''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு."
(மத்தேயு நற்செய்தி 1:16)
மத்தேயு எழுதியிருப்பது இயேசுவின் மூதாதையர் பட்டியல்.
ஆனால் ஆபிரகாம் வழியில் ஆண் வழியில் இயேசுவின் உடனடி மூதாதையர் யாரும் இல்லை.
ஏனென்றால் யோசேப்பு இயேசுக்குத் தந்தை இல்லை.
"எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு.
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
(மத்தேயு நற்செய்தி 1:15,16)
மாத்தானின் மகன் யாக்கோபு என்று சொன்னவர், யாக்கோபின் மகன் யோசேப்பு என்று சொல்லவில்லை.
மரியாவின் கணவர் யோசேப்பு என்று சொல்கிறார்.
ஏன்?
மத்தேயு எழுதுவது புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்.
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சேர்ந்தது தான் பைபிள்.
மூதாதையர் பட்டியல் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இணைப்பைக் கொடுக்கிறது.
பட்டியல்படி பழைய ஏற்பாட்டின் இறுதி நபர் யோசேப்பு.
ஆனால் புதிய ஏற்பாடும் யோசேப்புடன்தான் ஆரம்பிக்கிறது.
"இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்;
அவருடைய (இயேசுவுடைய) தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்தத் திருமண ஒப்பந்தம் தான் புதிய ஏற்பாட்டின் ஆரம்பம்.
ஆனால் புதிய ஏற்பாட்டின் முதல் நபர் மரியாள் தான், ஏனெனில் இயேசுவைப் பெற்றவள் மரியாள்.
ஆனால் மரியாளின் தந்தையின் பெயரை மத்தேயு குறிப்பிடவில்லை.
மரியாளின் கணவர் பெயரைக் குறிப்பிடுகிறார்.
பழைய ஏற்பாட்டின் கடைசி நபர் யார்?
பட்டியல் படி யோசேப்பு.
ஆனால் அவர் புதிய ஏற்பாட்டின் முதல் நபராகிய மரியாளின் கணவர்.
மரியாள் யோசேப்போடு திருமண ஒப்பந்தத்தில் இணைந்திருப்பவர்.
ஆகவே புதிய ஏற்பாட்டைப் பழைய ஏற்பாட்டோடு இணைப்பவர் யோசேப்பு.
இப்போ ஒரு உண்மை மனதில் எழும்.
யோசேப்பு, மரியாள், இயேசு மூவரும் அடங்கிய திருக்குடும்பம் தான் புதிய ஏற்பாட்டின் ஆரம்பம்.
இந்த உண்மையை நம் மனதில் பதிய வைக்கவே
மத்தேயு மரியாவின் கணவர் யோசேப்பு என்று சொல்கிறார்.
புதிய ஏற்பாட்டின் ஆரம்பம் திருக்குடும்பம் என்று நம் மனதில் பதிய வைப்பதில் என்ன ஆன்மீக பயன் இருக்கிறது?
அதைக் கொஞ்சம் தியானிப்போம்.
பழைய ஏற்பாட்டின் ஆரம்பமும் ஒரு குடும்பம் தான்.
ஆனால் பாவம் செய்த குடும்பம்.
பாவம் செய்த குடும்பத்தின் வாரிசுகளைப் பாவத்திலிருந்து மீட்டது ஒரு குடும்பத்தோடு ஆரம்பிக்கிறது.
அது திருக்குடும்பம்.
குடும்பத் தலைவர் ஒரு நேர்மையாளர்.
தலைவி பாவ மாசின்றி உற்பவித்தவள்.
மகன் கடவுள்.
நாம் உடல் ரீதியாக பாவம் செய்த குடும்பத்தின் பிள்ளைகள்.
ஆன்மீக ரீதியாக திருக்குடும்பத்தின் பிள்ளைகள்.
இந்த உண்மையை உணர்ந்து
யோசேப்பின் பாதுகாப்பில், மரியாளின் பிள்ளைகளாய், மகன் இயேசுவால் மீட்கப்படுவோம்.
திருக்குடும்பத்தைப் போல் வாழ்வோம்.
திருக்குடும்பத்தைப் போல மகிழ்ச்சியான வாழ்வது எப்படி?
திருக்குடும்பத்தினர் ஏழைகளாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
தலைவர் யோசேப்பு ஒரு ஏழைத் தச்சன்.
அவரது வளர்ப்பு மகன் இறைமகன் என்று அவருக்குத் தெரியும்.
ஆனால் அவரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.
தச்சு வேலை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தினார்.
இயேசுவும் தச்சு வேலை தான் செய்தார்.
சர்வ வல்லபரான கடவுள் தச்சு வேலை செய்து
தான் வாழ்ந்த குடும்பத்துக்கு உணவளித்தார்.
பொது வாழ்வின் போது ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர்
திருக்குடும்பத்தில் வாழ்ந்த போது எந்த வேலையும் செய்யாமல் குடும்பத்துக்கு உணவளித்திருக்க முடியும்.
ஆனால் யோசேப்பும், அவரும் கட்டப்பட்டு உழைத்துக் கொடுத்ததைக் கொண்டு அன்னை மரியாள் சமைத்துக் கொடுத்தாள்.
இயேசு கடவுள். நினைத்த இடத்திற்கு நினைத்தவுடன் செல்லக் கூடிய வல்லமை உள்ளவர்.
ஆனால் நாசரேத்திலிருந்து எருசலேம் ஆலயத்திற்கு நடந்து தான் சென்றார்கள்.
கடவுளாகிய இயேசு பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த இயேசு யோசேப்புக்கு மரணம் வந்தபோது அவரைக் காப்பாற்றவில்லை.
யோசேப்பு மரணம் அடைய வேண்டும் என்பதும், மரியாள் விதவையாய் வாழ வேண்டும் என்பதும் அவருடைய சித்தம்.
இறைவன் சித்தப்படிதான் திருக்குடும்பம் வாழ்ந்தது.
ஆன்மீக வாழ்வில் திருக் குடும்பம்தான் நமது குடும்பங்களுக்கு முன்மாதிரிகை.
திருக்குடும்பத்தைப் பின்பற்றி நாம் ஏழ்மையை நேசிப்போம்.
உழைத்து வாழ்வோம்.
நமது மூத்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.
இறைவன் சித்தப்படி வாழ்வோம்.
நாமும் திருக் குடும்பமாக வாழ்வோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இயேசு குருவானவர் உருவத்தில் பிறக்க வேண்டும்.
நமது குடும்பம் தான் குருத்துவத்தின் நாற்றங்கால்.
நமது குடும்பமாகிய நாற்றங்காலிலிருந்து பறிக்கப் படும் நாற்றுகள் தான் குருமடங்களில் நடப்படுகின்றன.
ஆகவே நாம் நமது நாற்றங்கால்களை இறைவன் சித்தப்படி பராமரிப்போம்.
விவசாயிகளுக்குத் தெரியும் நல்ல நாற்றுகள்தான் நல்ல விளைச்சலைத் தரும்.
நாற்றுகளை இறையன்பிலும், பிறர் அன்பிலும் வளர்ப்போம்.
திருச்சபையின் வளர்ச்சி குடும்பங்கள் கையில் தான் இருக்கிறது.
திருச்சபையின் ஆரம்பம் திருக்குடும்பத்தில் வளர்ந்த இயேசுவால்.
திருச்சபையின் வளர்ச்சி நம் குடும்பத்தில் வளரும் இயேசுக்களால்.
நாம் நித்திய காலம் வாழப் போவதும் பரிசுத்த தம திரித்துவமாகிய திருக் குடும்பத்தோடு தான்.
தம திரித்துவமும் ஒரு குடும்பம் தான்.
தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் ஒருவரோடொருவர் ஒன்றித்து ஒரே கடவுளாய் வாழும் குடும்பம்.
நாம் பரிசுத்த தம திரித்துவத்தோடு முடிவில்லா காலமும் ஒன்றித்து வாழ்வதே மோட்சம்.
மோட்சத்தில் அனைவரும் இறைவனோடு ஒன்றித்து ஒரே குடும்பமாய் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment