அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்.
(லூக்கா நற்செய்தி 9:3)
இயேசு தனது சீடர்களை மக்களுக்கு நற் செய்தியை அறிவிக்க அனுப்பும் போது அவர்கள் வசம் கொடுத்து அனுப்பியது இரண்டு விடயங்கள் தான்.
1. அறிவிக்க வேண்டிய நற் செய்தி.
2. பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும், அதிகாரமும்.
பயணத்தின் போது ஒரு அங்கியைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பணித்தார்.
ஏன் இந்தக் கட்டுப்பாடு?
ஏன் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று கட்டளையிட்டார்?
சீடர்களுக்குக் கொடுக்கப்பட பணி நற் செய்தி அறிவிப்பு.
பள்ளிக்கு வரும் மாணவன் கல்வி சார்ந்த பொருள்களை மட்டும் பள்ளிக்குக் கொண்டு வர வேண்டும்.
சம்பந்தம் இல்லாத பொருட்களை எடுத்துச் சென்றால் அவனது கவனம் அவற்றின் மேல் தான் இருக்கும், கல்வியின் மீது இருக்காது.
ஆண்டவர் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறிய பொருட்கள் நற் செய்தி அறிவிப்போடு நேரடித் தொடர்பு இல்லாதவை.
அவை கட்டாயம் தேவைப்பட்டால் நற் செய்தியைக் கேட்கும் மக்கள் கொடுத்து உதவுவார்கள்.
இயேசு நற் செய்தி அறிவித்த காலத்தில் மக்கள் அளித்த உணவைத் தான் உண்டார்.
அவர் உணவைப் பற்றிக் கவலைப்படவில்லை.
உணவு கிடைக்காவிட்டால் பட்டினி தான்.
ஒரு முறை பசியாக இருந்ததால் ஒரு அத்தி மரத்தில் பழம் தேடிய செய்தி பைபிளில் இருக்கிறது.
"மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை.
(மாற்கு நற்செய்தி 11:12,13)
"அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்."
(மத்தேயு நற்செய்தி 12:1)
அன்று இயேசுவுக்கும், சீடர்களுக்கும் யாரும் சாப்பிடக் கொடுத்திருக்க மாட்டார்கள்.
பசியாக இருந்ததால் சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.
ஆக அவர்களுக்கு நற் செய்தி அறிவிப்பின் அளவுக்கு உணவு முக்கியமானதல்ல.
ஆன்மீக உணவாகிய இறை அருள் தான் முக்கியம்.
நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே இறை அருள் கிடைத்துக் கொண்டிருக்கும்.
அன்று சீடர்களுக்குக் கொடுக்கப்பட அறிவுரை நமது குருக்களுக்கும் பொருந்தும்.
"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்." என்பது நமது திருச்சபை நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.
அவர்களுக்கு உரிய அத்தனை உடைமைகளையும் துறந்து விட்டு தான் நற் செய்திப் பணி புரிய வந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய வேண்டியது நாம் தான்.
திருப்பலிக்கென்று நாம் கொடுக்கும் பணம் அந்த நோக்கத்திற்காகத் தான்.
என்ன பணிக்காக திருச்சபை பங்குக் குருக்களை நமக்குத் தந்திருக்கிறது?
இயேசு சீடர்களை அனுப்பிய அதே பணிக்காகத்தான்.
1. நற் செய்தியை நமக்கு அறிவிக்க.
2. பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும்.
இரண்டுமே முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிகள்.
1. திருப்பலியின் போது மட்டுமல்ல,
தமது இல்லங்களைச் சந்திக்க வரும்போதும்,
நாம் குருவானவரிடம் ஆன்மீக ஆலோசனை பெற அவரைச் சந்திக்கும் போதும்
நற் செய்தியை மையமாக வைத்து தான் நம்மோடு பேசுவார்.
ஆனால் நம்மில் அநேகர் பங்குக் குருவை ஆன்மீக ஆலோசகராக (Spiritual Director) பயன்படுத்துவதில்லை.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கேட்க,
நமது கல்லூரிகளில் Admission கிடைக்க சிபாரிசுக் கடிதம் வாங்க
போன்ற காரியங்களுக்காகவே பங்குக் குருவை அணுகுகிறார்கள்.
இயேசு அதற்காக குருக்களை நம்மிடம் அனுப்பவில்லை.
திருப்பலி நிறைவேற்றுதல், இயேசுவை நமக்கு உணவாக தருதல்,
நமது பாவங்களை மன்னித்தல்,
தேவத் திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல் போன்ற ஆன்மீக பணிகளுக்காகவே
இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.
2. நமது ஆன்மாவை சாத்தானின் பிடியிலிருந்து விடுவிப்பதும்,
பாவம் என்ற ஆன்மீக
நோயிலிருந்து நம்மை குணமாக்கவும் இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.
இந்த பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டுமென்றால்
பள்ளிக்கூடங்களின் நிர்வாகப் பிடியிலிருந்தும்,
பங்கை சார்ந்த நிலங்களின் நிர்வாகப் பிடியிலிருந்தும் நமது குருக்களை ஆயர் விடுவிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களால் முழுநேர ஆன்மீக பணி செய்ய முடியும்.
நமது ஞான மேய்ப்பர்களை முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிக்காக பயன்படுத்திக் கொள்வோம்.
அவர்களை நமது குடும்ப உறுப்பினர்களாக பாவித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம்.
அவர்களுக்குச் செய்யும் உதவி இயேசுவுக்கு நாம் செய்யும் உதவி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment