"நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?"
(லூக்கா.6:46)
சிலர் நினைக்கிறார்கள் காலை, மாலை செபம் சொல்லுதல்,
திவ்ய நற்கருணையைச் சந்தித்தல்,
திருப்பலிக்குச் செல்லுதல், திரு விருந்து அருந்துதல் ஆகியவற்றில் மட்டும் கிறித்தவனாக வாழ்வது அடங்கியிருக்கிறது என்று.
நமது இந்த ஆன்மீக செயல்பாடுகளில் இயேசுவை நோக்கி,
"ஆண்டவரே, ஆண்டவரே" எனக் கூப்பிட்டு நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.
இயேசு நாம் அவரை "ஆண்டவரே, ஆண்டவரே" என்று அழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?"
என்று தான் கேட்கிறார்.
அவர் சொல்பவற்றைச் செய்து கொண்டு அவரை "ஆண்டவரே" என்று அழைத்து மன்றாட வேண்டும்.
அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்?
இறைவனையும் நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.
நேசித்துக்கொண்டு மற்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
இறைவனை நேசித்தால் அவருக்கு எதிராகப் பாவங்கள் செய்ய மாட்டோம்.
அயலானை நேசித்தால் அவனுக்கு தேவைப்படும்போது உதவி செய்வோம்.
பாவங்களைப் பற்றியும் பிறரன்புப் பணிகளைப் பற்றியும் கவலைப்படாமல்
காலை மாலை செபத்திலும் மற்ற பக்தி முயற்சிகளிலும் மட்டும் ஆர்வம் காட்டினால்
அந்த ஆர்வத்தினால் ஆன்மீக ரீதியாக எந்த பயனும் இல்லை.
கணவனும் மனைவியும் அதி காலையில் எழுந்து சண்டை போட்டுக் கொண்டே திருப்பலிக்குச் சென்றால் சமாதானம் இல்லாமல் ஒப்புக் கொடுக்கப்படும் பலியை தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சமாதான குறைவு காரணமாக குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே காலை மாலை செபம் சொன்னால் அந்த செபம் கேட்கப்பட மாட்டாது.
ஆன்மீக வாழ்வுக்கு அன்பு தான் உயிர்.
அன்பு இல்லாத ஆன்மீகம் உயிரில்லாத ஆன்மீகம்.
அது ஆன்மீகமே அல்ல.
கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது.
சாத்தானும் கூட அதை ஏற்றுக் கொள்கிறது.
கடவுளை அன்பு செய்ய வேண்டும். நமது அன்பு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதில் பிரதிபலிக்க வேண்டும்.
பெற்ற தந்தையையும் தாயையும் மதிக்க வேண்டும் என்பது கடவுளின் கட்டளை.
பெற்றோருக்கு உண்ண உணவு கூட கொடுக்காத மகன் இயேசுவின் திருவிருந்தை அருந்தி என்ன பயன்?
பசித்திருக்கும் அயலானுக்கு உணவு கொடுக்காதவன் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு என்ன பயன்?
திருவிழா கொண்டாடுபவர்கள் வரி போடும்போதும் சண்டை, வரி பிரிக்கும் போதும் சண்டை,
திருவிழா கொண்டாட்டத்தில் போட்டி, வரவு செலவு முடிக்கும் போதும் சண்டை,
இதற்கிடையில் கொண்டாடப்படும் திருவிழா ஆண்டவருக்குப் பிடித்தமானதாக இருக்காது.
அன்பு இருக்கும் இடத்தில் சமாதானம் இருக்கும். போட்டி இருக்காது.
சமாதானமாக செய்யப்படும் வழிபாடு தான் இறைவனுக்கு ஏற்றது.
காலை மாலை செபம் சொல்ல வேண்டும்,
திருப்பலியில் கலந்து, திருவிருந்து அருந்த வேண்டும்,
திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்,
இவற்றையெல்லாம் இறையன்புடனும் பிறர் அன்புடனும் செய்ய வேண்டும்.
அன்பு இன்றி அனைத்தும் வீண்.
"நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
(1 கொரிந்தியர் 13:1-3)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment