"இறைவன் பிரசன்னத்தில் வாழ்வதே செபம்"
இறைவன் எங்கும் இருக்கிறார்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவையும் படைத்து அதைச் செயல்படுத்திக் கொண்டிருப்பவர்
இறைவன்தான்.
ஆகவே பிரபஞ்சத்தில் எந்த இடத்தில் நாம் வாழ்ந்தாலும்
அவருக்குள் தான் வாழ்கிறோம்.
அவரது பிரசன்னத்தில்தான் வாழ்கிறோம்.
இதை உணர்ந்து வாழ்வதுதான் செபம்.
சாப்பிடும் போது உணவை ருசித்து சாப்பிடுவது போல நமக்கு உள்ளும் புறமும் வியாபித்திருக்கும் இறைவனை ருசித்து வாழ வேண்டும்.
"ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
(திருப்பாடல்கள் 34:8)
வாழ்க்கைதான் செபம்.
நாம் அனைவரும் வாழ்கிறோம்.
நமது கருத்துப்படி நுரையீரலும்
இருதயமும் இயங்கினால் நாம் வாழ்கிறோம், அதாவது உயிரோடு இருக்கிறோம்.
உயிரோடு இருக்கும் போது சிந்திக்கிறோம், பேசுகிறோம், செயல்படுகிறோம்.
சிந்தித்துப் பேசி செயல்படுவதுதான் வாழ்க்கை.
தாய் பெற்ற குழந்தை எப்போதும் தாயோடே இருக்கிறது.
இறைவனால் படைக்கப்பட்ட நாம் இறைவனோடே சிந்தித்துப் பேசி செயல்படுவதுதான் செபம்.
இறைப் பிரசன்னத்தில் வாழ்வதே ஆன்மீக வாழ்க்கை.
ஆன்மீக வாழ்க்கைதான் செபம்.
நமது பிரசன்னத்தில் மட்டும் வாழ்வது லௌகீக வாழ்க்கை.
ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர் எக்காலமும் இறைவனோடு வாழ்வார்.
எக்காலமும் இறைவனோடு வாழ்வதைத்தான் நிலை வாழ்வு என்கிறோம்.
இறைப் பிரசன்னத்தில் வாழ்வது எப்படி?
நாம் சிந்திக்கும் போதும், பேசும்போதும்,
செயல்படும் போதும்
இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு நம்மில் இருந்தால் நாம் இறைப் பிரசன்னத்தில் வாழ்கிறோம்.
ஒன்றாக வாழும் கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவருடைய விருப்பப்படி,
ஒருவரையொருவர் மகிழ்விக்கும் படி வாழ்வர்.
அப்படி வாழ்வதுதான் உண்மையான குடும்ப வாழ்வு.
எக்காலமும் இறைவனின் விருப்பப்படி, அவரை மகிழ்விக்கும் படி வாழ்வது செப வாழ்வு.
நாம் செய்யும் ஒவ்வொரு பணியிலும்,
மற்றவர்களிடம் பேசும்போதும், நம் எண்ணங்களிலும், இறைவனை உணர்ந்து செயல்படுவதுதான் செபம் வாழ்வு.
காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை,
நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும்,
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிலும்,
இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதே செப வாழ்வு.
நமது படிப்பு,
செய்யும் வேலை, , உறவுகளோடு செய்யும் உரையாடல்,
அலுவலகப் பணி,
மாலையில் ஆடும் விளையாட்டு
அனைத்தையும்
இறைவனுக்குச் செய்யும் சேவையாக நினைத்துச் செய்வதே செப வாழ்வு.
நமது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு சொல்லும் இறைவனோடு ஒன்றித்திருப்பதே செபம்.
ஒன்றித்து வாழ்வது செப வாழ்வு.
செப வாழ்வு வாழ்பவர்களின் உள்ளத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
ஒவ்வொரு வினாடியும் இறைவனோடு ஒன்றித்தே வாழ்வதால் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்ய மாட்டோம்.
ஆகவே நமது வாழ்க்கையில் சமாதானம் நிலவும்.
"சமாதானம் ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்."
(மத்தேயு .5:9)
கடவுளின் மக்கள் கடவுளின் அரசுக்கு உரியவர்கள்.
ஆகவே செபவாழ்வு விண்ணுலகிலும் தொடரும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment