நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.
(லூக்கா நற்செய்தி 16:8)
வாழ்க்கையை முன்மதியுடன்
வாழ வேண்டும்.
நமது வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை முதலில் அறிந்து அதை அடைவதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு வாழ வேண்டும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு இலக்கு இருக்கும்.
மனிதர்களை லௌகீக வாதிகள், ஆன்மீக வாதிகள் என இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.
லௌகீக வாதிகள் உலகைச் சார்ந்து வாழ்பவர்கள்.
இவர்களுடைய வாழ்க்கையின் இலக்கு பொருள் ஈட்டுவதும், உலகைச் சார்ந்த வசதியோடு வாழ்வதும்
தான்.
அதை மையமாக வைத்தே அவர்களுடைய திட்டமிடலும், செயல்படுவதும் இருக்கும்.
ஆன்மீக வாதிகள் இறைவனைச் சார்ந்து வாழ்பவர்கள்.
விண்ணக வாழ்வை மையமாக வைத்தே அவர்களுடைய திட்டமிடலும், செயல்படுவதும் இருக்கும்.
இறைவனோடு வாழும் நித்திய பேரின்ப வாழ்வுதான் இவர்களுடைய வாழ்க்கையின் இலக்கு.
நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உண்மையில் இயேசு இறைவனின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் அதிக முன்மதியுடன் செயல்படுகிறார்கள் என்று கூறுகிறார்.
நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் தனது வசதியான வாழ்வுக்காக தனது முதலாளிக்கே துரோகம் செய்யத் தயங்கவில்லை.
அவர் தன்னுடைய முன்மதியை தவறான வகையில் பயன்படுத்துகிறார்.
நமது அனுபவத்தில் இறைவனின் மக்கள் உலகின் மக்கள் அளவு முன்மதியுடன் செயல்படவில்லை.
இறைவனின் மக்களின் வாழ்வின் நோக்கம் விண்ணக வாழ்வு.
பணம் ஈட்டுவதோ, வசதியாக வாழ்வதோ அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம் அல்ல.
ஆனால் திரு முழுக்குப் பெற்று இறைவனுக்காக வாழ்கிறோம் என்று சொல்பவர்கள் கூட
இறைவனுக்காக இவ்வுலகப் பொருளையும், வசதியான வாழ்க்கையையும் தியாகம் செய்யத் தயாராக இல்லை.
இறை அருளை ஈட்ட வேண்டுமென்றால் பொருளை தியாகம் செய்ய வேண்டும்.
நம்மிடம் உள்ள பொருளை ஏழை எளியவர்களோடு பகிர்ந்து கொண்டால் தான் இறை அருள் கிடைக்கும்.
வாழ்க்கை வசதிகளை விட்டுக் கொடுத்தால் தான் இறைவனுக்கு ஊழியம் செய்ய முடியும்.
9 மணி வரை தூங்க ஆசைப்படுபவன் அந்த ஆசையைத் தியாகம் செய்யா விட்டால் காலை எட்டு மணித் திருப்பலியில் கலந்து கொள்ள முடியுமா?
என்ன கட்டங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் இறைவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் தான் இயேசுவின் திரு விருந்தில் கலந்து கொள்ள முடியும்.
திருமணம் ஒரு திரு அருட்சாதனம்,
லௌகீக நிகழ்வு அல்ல.
ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு குடும்பமாக இணைத்து வைப்பது இறைவன்.
அவர்களுடைய இணைப்பின் படைப்பு நிகழ்வில் இறைவனோடு சேர்ந்து செயல் புரிவது.
முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியானது.
திருமண உறவில் லௌகீகத்துக்கு சிறிது கூட இடமில்லை.
இறைவன் படைக்கும் ஆன்மாவுக்கு உடலைத் தயாரிக்க வேண்டியது இவர்களுடைய இறைப் பணி.
இது மிகவும் புனிதமான பணி.
லௌகீக வாதிகள் திருமணத்தை லௌகீகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். அதனால் தான் அவர்கள் திருமண ஏற்பாட்டில் அழகுக்கும், பணத்துக்கும், நகை நட்டுகளுக்கும், ஆடம்பரத்துக்கும அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். லௌகீக காரணங்ஙகளால் இணையும் தம்பதியர் அதே காரணங்களுக்காகப் பிரிந்தும் போகிறார்கள்.
ஆனால் கத்தோலிக்கத் திருமணத்தில் முக்கியத்துவம் பெறுபவர் கடவுள் மட்டுமே.
திருமணத் தம்பதியர் இணைவதும் அவருக்காகத்தான், வாழ்வதும் அவருக்காகத் தான். அவர் இணைத்த திருமண பந்தத்தை எந்த மனித சக்தியாலும் பிரிக்க முடியாது.
அழகு, பணம், நகை நட்டுகள், ஆடம்பரம் போன்ற லௌகீகப் பொருட்களுக்கு ஆன்மீகத்தில் முக்கியத்துவம் இல்லை.
அவை புனிதமான திருமண உறவைப் பாதிக்கக் கூடாது.
ஆனால் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் கூட இந்த விசயத்தில் அஞ்ஞானிகளைப் போல செயல்படுவது தான் வருத்தத்துக்குரிய விசயம்.
கத்தோலிக்கர்களாகிய நாம் இயேசுவின் நற்செய்தியை மட்டும் மையமாக வைத்து,
விண்ணக வாழ்வை நோக்கமாகக் கொண்டு
முன்மதியுடன் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment