நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
(லூக்கா.8:15)
இயேசு நற் செய்தியை விதைக்கு ஒப்பிடுகிறார்.
மனித மனத்தை நிலத்துக்கு ஒப்பிடுகிறார்.
நற்செய்தி விதை முளைத்து வளர்ந்து பலன் தருவது அது விழும் மனித மனதின் தன்மையை பொறுத்தது.
நற்செய்தி நல்ல விதைதான்.
ஆனால் அது நமக்கு பயன் அளிக்க வேண்டும் என்றால் நமது மனது நல்ல மனதாக இருக்க வேண்டும்.
நல்ல மனது என்றால்?
லௌகீக எண்ணங்களாலும் ஆசைகளாலும் நிரம்பிய மனது நல்ல மனது அல்ல.
ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் மட்டுமே உதிக்கும் மனது நல்ல மனது.
லௌகீக மனதில் நற்செய்தி விதை விழுந்தால் உலகைச் சார்ந்த எண்ணங்கள் அது முளைத்து வளர விடாமல் அமுக்கி விடும்.
ஆன்மீக மனம் எப்போதும் இறைவனைச் சார்ந்த செய்திகளுக்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும்.
ஆன்மீக மனமுடையன் திருப்பலிக்குச் செல்லும்போது இன்று குருவானவர் இன்றைய நற்செய்தி வாசகத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்துச் செல்வான்.
குருவானவரின் நற்செய்தியைச் சார்ந்த மறையுறையைக் கூர்ந்து கவனிப்பான்.
கேட்ட விளக்கத்தை அன்று முழுவதும் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழ்ந்து கொண்டிருப்பான்.
"தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது."
(லூக்கா நற்செய்தி 14:27)
இந்த நற்செய்தி வசனத்திற்கான விளக்கத்தை திருப்பலியின் போது மறையுரையில் கேட்டான் என்று வைத்துக்கொள்வோம்
அன்று முழுவதும் தான் சந்திக்கும் அத்தனை துன்பங்களையும் சிலுவைகளாக ஏற்றுக்கொண்டு தனது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பான்.
உணவு நேரத்தில் அவன் எதிர்பார்க்கும் அளவுக்கு உணவில் ருசி இல்லை என்று வைத்துக் கொள்வோம்,
அவனது எதிர்பார்ப்புக்கு எதிராக இருப்பதால் அது ஒரு துன்பம் தான்.
அத்துன்பத்தை இயேசுவின் சிலுவைப் பாடுகளோடு ஒன்றித்து தனது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்பான்.
அலுவலகத்தில் அவனது கவனக்குறைவின் காரணமாக நிர்வாகியிடம் திட்டு வாங்க வேண்டியிருந்தது என்று வைத்துக் கொள்வோம்.
அதையும் சிலுவையாக ஏற்று இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விடுவான்.
ஒரு செயல் சிலுவையாக மாறுவதற்கு நோய் நொடிகள், வலிகள், வேதனைகள் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
அவையும் சிலுவை தான்.
நமது விருப்பத்திற்கு மாறாக ஏதாவது ஒரு சிறிய நிகழ்வு நடந்தால் கூட அதை சிலுவையாக மாற்றிக் கொள்ளலாம்.
தந்தையிடமிருந்து எதிர் பார்த்துக் கொண்டிருந்த கடிதம் வரவில்லை.
அதனால் ஏற்படும் சிறிய வருத்தத்தை சிலுவையாக மாற்றி இறைவனுக்கு ஒப்பு கொடுத்து விடலாம்.
"உன் பகைவனை நேசி, உனக்குத் தீமை செய்தவனுக்கு நன்மை செய்."
இது மனதில் விழுந்த நற்செய்தி விதை என்று வைத்துக் கொள்வோம்.
அதற்காக பகைவனையும் தீமை செய்தவனையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
யாரும் நமக்குத் தெரியாமலேயே நமக்கு ஏதாவது தீங்கு செய்திருக்கலாம்.
ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் முகமலர்ச்சியோடு பழகி, அனைவருக்கும் நன்மை செய்தால் நாம் நற்செய்தியை வாழ்வாக்குகிறோம்.
"அனைவருக்கும்" என்று சொல்லும் போது தீமை செய்தவர்களும் அதற்கு அடங்கி விடுகிறார்கள்.
நற்செய்தி விதைக்கு ஏற்ற நல்ல நிலமாக நமது மனதை பேண வேண்டியது நம்முடைய கடமை.
ஆன்மீக வாழ்வுக்கு எதிரான அத்தனை பற்றுகளும் நமது மனதை பாதிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும்.
விவசாயி நிலத்தில் களை முளைக்காமல் பார்த்துக் கொண்டாலே விவசாயப் பயிர் நன்கு வளர்ந்து பலன் தரும்.
நமது மனதை நல்ல விளை நிலமாகப் பேணிக் காப்போம்.
நற் செய்திப் பயிர் செழித்து வளர்ந்து மிகுந்த பலன் தரும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment