Saturday, September 13, 2025

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (அரு.3:16)



தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். 
(அரு.3:16)

அளவு கடந்த அன்பு கடவுளின் இயல்பு.

எதிர் எதிரான இரண்டு பண்புகள் கடவுளிடம் இருக்க முடியாது.

வெறுப்பு  அன்புக்கு எதிரான பண்பு.

ஒருவரை  நேசித்துக் கொண்டே வெறுக்க முடியாது.

கடவுள் அன்பால் நிறைந்தவர்.
God is full of love.

தண்ணீரால் நிறைந்த ஒரு பாத்திரத்தில் வேறு எதுவுக்கும் இடமில்லை.

அவரோடு என்றென்றும் ஒன்றித்து பேரின்ப வாழ்வு வாழவே கடவுள் மனிதனைப் படைத்தார்.

கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்.

அவனோடு தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பகிர்ந்து கொண்டுள்ள பண்புகளில் ஒன்று பரிபூரண சுதந்திரம்.

ஆகவே கடவுளைத் தேர்வு செய்யவோ, வேண்டாமென்று தள்ளவோ அவனுக்கு பரிபூரண சுதந்திரம் உண்டு.

கடவுளைத் தேர்வு செய்வது மோட்சம். வேண்டாம் என்று தள்ளுவது நரகம்.

நமது முதல் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து நிலை வாழ்வு பெறும் தகுதியை இழந்தனர்.

ஆனாலும் அளவு கடந்த அன்பு நிறைந்த கடவுள் மனிதன் இழந்த தகுதியை மீட்டுக் கொடுக்க தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

மனிதனாகப் பிறந்த இறைமகன் தனது சிலுவை மரணத்தின் மூலம் இழந்த தகுதியை மீண்டும் பெற,

அதாவது பாவத்திலிருந்து மீட்புப் பெற, வழி வகுத்தார்.


தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 


அந்த மகனையே தந்தை சிலுவை மரணத்துக்குக் கையளித்தார்.

அந்த அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

பாவத்தின் விளைவு மரணம், ஆன்மீக மரணம்.

பாவத்தின் விளைவாக ஆன்மா மரணிக்கிறது, அதாவது நிலை வாழ்வை இழக்கிறது.

இறை மகன் தனது மரணத்தின் மூலம் நமது ஆன்மீக மரணத்தை வென்றார்.

நாம் நிலை வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும்?

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு நமது மீட்பராக ஒரு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொண்டு அவர் காட்டும் வழி நடக்க வேண்டும்.

இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும்,

இயேசு உலகிற்கு வந்தது நம்மை மீட்க, நமக்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல.

இதை இயேசுவே சொல்கிறார்,


"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
(அரு.3:17)

ஆசிரியர் வகுப்புக்கு வருவது மாணவனுக்கு கல்வி அறிவு புகட்ட, அவனை Fail ஆக்க அல்ல.

தேர்வில் எழுதியுள்ள பதில்கள் சரியாக இருந்தால் ஆசிரியர் மதிப்பெண் கொடுப்பார்.

தவறாக இருந்தால் மதிப்பெண் கொடுக்க மாட்டார்.

போதிய மதிப்பெண் கிடைத்தால் மாணவன் வெற்றி பெறுவான்,

கிடைக்காவிட்டால் தோல்வி அடைவான்.

மாணவனது தோல்விக்குக் காரணம் மாணவன்தான், ஆசிரியர் அல்ல.

ஏனெனில் பதில்கள் அவனுடையவை. அவைதான் ஆசிரியர் தரும் மதிப்பெண்களைத் தீர்மானிக்கின்றன.

அதேபோல்தான் நாம் செய்யும் பாவ, புண்ணியங்கள்தான் நமது எதிர்கால நித்திய வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

நாம் நித்திய காலமும் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோமா, அல்லது அவரின்றி வாழ்வோமா என்பதை நமது வாழ்வுதான் தீர்மானிக்கிறது.

கடவுள் மதிப்பெண் போடும் ஆசிரியர் மாதிரிதான்.

நமது வாழ்வு நற்செயல்களால் மட்டும் நிறைந்திருந்தால் அவரால் நித்திய பேரின்ப மதிப்பெண்களைக் கொடுப்பார்.

சர்வ வல்லப கடவுளால் முடியாத சில காரியங்களும் இருக்கின்றன.

அவரால் மாற முடியாது.
துன்பப்பட முடியாது.
சாக முடியாது.
யாரையும் வெறுக்க முடியாது.
தங்கள் பாவங்களுக்காக உத்தம மனத்தாபப்படுவோரை அவரால் மன்னியாமலிருக்க முடியாது.
ஒரே வரியில் அவரது பண்புகளுக்கு எதிராக அவரால் செயல்பட முடியாது.

தேவ சுபாவத்தில் அவரால் துன்பப்படவும், மரிக்கவும் முடியாத காரணத்தால் தான் அவர் நமது பாவங்களுக்குத் துன்பப்பட்டு மரித்துப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்தார்.

அதாவது மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

இயேசு தேவ சுபாவமும் மனித சுபாவமும் கொண்ட கடவுள்.

கடவுளாகிய இயேசு தனது மனித சுபாவத்தில்தான் பாடுகள் பட்டு மரித்தார்.

மனித சுபாவத்திலும் அவர் கடவுள் தான்.
   
ஆகவே தான் அவர் "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, 

 அதை மீட்கவே  உலகிற்கு வந்தார்."

இறைவனின் அன்புக்குத் தண்டிக்கத் தெரியாது,

மன்னித்து ஏற்றுக் கொள்ளவே தெரியும்.

ஆகவே நமது பாவங்களுக்காக உத்தம மனத்தாபப்பட்டு மன்னிப்பு கேட்போம்.

உறுதியாக மன்னிக்கப்படுவோம். 

விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவோம்.

இறை மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழிய மாட்டார்,

 நிலைவாழ்வு பெறுவார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment