"இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்."
(லூக்கா நற்செய்தி 6:21)
அழுதுகொண்டிருப்போர் யார்?
யாருக்கு அழுகை வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரும்.
எப்போது வரும்?
மனம் அல்லது உடல் சார்ந்த ஏதாவது வலி ஏற்படும் போது அழுகை வரும்.
நம்மைப் பேறுபெற்றோர் ஆக்கக்கூடிய அளவுக்கு வரக்கூடிய வலிகளைப் பற்றித் தியானிப்போம்.
மனம் சார்ந்த வலிகள்:
பாவம் செய்தவர்கள் இறைவனின் அன்பைப் பற்றித் தியானிக்கும்போது
"நம் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து விட்டோமே" என்று வருந்தும் போது மனதில் ஏற்படும் வலியை உத்தம மனத்தாபம் என்கிறோம்.
உத்தம மனத்தாபப்படுவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
உத்தம மனத்தாபப்பட்டு அழுபவர்கள் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் விண்ணகத்தில் சிரித்து மகிழ்வார்கள்.
இவ்வுலகில் அழுகைக்கும், மறுவுலகில் சிரிப்புக்கும் காரணமாக இருப்பது நமது உத்தம மனத்தாப அழுகை.
உலகில், குறிப்பாக வேத போதக நாடுகளில், நற் செய்தியை ஏற்று, கிறித்தவர்களாக, இயேசுவுக்காக வாழும் இறைமக்களை
பிற மதத்தவர் படுத்தும் பாட்டினால் கிறித்தவர்களின் மனதில் ஏற்படும் வலி, அதன் விளைவாக ஏற்படும் அழுகை ஆகியவற்றை இயேசுவுக்காக ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்.
அவர்களுடைய அழுகையும் விண்ணகத்தில் மகிழ்ச்சியாக மாறும்.
ஏழ்மை,
நோய் நொடிகள்
வறுமை,
பசி,
விபத்துக்கள்
போன்றவற்றால் ஏற்படும் துயரங்கள்,
இன்னும் பல துன்பங்களால்
கண்ணீர் விடுபவர்கள்
இவற்றைச் சிலுவைகளாக ஏற்று, தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்பவர்களது அழுகையும் விண்ணுலகில் மகிழ்ச்சியாக மாறும்.
நாம் கண்ணீர் விடுவதற்காகப் படைக்கப் படவில்லை.
நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.
நாம் வாழும் உலகம் நித்திய பேரின்ப வீட்டுக்குப் போவதற்கான பாதைதான்.
பாதையில் என்ன நடந்தாலும் நிரந்தரம் அல்ல.
உலகே தற்காலிகமானதுதான்.
தற்காலிகமாக நடப்பவற்றை பேரின்ப வாழ்வை நோக்கி பயணிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்பமோ துன்பமோ,
இலாபமோ நட்டமோ
வருகின்றவை அனைத்தையும்
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம்.
நித்திய பேரின்பத்தைப் பரிசாகப் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment