Saturday, September 6, 2025

தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. (லூக்கா நற்செய்தி 14:27)



தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 
(லூக்கா நற்செய்தி 14:27)

அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. 
(லூக்கா நற்செய்தி 14:33)

இயேசு தனது சீடர்களாக இருக்க விரும்புபவர்களுக்கு இரண்டு நிபந்தனைகள் போடுகிறார்.

1. தங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு வர வேண்டும்.

2. உடமைகள் எதுவும் இல்லாமல் வர வேண்டும்.

1. சிலுவையைச் சுமந்து அதில் மரிப்பதற்காகவே பிறந்த இயேசுவைப் போல சிலுவையைச் சுமந்து அதில் மரிப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

பிரசவ வேதனை நமது தாய் சுமந்த சிலுவை. அப்படியானால் நாம் சிலுவையோடு தான் பிறந்திருக்கிறோம்.

சிலுவையோடு பிறந்த நாம் சிலுவையோடு வாழ்ந்து சிலுவையோடு மரிக்க வேண்டும் என்பது தான் நம்மைப் படைத்தவரின் விருப்பம்.

இயேசு எதற்காகச் சுமந்தார்?

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நம்மை மீட்டு அவரது நித்திய பேரின்பத்தில் பங்கு தருவதற்காக.

இயேசு எதற்காகச் சிலுவையைச் சுமந்தாரோ அதை நாம் அடைவதற்காகவே நாம் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்.

சிலுவை எப்போது உலகிற்குள் நுழைந்தது?

நமது முதல் பெற்றோர் பாவம் செய்த போது.

"பிரசவ வலியுடன் நீ பிள்ளை பெறுவாய்" என்று ஏவாளையும்

"நெற்றி வியர்வை நிலத்தில் விழ நீ உழைத்து உண்பாய்" ஆதாமையும் கடவுள் ஆசீர்வதித்தபோது சிலுவை உலகில் நுழைந்தது.

அப்போது அதற்குச் சிலுவை என்ற பெயர் இல்லை. 

சிலுவை என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது ஆண்டவரின் வருகைக்குப் பிறகுதான்.

கடவுளின் வாயிலிருந்து வருவதெல்லாம் ஆசீர்வாதங்கள் தான்.

ஆகவே நாம் சிலுவையினால் ஆசீர்ததிக்கப் பட்டிருக்கிறோம்.

சிலுவை எந்த வடிவில் வரும்?

துன்பத்தின் வடிவில் வரும்.

நமக்கு வரும் துன்பங்களை ஆசீர்வாதங்களாக ஏற்றுக் கொண்டு வாழ்வதன் மூலம் நாம் நமது சிலுவையைச் சுமக்கிறோம்.

அப்படியானால் நமது வாழ்க்கையே சிலுவை தான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததால் நாம் சிலுவையைச் சுமக்கும் போது இயேசுவோடு ஒன்றித்து வாழ்கிறோம்.

இயேசுவோடு ஒன்றித்து வாழ்வது தான் நிலை வாழ்வு.

அப்படியானால் இயேசுவோடு ஒன்றித்து சிலுவையைச் சுமந்தால் நாம் உலகிலேயே நிலை வாழ்வைச் சுவைக்க ஆரம்பித்து விடுவோம்.

இயேசு அதில் மரிக்குமுன் சிலுவை ஒரு தண்டனைக் கருவியாக இருந்தது.

இயேசுவைத் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டுதான் பரிசேயர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். 

ஆனால் இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் அதை ஆசீர்வாதத்தின் கருவியாக மாற்றினார். 

ஆகவேதான் நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்க நினைக்கும் போது அவர்களது நெற்றியில் சிலுவை அடையாளம் போடுகிறோம். 

நமது ஒவ்வொரு நாளையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு நாளையும் சிலுவை அடையாளத்தால் ஆரம்பிக்கிறோம். 

சிலுவை இன்றி மீட்பு இல்லை. 

 நாம் சிலுவையைச் சுமப்பது எப்படி?

இறைவனை மறந்து நமது விருப்பம் போல் வாழும்போது பாவம் நமது வாழ்வில் நுழைகிறது. 

நமது விருப்பங்களைத் துறந்து 
இறைவனது விருப்பப்படி வாழும் போது சிலுவை நமது வாழ்வில் நுழைகிறது. 

உண்மையில் இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் சிலுவை. 

நமது விருப்பங்களை இறைவனது விருப்பங்களுக்கு உட்படுத்தி வாழ்வதுதான் சிலுவை. 

காலையில் நெடு நேரம் தூங்க வேண்டும் என்பது நமது விருப்பம். 

காலையில் எழுந்து செபமாலை சொல்ல வேண்டும் என்பது இறைவனது விருப்பம். 

செபமாலை சொல்ல வேண்டும் என்பதை நமது விருப்பமாக மாற்றிக் கொள்வது சிலுவை. 

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் இறைவனது விருப்பத்திற்கு உட்பட்டு வாழ்வதுதான் சிலுவை. 

உடலைச் சார்ந்த துன்பங்கள் மட்டுமல்ல ஆன்மாவைச் சார்ந்த துன்பங்களும் சிலுவை தான்.

ஆன்மாவைச் சார்ந்த துன்பம் என்றால்?

நமது விழுந்த இயல்பின் 
(Fallen nature) காரணமாக இறைவனின் கட்டளைகளுக்கு எதிராக செயல்பட ஆவல் ஏற்படுகிறது. 

அந்த ஆவலை அடக்கி இறைவன் விருப்பப்படி வாழ நமக்கு எதிராக நாம் செயல்பட வேண்டி இருக்கிறது.

இப்படிச் செயல்படும் போது நமது ஆன்மாவில் ஏற்படும் உணர்வு ஆன்மாவைச் சார்ந்த துன்பம்.

காலையில் எழுந்து திருப்பலிக்குச் செல்ல வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். 

தொடர்ந்து தூங்க வேண்டும் என்பது நமது விருப்பம். 

இப்போது நமது விருப்பத்துக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். 

அப்படி செயல்படும் போது ஏற்படும் உணர்வுகளை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். 

அதாவது சிலுவையைச் சுமந்து கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். 

எப்போதெல்லாம் இறைவனின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட விருப்பம் ஏற்படுகிறதோ

 அப்போதெல்லாம் அந்த விருப்பத்தை அடக்கி இறைவனின் விருப்பத்திற்கு இணங்க செயல்படும்போது

 நாம் சிலுவையை சுமக்கிறோம்.

இந்தக் கண்ணோக்கின்படிப் பார்த்தால் நாம் சிலுவையைச் சுமக்காமல் இறைவனைப் பின்பற்ற முடியாது.


"பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் 
தன்னலம் துறந்து 
தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்."
(லூக்கா நற்செய்தி 9:23)


தன்னலத்தைத் துறப்பதுதான் சிலுவை.

நம்மோடே ஒட்டிப் பிறந்த துன்பத்தை ஆண்டவருக்காக ஏற்றுக் கொண்டால் அது சிலுவை,     ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது வெறும் துன்பம் தான்.

வெறும் துன்பத்தால் எந்த பயனும் இல்லை.



2.ஆன்மீகப் பாதையில் உடமைகள் எதுவும் இல்லாமல் எப்படிப் பயணிப்பது?

நமது ஆன்மாவுக்கு நமது உடலே ஒரு உடமை தான்.

நமது இறுதி நாள் வரை இந்த உடமை இல்லாமல் வாழ முடியாது.

உணவு, உடை, இருப்பிடம் போன்ற உடமைகள் இல்லாமல் நமது உடல் வாழ முடியாது.

அப்படியானால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற உடமைகள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ்வது?

இவ்வுலகில் உயிர் இல்லாமல் எப்படி ஆன்மீக வாழ்வு வாழ்வது?

ஆன்மீக மொழியில் இல்லாமல் என்றால் பற்று இல்லாமல் என்பது பொருள்.

நமது கையில் விலை உயர்ந்த பேனா ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

அதன் மீது நமக்கு பற்று இருந்தால் எங்கு சென்றாலும் அதை எடுத்துக் கொண்டுதான் போவோம். 

பற்று இல்லாவிட்டால் அதை எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்துவோம்,

 மற்ற நேரங்களில் அது இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம்.

அது தொலைந்து விட்டால் கூட அதற்க்காக உட்கார்ந்து அழ மாட்டோம்.

நமது உடலையும் அது எதற்காக படைக்கப்பட்டுள்ளதோ அதற்காக பயன்படுத்துவதோடு திருப்தி அடைய வேண்டும். 

உடல் மீது பற்று இல்லாதவர்கள் அது வாழ்வதற்காக உண்பார்கள். 

பற்று உள்ளவர்கள் நாவின் சுவைக்காக உண்பார்கள்.

பற்று இல்லாதவர்கள் அன்று நமது முதல் பெற்றோர் எதற்காக உடை அணிந்தார்களோ அதற்காக மட்டும் அணிவர். 

பற்று உள்ளவர்கள் உடல் அலங்காரத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

கோவிலுக்கு வரும்போது அலங்கார உடை அணிந்து வருபவர்கள் 

மற்றவர்கள் திருப்பலியின் போது பீடத்தின் மேல் வைக்க வேண்டிய பார்வையை 

தங்கள் உடையை நோக்கி ஈர்ப்பார்கள்.

மற்றவர்களின் பார்வை சம்பந்தப்பட்ட பாவத்துக்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள்.

பணத்தின் மீது பற்று உள்ளவர்கள் பணத்தை பணத்திற்காகவே ஈட்டுவார்கள்.

கோடிக்கணக்காய் ஈட்டிய பின்பும் திருப்தி ஏற்படாது.

பற்று இல்லாதவர்கள் தேவைக்காக மட்டும் ஈட்டுவார்கள். 

விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது, 

விலை உயர்ந்த வாகனங்களில் பயணிப்பது, 

விலை உயர்ந்த உடைகளை உடுத்த்துவது,

சுவையுள்ள உணவை அளவுக்கு மீறி உண்பது 

போன்ற செயல்கள் ஊதாரித் தனத்தின் வெளிப்பாடு.

ஊதாரி மைந்தன் உவமைமையில் வரும் மைந்தன் ஊதாரித்தனமாக செலவழித்து தான் தந்தையின் சொத்தை காலி
செய்தான்.

உடமை பொருட்களின் மீது அளவுக்கு மீறிய பற்று வைத்திருப்பவனுக்கு இறைப் பற்று இருக்காது.

கடவுள் மீது பற்று உள்ளவர்களுக்கு உடமை பொருட்களின் மீது பற்று இருக்காது.

கடவுள் நமக்கு உலகைச் சார்ந்த பொருட்களைத் தந்திருப்பது நாம் மட்டும் பயன்படுத்துவதற்கு அல்ல, 

நமது அயலானோடு பகிர்ந்து கொள்வதற்கு. 

நாம் வாழும் நிலத்தில் கடவுள் மேட்டையும், பள்ளத்தையும் படைத்திருப்பது ஏன்?

நிலம் சமதளமாக இருந்தால் ஆறுகள் ஓடமுடியுமா?

ஆறுகள் ஓடாவிட்டால் நாடு எங்கும் செழிப்பாக இருக்க முடியுமா?

எங்கும் வெப்ப நிலை ஒரே மாதிரியாக இருந்தால் காற்று வீசாது, மேகம் பயணிக்காது, மழை பெய்யாது.

இயற்கை மூலம் இறைவன் நமக்குக் கற்பிக்கும் பாடம்

 ஏற்ற தாழ்வுகள் இருப்பதால் இயற்கை இயங்குவது போல,

மனிதர்களிலும் ஏற்ற தாழ்வுகள் இருப்பதால் தான் ஒருவருக்கொருவர் பிறரன்பை வெளிப்படுத்தி ஆன்மீகத்தில் வளர‌ முடிகிறது.

செல்வன்  இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனது பிறரன்பில் வளர்கிறான்.

இல்லாதவன் தனது ஏழ்மையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு உழைப்பின் மூலம் ஆன்மீகத்தில் வளர்கிறான்.

நமக்கு முன்மாதிரியாக இறை மகனே ஒரு ஏழைத் தாயின் வயிற்றில் மனுவுரு எடுத்து, ஏழைக் குழந்தையாய்ப்‌ பிறந்து ஏழையாகவே வளர்ந்து, ஏழைக் தச்சனாக உழைத்து வாழ்ந்தார்.

ஏழைகள் இயேசுவின் வாழ்க்கையை மனதில் இருத்தி வாழ்ந்தால் ஏழையாகப் பிறந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.

ஒன்றும் இல்லாதவன் எல்லாம் உடையவன்.

உலகெல்லாம் அவனுடையது தான், அவன் பற்றின்றி வாழ்கிறான்.

ஒரே வகை உணவை உண்பவன் செல்வந்தன்.

விதவிதமான உணவு உண்பவன் பிச்சைக் காரன்.

"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது."
(மத்தேயு நற்செய்தி 5:3)


உலகப் பொருள்களின் மீது பற்று இல்லாமல் வாழ்பவர்களுக்குதான் இறை அரசு உரியது.   

உலகப் பற்று இல்லாமல், இறைவனை மட்டும் பற்றிக் கொண்டு,

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு,

இயேசுவைப் பின்பற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment