இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,
(லூக்கா நற்செய்தி 9:51)
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் எது?
இயேசுவுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் அவர்களுடைய ஆன்மா சரீரத்தை விட்டுப் பிரியும் நாள் தான் விண்ணேற்றம் அடையும் நாள்.
மனிதனின் ஆன்மா உடலோடு இருக்கும் போது அது மண்ணுலகில் இருக்கிறது.
அது உடலை விட்டுப் பிரிந்தவுடனே உடல் மண்ணுக்கும்,
ஆன்மா விண்ணுக்கும் போகும்.
அப்படியானால் புனித வெள்ளி தான் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள்.
புனித வெள்ளி இயேசுவின் மரணநாள்.
வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு இயேசு மரித்த வினாடியில்
அவரது ஆன்மா பாதாளங்களில் இறங்கி
அங்கு மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்.
இயேசுவோடு மரித்த நல்ல கள்ளனும் அவரோடு விண்ணகம் அடைந்தார்.
(அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.)
(லூக்கா நற்செய்தி 23:43)
புனித வியாழன் இறுதி இரவு உணவு நாள்.
புனித வெள்ளி மரண நாள்.
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,
இறுதி இரவு உணவிற்கு (Last Supper) இடம் ஏற்பாடு செய்வதற்காக தமக்கு முன் தூதர்களை அனுப்பினார்.
அவர்கள் சமாரியருடைய ஓர் ஊர் வழியாகப் போகத் தீர்மானித்தார்கள்.
ஆனால் சமாரியர்கள் அவ்வழியே செல்ல அனுமதிக்கவில்லை.
ஆகவே வேறோரு ஊர் வழியாக எருசலேமுக்குச் சென்றார்கள்.
சமாரியர்களுக்கு எருசலேமைப் பிடிக்காது.
சமாரியர் கலப்பின யூதர்கள்.
சமாரியர்கள் யோசேப்பின் பிள்ளைகளான எப்பிராயீம் (Ephraim) மற்றும் மனாசே (Manasseh) ஆகிய கோத்திரங்களின் நேரடி வம்சாவளியினர்.
அசீரிய படையெடுப்பின் போது
இவர்களுக்கும் அசீரியர்களுக்கும் ஏற்பட்ட திருமண உறவின் காரணமாக பிறந்த கலப்பின மக்கள் இவர்கள்.
இவர்கள் எருசலேம் ஆலயத்திற்குச் செல்லவில்லை.
கெரிசிம் மலையில் (Mount Gerizim) வழிபாடு செய்தார்கள்.
இவர்களும் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தார்கள்.
முன்பு ஒரு முறை இயேசு ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டபோது
அவள் இயேசுவிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்று சொன்னாள்.
"உம்மோடு பேசும் நானே அவர்" என்று இயேசு சொன்னார்.
அதன்பிறகு இயேசு சமாரியாவில் நற் செய்தி அறிவித்தார்.
ஆனால் இறுதி இரவு உணவுக்காக எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சமாரியா ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் கோபமுற்ற யாக்கோபும் யோவானும் "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள்.
இது அவர்கள் ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி அடையவில்லை என்பதைக் காட்டுகிறது.
இரக்கம் உள்ள இயேசு
அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.
இயேசு சமாரிய மக்களையும் நேசித்தார். அவர்களுக்காகவும் தான் அவர் பாடுகள் பட்டு மரிக்கப் போகிறார்.
அதனால் தான் சமாரியாவை அழிக்க விரும்பிய அருளப்பரையும் யாக்கோபையும் அவர் கடிந்து கொண்டார்.
இது இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம்.
நாம் பகைவர்களையும் மன்னிக்க வேண்டும்.
அவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் அழிந்து போக நாம் ஆசைப்படக்கூடாது.
அவர்களும் வாழ வேண்டும்.
இப்போது கட்டுரையின் தலைப்பில் உள்ள விண்ணேற்றம் என்பது பற்றி சிறிது தியானிப்போம்.
இயேசுவின் விண்ணேற்ற விழாவை அவர் உயிர்த்த 40வது நாள் கொண்டாடுகிறோம்.
40 நாட்கள் அவ்வப்போது சீடர்களுக்குக் காட்சி கொடுத்த இயேசு அதற்குப் பிறகு காட்சி கொடுக்கவில்லை என்பதையே இந்த விழா குறிக்கிறது.
ஆனால் அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது,
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று கூறிய வினாடி இயேசுவின் ஆன்மா விண்ணகத் தந்தையிடம் சென்று விட்டது.
விண்ணகம் எங்கு இருக்கிறது?
எங்கு என்ற வினாச் சொல் லௌகீக உலகில் ஒரு இடம் எங்கு இருக்கிறது என்பதைப் பற்றி அறிய, கேட்கப் பயன்படுத்தப்படுகிறது.
இது முழுக்க முழுக்க மண்ணுலகைச் சார்ந்த சொல்.
நம்மிடம் வேறு சொல் இல்லாததால் விண்ணுலகைப் பற்றி அறியவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்திகிறோம்.
விண்ணுலகம் இடம், காலத்துக்கு அப்பாற்பட்டது.
கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற உண்மையை நமது லௌகீகப் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது.
உலகம் சடப் பொருளால் ஆனது.
சடப் பொருள் இடத்தை அடைக்கும் தன்மை கொண்டது.
ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு பொருள் இருக்க முடியாது.
கடவுள் சடப்பொருள் அல்ல, ஆவி.
ஆவி இருக்க இடம் தேவையில்லை.
அப்படியானால் கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?
கடவுள் தனது வல்லமையால் எங்கும் இருக்கிறார்.
பிரபஞ்சம் முழுவதும் அவரது வல்லமைக்கு உட்பட்டது.
அவரன்றி சடப் பொருளாகிய ஒரு அணுவும் அசையாது.
நமது ஆன்மாவைப் போலவே இயேசுவின் ஆன்மாவும் ஆவி.
ஏற்றம் என்றால் ஏறிச் செல்வது.
விண்ணேற்றம் என்றால் விண்ணுக்கு ஏறிச் செல்வது.
நமது மொழியில் சடப் பொருள்தான் ஏறிச் செல்ல முடியும்.
இயேசுவின் ஆன்மா எப்படி ஏற முடியும்?
இது லௌகீக மொழியை ஆன்மீகம் பற்றி பேச பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்.
நாம் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விண்ணகம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.
மனிதர்களாகிய நாம் மரிக்கும் போது நமது ஆன்மா விண்ணக நிலையை அடைகிறது.
இயேசு மரித்த உடனே அவரது ஆன்மா விண்ணக நிலையை அடைந்தது.
இயேசு மூன்றாம் நாள் உயிர்க்கும் போது ஆவியின் நிலையை (Spiritualized body) அடைந்த உடலோடு உயிர்த்தார்.
நாற்பது நாட்கள் சீடர்களுக்குக் காட்சி கொடுத்த போதும் விண்ணக நிலையில் தான் காட்சி கொடுத்தார், அன்னை மரியாள் வேளாங்கண்ணியில் காட்சி கொடுத்தது போல.
இயேசுவைப் போலவே நாம் மரிக்கும்போதும் நமது ஆன்மா மட்டும் விண்ணக நிலையை அடையும்.
உலகின் இறுதி நாளில் ஆவி நிலையில் உள்ள உடலோடு உயிர்ப்போம்.
விண்ணகத்தில் நமது ஆன்மாவும், உடலும் வாழ இடம் தேவையில்லை.
இயேசுவுடன் நித்திய நிலைவாழ்வு வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment