Sunday, September 14, 2025

"இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்."(அரு.19:26)

"இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்."
(அரு.19:26)


இயேசு சிலுவையில்  அறையப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தபோது  

சிலுவை அருகில் 

இயேசுவின் தாயும், 

தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும்,

 மகதலா மரியாவும்

 அருளப்பரும் 

நின்று கொண்டிருந்தனர். 



இயேசு தம் தாயை நோக்கி  அருளப்பரைக் காண்பித்து  , "அம்மா, இவரே உம் மகன்" என்றார். 

பின்னர் அருளப்பரை நோக்கித் தன் தாயைக் காண்பித்து "இவரே உம் தாய்" என்றார். 

அந்நேரமுதல் அருளப்பர் அன்னை மரியாளைத் தம் வீட்டில் ஏற்றுக் கொண்டார்.

தனது 33 ஆண்டுகால வாழ்வில் 30 ஆண்டுகள்தான் தன் தாயுடன் நசரேத்தில் வாழ்ந்தார்.

மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது கலிலேயா, சமாரியா, யூதேயா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நற் செய்தியை அறிவித்தார்.

அவர் தங்குவதற்குத் தனியாக  சொந்த வீடு இல்லை.

"மனு மகனுக்குத் தலை சாய்க்கக்கூட இடமில்லை.''

கப்பர்நாகூம் வரும் போது இராயப்பரோடு அவருடைய மாமியார் வீட்டில் தங்குவார்.

அன்னை மரியாள் நாசரேத்தில் தனியாகத்தான் இருந்தாள்.

அவ்வப்போது இயேசு நற் செய்தியை அறிவித்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துச் செல்வாள்.

அவளது தங்கை மரியாளும் நசரேத்தில் இருந்தாள்.

 யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் தங்கை மரியாளின் பிள்ளைகள்.

அவர்களுள் யாக்கோபும், யூதாவும் இயேசுவின் சீடர்கள்.

 அன்னை மரியாளுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை.

அவள் முக்காலமும் கன்னி.

ஆகவேதான் இயேசு தன் மரண நேரத்தில் தன் தாயை அருளப்பரின் பொறுப்பில் ஒப்படைக்கிறார்.

அருளப்பர் சீடர்களின் சார்பாக அன்னை மரியாளைத் தாயாக ஏற்றுக் கொள்கிறார்.

இயேசு விண் எய்தியபின் அன்னை மரியாள் தான் சீடர்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தினார்.

தூய ஆவியின் வருகைக்குப் பின் சீடர்கள் உலகின் பல் வேறு பகுதிகளுக்குச் சென்று நற் செய்தியை அறிவித்தார்கள்.

அருளப்பர் இப்போது துருக்கி என்று அழைக்கப்படுகிற, சின்ன ஆசியாவில் உள்ள எபேசு நகரில் தங்கி நற் செய்தி அறிவித்தார்.

அன்னை மரியாள் தன் மரணம் வரை எபேசு நகரில்   அருளப்பரின் இல்லத்தில்தான் தங்கியிருந்தாள்.

புனித அருளப்பர்  தனது சொந்த நாட்டிலிருந்து  புறப்பட்டு, சுமார் 1800 கிலோமீட்டர் தூரம் பயணித்து
இன்றைய துருக்கியில் உள்ள எபேசு நகரில் நற்செய்தியை அறிவித்தார்.

இது அக்காலத்தில், போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த ஒரு காலத்தில், அவர் மேற்கொண்டது ஒரு மாபெரும் பயணமாகும். 

இது அவரது விசுவாசத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அன்னை மரியாளும் பிரயாணத்தின் கட்டங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு அருளப்பருடன் எபேசு நகருக்குச் சென்றிருக்கிறார்.

நாமும் இயேசுவின் சீடர்கள்தான். 

இயேசு தனது அன்னையை நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்.

ஆகவே நாமும் அன்னை மரியாளின் பிள்ளைகள் தான், 

அன்று இயேசுவின் 12 சீடர்களுக்கும் ஆன்மீகப் பாதையில் வழி காட்டியது போல அன்னை நமக்கும் வழி காட்டிக் கொண்டிருக்கிறார்.

நமக்கு எப்படி வழி காட்டுகிறார்?

அன்னையின் பக்தர்கள் அன்னையைப் பற்றித் தியானித்துக் கொண்டே செபித்தால் 

அவள் இயேசுவின் பாதையில் எப்படி நடந்தாள் என்பதை உணர்ந்து நாமும் அவ்வழி நடப்போம்.

செபமாலை செபிப்பதன் நோக்கமே 

கபிரியேல் தூதர் அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்ன வினாடியிலிருந்து 

அன்னை விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட் வினாடி வரை அன்னை ஆன்மீகப் பாதையில் எப்படி நடந்தாள் என்பதை உணர்ந்து நாமும் அவ்வழி நடப்பதுதான்.

முதல் பத்து மணித் தியானத்தின் போது அன்னை தன்னை எவ்வாறு இறைப்பணிக்கு அடிமையாக அர்ப்பணித்தாள் என்பதை உணர்வோம்.

இரண்டாவது பத்து மணித் தியானத்தின் போது அன்னை எப்படி பிறரன்புப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தாள் என்பதை உணர்வோம்.

மூன்றாவது பத்து மணித் தியானத்தின் போது ஒரு மாட்டுத் தொழுவத்தை ஒரு இரவு தங்குமிடமாக ஏற்றுக் கொண்ட தாழ்ச்சியை உணர்வோம். இயேசு அங்கேயே பிறந்தார்.

நான்காவது பத்து மணித் தியானத்தின் போது  மரியாள் தான் பெற்ற பிள்ளையைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதைத் தியானிக்கும் போது நமது பிள்ளைகளில் ஒன்றை இறைப்பணிக்கு அர்ப்பணிக்க ஆசை வர வேண்டும்.

ஐந்தாவது பத்து மணித் தியானத்தின் போது நாம் எப்போதும் இயேசுவைத் தேடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உதிக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பத்து மணித் தியானத்தின் போதும் அன்னையின் ஒரு பண்பு நம் மனதில் பதிந்து நம்மை வழி நடத்தும்.

அன்னையுடன் பயணித்தால் விண்ணக வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment