அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
(லூக்கா நற்செய்தி 16:25)
செல்வர், ஏழை இலாசர் உவமையில் இயேசு ஏழைகள் மீது இரக்கம் இன்றி தன் சிற்றின்ப வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் செல்வந்தனுக்கும்,
துன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழும் ஏழைக்கும்
மறுவுலகில் எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்று தெளிவுபடுத்துகிறார்.
உவமையில் செல்வந்தன் செய்த பாவங்களையோ, ஏழை செய்த புண்ணியங்களையோ இயேசு குறிப்பிடவில்லை.
"செல்வர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
ஏழை இலாசர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.
செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளைத் தின்று பசியாற விரும்பினார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை.
ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
செல்வர் இறந்தார். அவர்
பாதாளத்தில் வதைக்கப் பட்டார். அதுவே அவருக்கு நிரந்தரமாகிவிட்டது.
இந்த உவமையினால் இயேசு சொல்லித் தரும் பாடம்,
உலகில் செல்வம் மிகுதியால் உண்டு குடித்து அதனால் கிடைக்கும் சிற்றின்பத்தில் மட்டும் மூழ்கி இருப்பவர்களுக்கு ஆன்மீக வாழ்வில் ஆர்வம் இருக்காது.
லௌகீக வாழ்வில் மட்டும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விண்ணுலக வாழ்வு சாத்தியமில்லை.
ஆனால் ஏழ்மையிலும் பாவம் செய்யாமல் வாழ்ந்து தங்கள் ஏழ்மையை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறவர்களுக்கு விண்ணுலக நிலை வாழ்வு உறுதி.
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
(மத்தேயு நற்செய்தி 5:3)
செல்வர் நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
ஆனால் மிகுதியான உடைமைக்குச் சொந்தமான அவர் தனது உணவை பசியோடு இருந்த ஒரு ஏழையோடு பகிர்ந்து கொள்ளவில்லை.
பகிர்ந்து கொண்டிருந்தால் அது கடவுளோடு பகிர்ந்து கொண்டதாக இருந்திருக்கும்.
உறுதியாக அவருக்கு ஆபிரகாம் மடியில் இடம் கிடைத்திருக்கும்.
அவரிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்வோம்.
நம்மிடம் என்ன இருந்தாலும் அது கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதே.
கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட எதுவும் நமது பயன்பாட்டுக்காக மட்டுமல்ல.
நமது அயலானோடு பகிர்ந்து கொள்ளவும் தான்.
நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை.
நமக்கு பசிக்கும் போது நமக்கு நாமே உணவு கொடுக்க ஆசைப்படுகிறோம்.
அப்படியானால் நமது அயலானுக்குப் பசிக்கும் போது அவனுக்கு நாமே உணவு கொடுக்க நாம் ஆசைப்பட வேண்டும்.
அந்த ஆசை வந்தால்தான் நாம் நமது அயலானை நேசிக்கிறோம் என்று அர்த்தம்.
அந்த ஆசை வந்தால் நம்மால் தனியாகச் சாப்பிட முடியாது.
அப்படிப் பகிர்ந்து உண்ணாமல் தாங்களாகவே அவ்வளவையும் சாப்பிடுகிறவர்கள் உவமையில் வரும் செல்வனை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஏழை இலாசரிடமிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?
ஏழ்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழ்மையால் வரும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வதோடு அவற்றை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இருக்கிறவன் இருப்பதைக் காணிக்கையாகக் கொடுக்கிறான்.
இல்லாதவன் இல்லாமையைக்
காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.
கடவுள் விரும்புவது நாம் கொடுக்கும் பொருளை அல்ல,
கொடுக்கிற மனதை.
இறைவனுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்க வேண்டும்.
இயேசுவின் திரு விருந்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதற்காக ஆசைப்படுவதை "ஆசை நன்மை" (Spiritual Communion) என்போம்.
இப்போது ஒரு கேள்வி எழும். உவமையைக் கூறிய இயேசு
செல்வருக்குப் பெயர் கொடுக்காமல்
ஏழைக்கு ஏன் இலாசர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்?
"லேசரஸ்" (Lazarus) என்ற சொல்லுக்கு "கடவுள் என் உதவி" என்பது பொருள்.
எபிரேய மொழியில், 'எல்' (El) என்றால் 'கடவுள்' என்றும், 'அசார்' (azar) என்றால் 'உதவி' என்று பொருள்.
ஏழைகள் தாங்கள் ஏழ்மையோடு இருப்பதற்காக வருந்தக் கூடாது, மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதை வலியுறுத்த
ஏழைக்கு "கடவுள் என் உதவி" என்ற பொருளில் இலாசர் என்ற பெயரைக் கொடுத்தார்.
செல்வர் பணம் உள்ளவர், அவ்வளவு தான்.
தங்களிடம் உள்ள பற்றை அவர்கள் விட்டு விட்டால் அவர்கள் ஏழையரின் உள்ளத்தோராக (Poor in spirit),
அதாவது கடவுளின் உதவியைப் பெற்றவர்களாக மாறி விடுவார்கள்.
கடவுள் ஏழைகள் பற்றிய தனது கருத்தை நமக்குப் புரிய வைக்கவே
செல்வருக்குப் பெயர் கொடுக்காமல் ஏழைக்கு இலாசர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்.
நம்மிடம் செல்வம் இருந்தாலும் அதன் மேல் பற்று இல்லாமல்
எளிய மனத்தவராய்
இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம்.
நமது இறைவனோடு ஒன்றித்து வாழும் நித்திய பேரின்ப வாழ்வு உறுதி.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment