Sunday, September 21, 2025

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 8:21)



அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 8:21)

இறையியல் படி‌

 இயேசுவுக்கு 
தேவ சுபாவத்தில் தந்தை இருக்கிறார், தாய் இல்லை,

மனித சுபாவத்தில் தாய் இருக்கிறாள், தந்தை இல்லை.

ஆன்மீக வாழ்வில் இயேசுவோடு ஒன்றித்த நமது ஆன்மீக வாழ்வில் இறை வார்த்தையை வாழ்கின்ற அனைவரும் 

இயேசுவின் தாய்களும், சகோதர, சகோதரிகளும்.

அன்னை மரியாள் விண்ணகத் தந்தையிடமிருந்து கபிரியேல் தூதர் கொண்டு வந்த நற் செய்தியை வாழ்ந்தாள்.

 "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று மரியாள் சொன்ன வினாடியில் இயேசு அவள் வயிற்றில் மனித உரு எடுத்தார். 

முதலாளியின் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிபவன்தான் அடிமை.

மரியாள் இறைவனின் வார்த்தையை மட்டும் தான் வாழ்ந்தாள்.

தனக்காக மட்டும் உழைப்பவனுக்கு ஒரு அப்பா, ஒரு அம்மா.

ஆனால் ஊருக்காக உழைப்பவனுக்கு ஊரிலுள்ள அனைவரும்
 அப்பா, அம்மாக்கள் தான்.

அறிவியல் ரீதியாக உயிரியல் படி(Biologically) பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றவள் மட்டுமே அம்மா.

ஆனால் ஆன்மீக ரீதியாக (Spiritually) யாரெல்லாம் இறையன்பாலும், அதிலிருந்து பிறந்த பிறரன்பாலும் இயக்கப் படுகிறார்களோ அவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவினர்கள்.

மரியாள் மட்டும் உயிரியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இயேசுவுக்கு அம்மா.

இறை வார்த்தையை வாழும் நம்மைப் பொறுத்தமட்டில் நமது ஆன்மீக உயிரான அன்பின் அடிப்படையில்

அன்பின் உருவாகிய இயேசு உட்பட நாம் அனைவரும் குடும்ப உறவினர்கள்.

ஆன்மீக ரீதியாக இயேசு தம் ஒவ்வொருவருக்கும் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா.

நமது அனைத்து உறவினர்களும் அவர்தான்.

நாமும் அவருக்கு தந்தை தாய் சகோதர சகோதரிகள் ஆகிய உறவினர்கள்.

உயிரியல் ரீதியான உறவு உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் முடிந்து விடும்.

ஆன்மீக ரீதியான உறவு இவ்வுலகில் மட்டுமல்ல விண்ணுலகிலும் நித்திய காலம் நீடிக்கும்.

இயேசுவை நோக்கி செபிக்கும் போது, "எங்களைப் பாவத்திலிருந்து மீட்க உங்கள் உயிரையே பலியாக்கிய அன்பு அண்ணா." என்று அழைக்கலாம். 

இது பைபிள் ரீதியாக இயேசு நம்மோடு பகிர்ந்து கொண்ட உறவு.

"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்"

இந்த உறவு நெருக்கமாக நீடிக்க வேண்டுமென்றால் நாம் பாவ மாசு இல்லாமல் பரிசுத்தர்களாக இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வாக்க வேண்டும்.

"தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளைப் பார்க்க வீட்டுக்குப் போக வேண்டாம்"

என்ற ஒரு பழ மொழி உண்டு.

தாயைப் போல பிள்ளை என்ற நம்பிக்கையிலிருந்து பிறந்த பழமொழி.

இதன் அடிப்படையில் பார்த்தால் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இயேசுவைப் போல் இருக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

நம்மைப் பார்த்து இயேசு எப்படிப் பட்டவர் என்று மற்ற மக்கள் அறிந்து கொள்ளும் அளவுக்கு நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.

பாடுகளின் போது பரிசேயர்கள் அவரை‌ எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தினார்கள்.

மற்றவர்கள் நம்மை அவமானப் படுத்தும் போது நாம் அமைதி காத்தால் நாம் இயேசுவின் சகோதரர்கள்.

நம்மை யாராவது ஒரு கன்னத்தில் அறைந்தால் நாம் மறு கன்னத்தையும் காட்டினால்  நாம் இயேசுவின் சகோதரர்கள்.

நமக்குத் தீமை செய்தவர்களை நாம் மன்னித்தால்  நாம் இயேசுவின் சகோதரர்கள்.

"விண்ணகத் தந்தையே, உமது திருமகனும், எங்கள் சகோதரருமாகிய இயேசுவைப்போல் நாங்களும் வாழ எங்களுக்கு அருள் தாரும்.'' 

லூர்து செல்வம்.

.

No comments:

Post a Comment