இன்று ஆசிரியர் தினம்.
யார் இந்த ஆசிரியர்?
விண்ணில் வாழும் கடவுள் நம்மைப் படைத்து மண்ணில் வாழும் நமது தாய் மூலமாக உலகுக்கு அனுப்புகிறார்.
தாய் கடவுளிடமிருந்து பெற்ற குழந்தையை வளர்ப்பதற்காகத் தந்தையிடம் ஒப்படைக்கிறார்.
தந்தை தான் வளர்த்த குழந்தையை ஆன்மீக ரீதியாக உருவாக்க ஆசிரியரிடம் ஒப்படைக்கிறார்.
ஆசிரியர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை ஆன்மீகத்தில் உருவாக்கி கடவுளுக்கு ஏற்றவராக மாற்றுகிறார்.
ஆன்மீகத்தில் வளரச்சி அடைந்த குழந்தை கடவுளை அடைகிறது.
அதோடு வாழ்க்கைச் சுற்று பூர்த்தி அடைகிறது.
கடவுளிடமிருந்து வந்த நாம் கடவுளையே அடைகிறோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம்.
மாதா கடவுளிடமிருந்து தான் பெற்றதை தந்தையிடம் கொடுக்க,
தந்தை அதை குருவிடம் கொடுக்க
குரு அதை தெய்வத்திடம் கொடுக்கிறார்.
இதுவே நமது வாழ்க்கை.
நமது வாழ்க்கை பாதையில் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
தெய்வம் கொடுத்த குழந்தையை மாதா, பிதா, குரு மூவரும் உருவாக்கி தெய்வத்திடமே கொடுக்கிறார்கள்.
மாதா நம்மை பெற்ற அன்னை.
பிதா நம்மை வளர்க்கும் தந்தை.
குரு நம்மை உருவாக்கும் ஆசிரியர்.
நம்மை மனிதர்களாக உருவாக்குவதில் மூவருக்கும் பங்கு இருக்கிறது.
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியரின் பங்கைப் பற்றித் தியானிப்போம்.
தியானிப்பதற்கு இது பைபிள் வசனமா என்று கேட்கலாம்.
அனைத்தையும் படைப்பவர் இறைவன், ஆகவே அனைத்திலும் இறைவனின் கரம் இருக்கிறது.
அனைத்திலும் ஆண்டவரின் வல்லமை பிரதிபலிக்கிறது.
போதிப்பவர் ஆசிரியர்.
இயேசு நற் செய்தியைப் போதித்தார்.
நம்மைப் பாவ நிலையிலிருந்து மீட்பதற்காக இயேசு நற் செய்தியைப் போதித்தார்.
நம்மை அறியாமையிலிருந்தும், குற்றம் துறைகளிலிருந்தும் விடுவிக்க ஆசிரியர் போதிக்கிறார்.
ஆசு + இரியர்= ஆசிரியர்,
குற்றம், குறைகளை நீக்குபவர்
பிழை இல்லாமல் பேச, வாசிக்க, எழுத கற்பிப்பது மட்டுமல்ல, ஒழுக்க ரீதியான குறைகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டியதும் ஆசிரியர் தான்.
இயேசுவும் ஒரு ஆசிரியர் தான். ஆனால் அவருடைய போதனை முற்றிலும் ஆன்மீகத்தைச் சார்ந்தது.
ஆனால் நமது பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் போதனையில் உலகைச் சார்ந்த கல்வியும் இருக்கிறது.
நாட்டை ஆட்சி புரியும் அரசியல் வாதிகள் ஆசிரியரிடம் கற்றவர்கள் தான்.
மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், இலக்கிய கர்த்தாக்கள்.... போன்ற ஆயிரக் கணக்கானோர் ஆசிரியரிடம் கற்றவர்கள் தான்.
வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல, ஒழுக்க விதிகளையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் தான்.
மாணவர்களை நன்கு கற்கச் செய்யவும், ஒழுக்கமாக வாழ வைக்கவும்
ஒரு கையில் பாடப்புத்தகமும்,
ஒரு கையில் பிரம்பும் வைத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழையும் ஆசிரியர்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது.
இன்று கையிலிருந்த பிரம்பை சட்டம் பிடுங்கிக் கொண்டது.
"பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.
(நீதிமொழிகள்.13:24)
பிரம்பு இல்லாததால் மாணவர்களைக் கண்டிக்க இயலவில்லை.
ஆசிரியரிடம் அடி வாங்காதவன் போலீசிடம் அடி வாங்குகிறான்.
நிலைமை சரியாக வேண்டுமென்றால் ஆசிரியர்களுக்கு கடமைகளை மட்டுமல்ல, அதிகாரத்தையும் கொடுக்க வேண்டும்.
அதிகாரம் இருந்தால் தான் மாணவர்களை மாண்பு உள்ளவர்களாக மாற்ற முடியும்.
ஆசிரியர் தினத்தன்று இதை நினைவில் கொள்வோம்.
நாம் நல்ல குடிமக்களாக வாழ வேண்டுமென்றால் முதலில் ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்.
ஆசிரியரிடம் இறைவனைப் பார்க்கக் கற்றுக் கொள்வோம்.
ஆசிரியருக்குக் கீழ்ப்படியும்போது இறைவனுக்குக் கீழ்ப்படிகிறோம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.
நம்மைப் பெற்ற அன்னையிடமும்,
வளர்த்த தந்தையிடமும்,
உருவாக்கிய ஆசிரியரிடமும்
இறைவனைக் காண்பவன்
உறுதியாக இறைவனோடு நித்திய காலமும் பேரின்பம் அனுபவிப்பான்.
இறைப்பணி ஆற்றும் ஆசிரியர் வாழ்க.
பயிலும் மாணவர்களும் வாழ்க.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment