''ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்."
அன்னை மரியாளுக்கு நாம் கொடுத்திருக்கும் பல பெயர்களில் ஆரோக்கிய மாதா ஒன்று.
ஆரோக்கியம் என்றால் நலம்.
வேளை நகரில் காட்சி கொடுத்த மாதா அவளைத் தேடி வேண்டுபவர்களுக்கு நோய் நொடிகளிலிருந்து விடுதலை கொடுப்பதால் அவளை ஆரோக்கிய மாதா என்று அழைக்கிறோம்.
காலால் நடக்கமுடியாமல் ஊனமுற்றிருந்த பையனுக்கு சுகமளித்ததை வேளாங்கண்ணியின் வரலாறாறில் வாசிக்கிறோம்.
இன்றும் தாயின் ஆரோக்கியப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நமது ஆண்டவர் இயேசுவும் தனது பொது வாழ்வின் போது சென்ற இடமெல்லாம் தன்னைத் தேடி வந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்.
ஆரோக்கியம் என்றாலே முதலில் நமது மனதில் தோன்றுவது உடல் ஆரோக்கியம் தான்.
ஆனால் ஆன்மீக ஆரோக்கியம் தான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு முக்கியம்.
இயேசு உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கினாலும் இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம் அது அல்ல, ஆன்மீக ஆரோக்கியம் தான் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம்.
அதாவது பாவ நோயிலிருந்து ஆன்மாவை மீட்பது தான் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம்.
ஆரம்பத்தில் மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகத்தான் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.
ஆரோக்கிய மாதாவின் காட்சிகளின் நோக்கமும் அதுதான்.
ஆன்மீக ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படாமல் உடல் ஆரோக்கியத்தை மட்டும் தேடுபவர்கள் எப்படி விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்?
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதே நமது ஆன்மீகக் கடமைகளை தடை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
மாணவன் சரியான நேரத்தில் பள்ளிக்குப் போக அவனது அப்பா ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.
அவன் சைக்கிளிலேயே பகல் முழுவதும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் அவனைப் பற்றி என்ன சொல்வோம்?
நல்ல ஆரோக்கியத்தால் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒருவர் ஆன்மீக வாழ்வில் அக்கரை காட்டாமல் முழுக்க முழுக்க லௌகீக இன்பங்களில் மட்டும் நாட்டம் செலுத்தினால் அவனது ஆரோக்கியத்தால் அவனுக்கு என்ன பயன்?
ஆரோக்கிய மாதாவின் திருத்தலத்துக்கு திருயாத்திரை செல்பவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் செல்வது வெறுமனே யாத்திரை அல்ல,
திரு யாத்திரை. இறைவனது அருளைப் பெறுவதற்காகச் செல்லும் யாத்திரை.
"யாத்திரையாகச் சென்றோம். கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். அன்னையின் தேர் வலத்தில் கலந்து கொண்டோம். கடலில் குளித்தோம். கடைகளில் கண்டதை வாங்கினோம். ஹோட்டலில் சாப்பிட்டோம். ஊருக்குத் திரும்பினோம்."
இப்படிச் சொல்பவர்களுக்கு திருப்பலி கூட ஒரு நிகழ்வுதான்.
ஆரோக்கிய அன்னையின் திருவிழாவுக்கு திருயாத்திரை செல்பவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மீக ஆரோக்கியத்துக்கு.
நல்ல பாவ சங்கீர்த்தனம், திருப்பலியில் முழுமையான ஈடுபாடு,
திரு விருந்து,
ஆரோக்கியமான ஆன்மீக வாழ்வுக்கு உதவ அன்னையிடம் வேண்டுதல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற ஆன்மீக காரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவது தான் உண்மையான திருவிழாவில் பங்கேற்பு.
அன்னையின் திருவிழா நமது ஆன்மீக வாழ்வுக்கு உந்தும் சக்தியாக விளங்க வேண்டும்.
உடல் சார்ந்த ஆரோக்கியத்துக்காக வேண்டக் கூடாதா?
வேண்ட வேண்டும், அது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருப்பதற்காக.
அன்னை மரியாள் புதுமை செய்து நமக்கு ஆரோக்கியம் தருவது தனது வல்லமையை நம்மிடம் விளம்பரம் செய்வதற்காக அல்ல,
நம்மைத் தனது திருமகனிடம் அழைத்துச் செல்வதற்காக.
அவள் நமது விண்ணகப் பாதையில் நமது வழிகாட்டி, நமது வழித்துணை.
எப்போதும் அவளது கரம் பிடித்து நடந்தால் உடல், உள்ள, ஆன்மீக ஆரோக்கியத்தோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைவது உறுதி.
அவளுக்கு மிகவும் பிடித்தமான செபம் செபமாலை.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபமாலை சொல்லுவோம்.
குறைந்தது மங்கள வார்த்தை செபத்தை நிறுத்தி, ஒவ்வொரு வார்த்தையாக, மனதுக்குள்ளே தியான உணர்வோடு சொல்லிக் கொண்டேயிருப்போம்.
இறைவனின் தாயே என்று சொல்லும் போதெல்லாம் இறைவன் நம்மை அவரோடு அரவணைத்துக் கொள்வார்.
நமது மரண நேரத்திலும் அன்னையே வந்து நம்மைத் தனது திருமகனிடம் அழைத்துச் செல்வார்.
"ஆரோக்கிய மாதாவே, எங்கள் ஆன்மாவின் ஆரோக்கியத்தை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறோம்.''
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment