Friday, September 19, 2025

" எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். (லூக்கா நற்செய்தி 8:16)



"எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். 
(லூக்கா நற்செய்தி 8:16)

 "நானே உலகின் ஒளி" என்ற இயேசு

 நம்மை நோக்கி" நீங்கள் உலகின் ஒளியாக இருக்கிறீர்கள்." என்றும் கூறினார்.

அவருடைய ஒளியை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பே உருவானவர் இயேசு.
அதேபோல் 
ஒளியே உருவானவர் இயேசு.

அவருடைய பண்புகளை எல்லாம் நம்மோடு பகிர்ந்து கொண்டதால் நாம் அவருடைய சாயலில் இருக்கிறோம்.

கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வதானால்,

நம்மை இயேசுக்களாகப் படைத்திருக்கிறார்.

அவரும் ஒளி, நாமும் ஒளி.

பொருட்களைக் கண்ணுக்குத் தெரிய வைப்பது ஒளியின் தன்மை.

ஒளி இல்லாமல் எந்த பொருளையும் பார்க்க முடியாது. 

ஒரு பொருளை அது உள்ளபடியே பார்க்க வேண்டும் என்றால் அதன் மேல் ஒளிபட வேண்டும்.

ஒளியின் உதவியால்தான் உண்மையை உண்மையாக உணர முடியும். 

இயேசு நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளியால் தான் அவரையே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

இயேசு நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளி நமது அயலான் மேல் பட வேண்டும்.

அதாவது நமது ஒளி எல்லோர் மீதும் படும்படியாக இருக்க வேண்டும்.

யாராவது ஒளி தரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடி வைபாபார்களா?

ஒளியை ஏற்றி அதை மூடி வைப்பதும் ஒளியை ஏற்றாதிருப்பதும் ஒன்றுதான்.

‌விளக்கை ஏற்றி விளக்குத் தண்டின் வைத்தால்தான் அறை முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

அறையில் உள்ள எல்லா பொருள்களும் நமது கண்களுக்கு தெரியும்.

நாமும் ஒளியாக இருக்கிறோம்.

நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும் என்றால் நாம் செய்வது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். 

நாம் நல்லவர்களாக வாழ்வது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தான் அவர்கள் நம்மைப் பின்பற்றி நல்லவர்களாக வாழ்வார்கள்.

நம்மை விளம்பரப்படுத்துவதற்காக மற்றவர்கள் முன் செயல்களை செய்யக்கூடாது. 

விளம்பரம் வியாபாரத்திற்கு உரியது. 

நமது நற்செயல்களைப் பார்த்து மற்றவர்களும் நற்செயல்களைப் புரியும் படி அவர்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும்.

விளம்பரத்திற்காக எதைச் செய்தாலும் ஆன்மீக ரீதியாக எந்த பயனும் இல்லை. 

மற்றவர்கள் நம்மை பார்த்து செயல்படும்படி முன் மாதிரி கையாக வாழ்ந்தால் நமக்கு விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கும்.

ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பதை அதன் நோக்கம் தீர்மானிக்கும். 

பிறர் மீது நமக்குள்ள அன்பின் மிகுதியால்  அவர்கள் நலமாக வாழ மருத்துவமனை நடத்தினால் அது சேவை.

சுய விளம்பரத்துக்காக நடத்தினால் வியாபாரம்.

நம்மிடமுள்ள அன்பு, இரக்கம் போன்ற நற்பண்புகளையும், திறமைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய நற்பண்புகளால் மற்றவர்களும் பயன்பெற வேண்டும்.

கடவுள் இரக்கம் உள்ளவர், அவரது இரக்கத்தை நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு மரிக்க பயன்படுத்தினார்.

அவரது தாராள குணத்தை நம்மோடு அவரது பண்புகளை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தினார். 

நாமும் நமது அயலானோடு நமக்கு உரியது அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். 

இயேசுவாக வாழ்வோம். 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment