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.
விண்ணகம் சென்ற பின்,
"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
என்று அவர் கொடுத்த வாக்குறுதிக்கி ஏற்ப,
'அவர்களுக்குள் இருந்தே' செயல்பட்டார்.
இன்றும் சீடர்களின் வாரிசுகளின் உள்ளிருந்து செயல்படுகிறார்,
என்றும் செயல்படுவார்.
ஆகவே, நாம் நிறைவாக இல்லையே என்பதற்காக வருத்தப்பட வேண்டாம்.
எல்லா புனிதர்களின் வாழ்க்கையும் குறைகளோடுதான் ஆரம்பித்தது.
இறைவனுடைய அருளாலும் தங்களுடைய முயற்சியாலும் புனிதர்கள் நிறைவை நோக்கி வளர்ந்தார்கள்.
இறைவனுடைய அருள் இல்லாமல் சுய முயற்சியால் மட்டும் ஒன்றும் சாதிக்க முடியாது.
ஆரம்பத்தில் நாம் கேட்காமலேயே இறைவன் அருளை நமக்கு தருவார்.
முதல் அருளைப் பெற்ற பின், அதன் உதவியால் நாம் இறைவனை வேண்டி தொடர்ந்து அருளைப் பெற்று அதன் உதவியால் ஆன்மீகத்தில் வளற வேண்டும்.
மிதி வண்டியில் பயணிப்போர்
பெடலை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மெதுவாக மிதித்தால் வண்டி மெதுவாக நகரும். வேகமாக மிதித்தால் வேகமாக ஓடும்.
அதேபோல் தான் ஆன்மீக பயணத்தில் இறை அருளைப் பெற.
ஆண்டவரை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும், அவர் அருள் மழையைப் பொழிந்து கொண்டே இருப்பார்.
அதுதான் ஜெபத்தின் மகத்துவம்.
இறையருளின் வாய்க்கால் ஜெபம்.
புனிதர்கள் தங்களுடைய ஜெப வாழ்வினால் தான் நிறைவை நோக்கி வேகமாகப் பயணித்தார்கள்.
எளிமையாக, எல்லோரும் சொல்லத்தக்க
மிக அதிகமான அருள் வரத்தை நம்மிடம் கொண்டு வரக்கூடிய
ஒரு ஜெபம் இருக்கிறது.
அதை ஒரு நாளில் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
ஒவ்வொரு முறை ஜெபிக்கும் போதும் அதன் வழியே அருள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்
திருச்சிலுவையின் அடையாளமிட்டு
நாம் சொல்லும்,
" தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்.
என்பதுதான் அந்த ஜெபம்.
புனிதத்தில் வளர விரும்புகிறவர்கள்:
சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறையன்புடனும், பிறரன்புடனும் இருப்பார்கள்.
இயேசுவின் பண்புகளோடு வாழ்வதில் உறுதியாக இருப்பார்கள்.
பாவத்தில் விழ நேர்ந்தால் உடனே எழுவார்கள். .
முற்றிலுமாக பாவத்தை விட்டு விலகி நடப்பார்கள்.
ஜெபத்திலும் புண்ணிய வாழ்விலும் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.
இறைவன் சித்தம் எதுவாக இருந்தாலும் முழுமனதோடு ஏற்று நடப்பார்கள்.
மேற்கண்ட செயல்களில் குற்றம் குறைகள் ஏற்படலாம்,
ஏனெனில் அவர்கள் நிறைவை நோக்கி பயணிப்பவர்கள்.
நிறைவானவர்களிடம் குற்றங்குறைகள் இருக்காது.
ஜென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்ததால் ஆரம்பம் முதல், பாவமாசு எதுவும் இன்றி,
நிறைவாக இருந்தவள் அன்னை மரியாள் மட்டும்தான்.
ஆகவேதான் கபிரியேல் தூதர் அவளை
" அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்று வாழ்த்தினார்.
மற்ற எல்லா புனிதர்களும் குறைகளோடு ஆரம்பித்து நிறைவை நோக்கிப் பயணித்தார்கள்.
பயணத்தின்போது குறைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே சென்றார்கள்.
ஆகவே நம்மிடம் குறைகள் உள்ளன என்பதை கண்டு கவலைப்பட வேண்டாம்.
நமது ஜெப வாழ்வினால் குறைகள் ஒவ்வொன்றாக நீங்கி விண்ணரசை அடையும் போது நிறைவான இறைவனோடு ஒன்றிணைவோம்.
நாம் ஞானஸ்நானம் பெற்றபோது பாவம் நீங்கி பரிசுத்தம் ஆனோம்.
ஆனால் காலப்போக்கில் நமது பலவீனம் காரணமாக குறைகள் உள்ளே நுழைந்தன.
இக்குறைகளை நமது ஜெபவாழ்வின் மூலம் அகற்ற வேண்டும்.
பாவத்தில் விழ நேர்ந்தால் உடனே ஒப்புரவு அருட்சாதனம் மூலம் மன்னிப்பு பெற்று
பரிசுத்த வாழ்வைத் தொடர வேண்டும்.
இறை அன்பில் வளர்பவர்கள்தான்
பரிசுத்தர்களாக வாழ முடியும்.
நமது நற்செயல்களால் தான் இறையன்பு வளர முடியும்.
அதாவது இறை அன்பு செயல்களில் தன்னை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு குடும்பப் பெண் இறை அன்பும்,
பிறர் அன்பும் நிறைந்த நல்ல மனைவியாகவும் தாயாகவும் வாழ்வதன் மூலமே
பரிசுத்தத்தனத்தில் வளர முடியும்.
ஒரு ஆண்மகன் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும், தனது பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் வாழ்வதன் மூலமே
பரிசுத்தத்தனத்தில் வளர முடியும்.
அன்பு, இரக்கம், உழைப்பு, பகிர்வு, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் மூலமே குடும்பம் பரிசுத்தத்தனத்தில் வளர முடியும்.
இறையன்புடன் பெற்றோரையும் சகோதர, சகோதரிகளையும் நேசிப்பதோடு,
கீழ்ப்படிதல், பகிர்தல்,
ஒத்துழைப்பு, திறமைகளைப் பயன்படுத்துவதில் விடாமுயற்சி போன்ற பண்புகளில் இறையன்போடு வளரும் பிள்ளைகள் பரிசுத்தத்தனத்தில் வளர்வார்கள்.
இறையன்புடன், இறைவனுக்காக தங்கள் அந்தஸ்தின் கடமைகளை ஒழுங்காகச் செய்பவர்களும் பரிசுத்தத்தனத்தில் வளர்வார்கள்.
ஆக, உலகைத் துறந்து துறவிகளாக வாழ்ந்து இறைப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமல்ல
உலகத்தினர் அனைவருமே நிறைவை நோக்கி அழைக்கப்படுகின்றனர்.
இல்லறவாசிகளாக இருந்தாலும், துறவிகளாக இருந்தாலும்,
இறையன்பும் பிறரன்பும் இருந்து, இறைவனுக்காக வாழ்ந்தால்
நிறைவை நோக்கி வேகமாக முன்னேறலாம்.
நிறைவை நோக்கிய நமது பயணம் விண்ணக வாழ்விற்குள் நம்மை இட்டுச் செல்லும்.
லூர்து செல்வம்.
கிறிஸ்துவின் மீட்பு பணியில் அவரோடு ஒத்துழைப்போம்.
Saturday, September 12, 2020
" இயேசுவே உம்மைத் தேடி வருகிறேன்." (தொடர்ச்சி)
Friday, September 11, 2020
"மகனே, இன்று பகல் உன்னைப் பார்க்க வருவேன்."" இயேசுவே உம்மைத் தேடி வருகிறேன்." (தொடர்ச்சி)
"மகனே, இன்று பகல் உன்னைப் பார்க்க வருவேன்."
" இயேசுவே உம்மைத் தேடி வருகிறேன்."
(தொடர்ச்சி)
***************************************
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு
நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள்."
(மத். 25:40)
இந்த இறைவாக்கு நமக்குப் புதியதல்ல.
எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் கூட கோவிலில் சுவாமியாருடைய பிரசங்கத்தின் மூலம் இதைத் தெரிந்திருப்பார்கள்.
நாம் தெரிந்திருப்பதை எல்லாம் செயல்படுத்துவதில்லை.
பள்ளிக்கூடத்தில் படித்ததை எல்லாம் பரீட்சை எழுத மட்டும் பயன்படுத்துகிறோம்
வாழ்க்கையில் யாரும் பயன்படுத்துவதில்லை.
பைபிளில் படித்ததை எல்லாம் மேற்கோள் காட்ட பயன்படுத்துகிறோம்
வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை.
ஒருநாள் வகுப்பில் English grammar நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்:
"நான் சொல்லித்தரும் grammar rules ஐ எல்லாம் வாழ்க்கையில் பயன்படுத்துவீர்களா?"
ஒரு பையன் சப்தமாக பதில் சொன்னான்,
"பயன்படுத்துவோம், சார்."
"பேசும்போதா? எழுதும்போதா?"
"Rules ஐ எல்லாம் மனப்பாடம் செய்திருக்கிறோம்.
நாங்கள் ஆசிரியர்களாக மாறி எங்கள் மாணவர்களுக்கு Grammar சொல்லிக் கொடுக்கும்போது பயன்படுத்துவோம், சார்."
அதாவது அவர்கள் பேச பயன்படுத்த மாட்டார்களாம்,
அவர்களது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க பயன்படுத்துவார்களாம்!
பைபிளில் வாசிப்பதன் முதல் நோக்கம் அதன்படி நாம் வாழ்வது,
அடுத்து,
மற்றவர்களை வாழவைப்பது.
நாம் வாழாமல் மற்றவர்களை வாழ வைக்க முடியாது.
நாம் இயேசுவின் சகோதரர்கள்.
நம்மைப் போலவே உலகில் வாழும் மற்றவர்களும் இயேசுவின் சகோதரர்கள்தான்.
இயேசுவின் சகோதரர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அதை இயேசுவுக்குதான் செய்கிறோம்.
மற்றவர்களிடம் கோபப்படும் போது இயேசுவிடம்தான் கோபப்படுகிறோம்.
மற்றவர்களைத் துன்புறுத்தும்போது இயேசுவைத்தான் துன்புறுத்துகிறோம்.
மற்றவர்களை நோக்கி புன்முறுவல் செய்தால் இயேசுவை நோக்கிதான்
புன்முறுவல் செய்கிறோம்.
மற்றவர்களை வாழ்த்தும்போது இயேசுவைத்தான் வாழ்த்துகிறோம்.
உடனே ஒரு மாணவன் கேட்பான்,
" சார், என்னை எத்தனை தடவை அடிச்சிருக்கீங்க!"
" நான் உன்னை அடித்தது உனது தவற்றைத் திருத்தி உன்னை நல்ல மாணவனாக மாற்ற.
இயேசு எனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறேன்.
நாம் தப்பு செய்யும்போது இயேசு கூட அப்பப்போ நம்மைக் கொஞ்சம் அடிப்பார், திருத்துவதற்காக."
தேவைகள் உள்ள நமது அயலானுக்கு உதவுவது நமது கடமை.
அவரவர் அவரவர் தகுதிக்கு ஏற்ப கொடுத்து உதவினால் போதும்.
புனித பிரான்சிஸ் அசிசியார் இளைஞனாக இருந்த போது இடிந்து கிடந்த ஒரு கோயிலை கட்டி எழுப்ப முயற்சி எடுத்தார்.
கையில் காசில்லை.
ஆகவே வருவோர் போவோரிடம்.
" காசிருப்போர் காசு தாங்க.
பொருள் இருப்போர் பொருள் தாங்க.
கைகால் இருப்போர் உழைப்பைத் தாங்க.
வாயிருப்போர் உற்சாகம் தாங்க,
மனசிருப்போர் வாழ்த்து தாங்க."
என்று கேட்பாராம்.
நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.
ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஒரு புன்முறுவலாவது கொடுப்போம்.
காலையில் எழுந்து வீட்டைவிட்டு புறப்படும்போது
" ஆண்டவரே,உம்மைப் பார்க்கவே புறப்பட்டு வருகிறேன்."
என்று சொல்லிவிட்டு கிளம்புவோம்.
நாம் யாரைப் பார்த்தாலும் அவரில் இயேசுவை பார்ப்போம்.
அவரையே நம்பாதவர்களில் கூட இயேசு இருக்கிறார்.
ஏனெனில் அவர்களும் அவர் சாயலிலேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள்.
எல்லோரிடமும் இயேசுவைப் பார்த்தால்
இயேசுவிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படி நடந்துகொள்வோம்.
யாரிடமும் கோபப்பட மாட்டோம்.
அதிர்ந்து பேச மாட்டோம்.
நம்மிடம் தவறிருந்தால் மன்னிப்பு கேட்போம்.
யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டோம்.
யாரிடமும் குறை காண்பதையே குறியாக வைத்திருக்க மாட்டோம்.
யாரிடமும் யாரைப் பற்றியும் கெடுத்துப் பேச மாட்டோம்.
யார் நமக்கு என்ன செய்தாலும் அது இயேசுவின் சித்தப்படியே நடக்கிறது என்று நல்ல மனதோடு ஏற்றுக் கொள்வோம்.
அவர்களும் இயேசுவின் சகோதரர்கள் என்பதால்
இயேசு அவர்களுக்கு என்ன செய்வாரோ
அதையே நாமும் அவர்களுக்குச் செய்வோம்.
நாம் சந்திக்கும் அனைவரையும் நமது குடும்ப உறுப்பினர்களாகவே எண்ணி அவர்களோடு பழகுவோம்.
சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.
அப்படியே சண்டை வந்தாலும் உடனே சமாதானம் செய்து கொள்வோம்.
நாம் செல்லும் இடமெல்லாம் அன்பையே காண்பிப்போம். நமக்கும் அன்பே கிடைக்கும்.
தினமும் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போதெல்லாம்
" இயேசுவே, உம்மை தேடி வருகிறேன்."
என்று சொல்லிக்கொண்டே போனால் நாம் சென்றவிடமெல்லாம் இயேசுவை பார்ப்போம், இயேசுவை மட்டும் பார்ப்போம்.
நாம் யாரைப் பார்த்தாலும் இயேசுவின் அருள் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.
நாம் யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் முடிந்தபோதெல்லாம்
இயேசுவை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அவர்களிலும் இயேசு செயல்படுவதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்,
இது ஊழியர்கள் என்ற முறையில் நமது கடமை.
ஒரு சிறிய உதாரணம்:
"சார், Good Morning. எப்படி இருக்கீங்க?"
"Good Morning. நல்லா இருக்கோம். தூரமா?"
"கோவிலுக்கு.
கோவிலில கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வர வேண்டும்."
"உட்கார்ந்து என்ன செய்விங்க?"
"செபம் சொல்லுவோம்."
"ஆமா, தினமும் செபம் சொல்றீங்கள, அது கடவுளுக்குக் கேட்குமா?"
"கட்டாயம் கேட்கும்."
"அதெப்படி சார்? கடவுள் பரலோகத்தில இருக்கிறதா சொல்றீங்க,
நீங்க பூலோகத்தில இருந்து பேசறது அவருக்கு எப்படிக் கேட்கும்?"
"கடவுள் இருக்கும் இடம்தான் பரலோகம். கடவுள் எங்கும் இருக்கிறார். நமக்குள்ளேயும் இருக்கிறார்."
"நமக்குள்ளேயும் என்று சொல்லாதீங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்குள் அவர் இருக்க முடியாது."
"நீங்க ஒரு ஆசிரியர். எப்படிப்பட்ட மாணவர்கள் மீது அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள்?"
"weak Students மேல"
"கடவுளும் அப்படித்தான். அவரை நம்பாதவர்கள் மீதுதான் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார்.
உங்களுக்குள்ளும் கடவுள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்."
"செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா?
எனக்குள் அவர் செயல்பட்டால் எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்?"
"நீங்கள் இப்போது அவரைப் பற்றித் தானே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்!
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அவரைப் பற்றிய பேச்சை ஆரம்பித்ததே நீங்கள்தானே.
நான் "எப்படி இருக்கீங்க?" என்று மட்டும்தான் கேட்டேன்.
"கோவிலுக்கு" என்று என்னை சொல்ல வைத்தது நீங்கள் தானே!
கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை தன்னை நோக்கி திருப்பி கொண்டிருக்கிறார்.
ஒருநாள் நீங்கள் முற்றிலும் அவரிடம் திரும்புவீர்கள்."
"அது மட்டும் நடக்காது."
"உண்மைதான்.
அது மட்டும் நடக்காது,
அதற்கு மேலும் நடக்கும்."
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாகத் தெரியும்.
கத்தோலிக்கர் அல்லாத பிரிவினை சபையை சேர்ந்தவர்கள்,
இறைநம்பிக்கை இல்லாதவர்கள்
நம்மைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களது கொள்கையை நம்மிடம் திணிப்பதற்காக அவர்களேதான் பேச்சை ஆரம்பிப்பார்கள்.
அதாவது உண்மையை நாம் சொல்ல அவர்களே உதவி செய்வார்கள்.
நாம் கிடைக்கிற சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார்கள்.
நாம் அமைதியாகப் பேச வேண்டும்.
தண்ணீரை வேகமாக ஊற்றினால் அது விழுந்த இடத்தை விட்டு வெளியே சென்றுவிடும்.
ஆனால் மெதுவாக ஊற்றினால் ஊற்றிய இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.
ஒரு நாள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த நண்பர் என் கழுத்தில் இருந்த உத்தரீயத்தைப் பார்த்துவிட்டார்.
அவ்வளவுதான்.
"நீங்கள் கிறிஸ்தவர்தானே?"
" ஆமா."
"கிறிஸ்துவை விட ஏன் மாதாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?"
"மன்னிக்கவும். உங்களைப் பெற்ற தாயை நீங்கள் நேசிக்கிறீர்களா?"
"அதிலென்ன சந்தேகம்?"
"எனக்கு சந்தேகமில்லை. நேசிக்கிறீர்களா? இல்லையா?"
"நேசிக்கிறேன்."
"கிறிஸ்து அவருடைய தாயை நேசிகின்றாரா? இல்லையா?"
நண்பர் யோசித்தார்.
"நேசிகின்றார்."
"நான் இயேசுவின் சகோதரன் அவருடைய தாய் எனக்கும் தாய்.
என் தாயை நான் நேசிக்கிறேன்.
நீங்கள் இயேசுவின் சகோதரனா?"
(தொடரும்)
லூர்து செல்வம்.