இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
(லூக்கா.7:38)
பரிசேயருள் ஒருவரின் அழைப்பை ஏற்று இயேசு அவருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
பாவியான பெண் ஒருவர் . இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பதை அறிந்து
நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்து,
இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அழுது கொண்டே நின்றார்;
அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து,
தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்;
இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை.
"இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்," என்று அவர் நினைத்ததைப் பார்த்தால் இறைவாக்கினர் என்று உறுதியாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஒருவருடைய வார்த்தைகளுக்கோ, செயல்களுக்கோ பொருள் காண்பது அவர் யார் என்பதை வைத்து தான்.
பொதுவாகப் பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளிலும் செயல்களிலும் குறை காண்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
அதற்காகக் கூட இயேசுவை விருந்துக்கு அழைத்திருக்கலாம்.
தான் பாவங்களை மன்னிக்க வல்ல கடவுள் என்று அவனுக்கு அறிவுறுத்துவதற்காகக் கூட
இயேசு பாவியாகிய பெண் அங்கு வர அனுமதித்திருக்கலாம்.
பரிசேயரிடம் நமது நேரத்தை வீணாக்காமல் பாவியான பெண்ணின் செயலைப் பற்றித் நியானிப்போம், ஏனெனில் நாம் பாவிகள்.
பரிசேயர், "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசுவுக்கு அந்தப் பெண் பாவி என்பது தெரியும்.
நித்திய காலமாகத் தெரியும்.
அவர் பாவிகளைத் தேடித்தானே உலகுக்கு வந்தார்?
பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்காகவே அவரைத் தேடி வந்தவரைப் பற்றிக் கடவுளாகிய அவருக்குத் தெரியாமலிருக்குமா?
பாவியாகிய பெண் தன்னைத் தொட அனுமதித்ததன் மூலம் இயேசு நமக்கு என்ன நற் செய்தியை அறிவிக்கிறார்?
இறைமகன் மனுமகனாகப் பிறந்ததே பாவிகளாகிய நம்மை மன்னிப்பதற்காகத்தான்.
மனிதனாகப் பிறக்காமல் விண்ணிலிருந்தே நமது பாவங்களை மன்னித்திருக்க முடியாதா?
முடியும். அவர் நினைத்தால் எல்லாம் முடியும்.
பின் ஏன் நம்மைத் தேடி உலகுக்கு வந்தார்?
நண்பர் அவர் வீட்டுத் திருமண விழாவுக்கு வந்து மண மக்களை வாழ்த்தும்படி அழைத்திருக்கிறார்.
வாழ்த்துக்களை WhatsApp மூலமும், பரிசுப் பொருளை Courier மூலமும் அனுப்ப முடியாதா?
முடியும். நமக்கும் போக்குவரத்து செலவு மிச்சம்.
பிறகு ஏன் திருமண வீட்டுக்குப் போகிறோம்?
நேரடியாகச் சென்றால்தான் நமது அன்பின் தன்மை அவர்களுக்குப் புரியும்.
அதேபோல, கடவுள் மனிதனாகப் பிறக்காமலே நமது பாவங்களை மன்னித்திருக்கலாம்.
அவர் பாடுகள் பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் நமது மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பை தனது செயல் மூலம் காண்பிக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
''நான் உங்களை நேசிக்கிறேன் " என்று மட்டும் கூறும் ஒருவர் மீது நமக்கு ஏற்படும் அன்பை விட
நமக்காகத் தனது உயிரையே தியாகம் செய்து நம்மைக் காப்பாற்றிய ஒருவர் மீது நமக்கு அதிக அன்பு ஏற்படும் அல்லவா?
அதேபோல கடவுள் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே நம்மைப் படைத்தது போல நமது பாவங்களையும் மன்னித்து விட்டால் நமது உள்ளத்தில் உதிக்கும் அன்பை விட
விண்ணிலிருந்து நாம் இருக்கும் மண்ணுக்கு இறங்கி வந்து,
நம்மோடு நாமாக வாழ்ந்து,
நமக்காகப் பாடுகள் பட்டு,
சிலுவையில் அறையப்பட்டு,
மரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தியதால்
நமது உளளத்தில் அவர்மீது ஏற்படும் அன்பு பல மடங்கு அதிகமாக இருக்கும்.
அவர் நம்மைத் தேடி வந்தது போல நாமும் அவரைத் தேடிச் செல்ல வேண்டும்.
இயேசுவைத் தேடிப் பரிசேயர் வீட்டுக்கு வந்த பாவியைப் போல
பரிசுத்தராகிய இயேசுவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கக் தகுதி இல்லாவிட்டாலும் பின்னால் நின்றாவது,
அவருக்கு எதிராக நாம் செய்த அனைத்துப் பாவங்களுக்காகவும் மனத்தாபப் பட்டு, அழுது
தண்ணீர் சிந்தி, நமது கண்ணீரால் அவரது பாதங்களைக் கழுவ வேண்டும்.
இயேசு நம்மை நோக்கி,
"மகனே, நீ என் மீது கொண்ட அன்பினால் உந்தப்பட்டு எனக்கு விரோதமாக செய்த பாவங்களுக்காக மனத்தாபப் படுகிறாய்.
நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்.
இனி பாவம் செய்யாதே.
சமாதானமாகப் போ." என்பார்.
நாம் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும், எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் நமது மனத்தாபக் கண்ணீரில் அவை எல்லாம் கரைந்து போகும்.
அது சரி, அன்று இயேசு உலகில் இருந்தார். அந்தப் பெண் அவரிடம் சென்று அழுதாள்.
இப்போது இயேசு விண்ணகம் சென்று விட்டாரே, நாம் எங்கு சென்று கண்ணீர் விட?
"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" இவை இயேசுவின் வார்த்தைகள்.
அன்று மட்டுமல்ல, இன்றும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.
1. திவ்ய நற்கருணையில்.
2. நம்முடைய குருக்களின் உருவில்.
நம்மை ஆன்மீகத்தில் வழி நடத்திக் கொண்டிருக்கும் குருக்களில் நாம் இயேசுவைக் காண வேண்டும்.
"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்."
(அரு. 20:23)
இது நமது குருக்களுக்கு இயேசு கொடுத்திருக்கும் அதிகாரம்.
நாம் நமது குருக்களிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யும் போது இயேசுவிடம் தான் செய்கிறோம்.
இயேசு தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.
பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்வோம்.
பரிசுத்தர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment