Thursday, September 11, 2025

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? (லூக்கா.6:41)

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? 
(லூக்கா.6:41)

 காலில் பட்ட சகதியைச் சகதியால் கழுவ முடியுமா?

சுத்தமான தண்ணீரால் தான் சகதியைக் கழுவ முடியும்.

இலக்கணமே படிக்காதவன் மொழித் தேர்வுக்கான விடைத்தாளை மதிப்பீடு செய்ய முடியுமா?

எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உலகெங்கும் சென்று நற் செய்தியை அறிவியுங்கள் என்று அவருடைய சீடர்களாகிய நமக்கு இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்.

அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. 

அந்தக் கடமையை நிறைவேற்ற முதலில் நாம் நற்செய்தியை அறிந்திருக்க வேண்டும்.

அடுத்து நற்செய்தியை வாழ வேண்டும்.

நற்செய்தியை அறிந்து வாழ்பவர்கள் மட்டும் தான் அதை அறிவிக்க முடியும். 

தன்னை சுற்றியுள்ளோரை பகைத்துக் கொண்டு அவர்களோடு  சண்டை போட்டுக் கொண்டிருப்பவனால் 

மற்றவர்களை பார்த்து "பகைவர்களை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்று கூற முடியுமா? 

உங்கள் அயலானை நேசியங்கள் என்று கூற முடியுமா?

நம்மைச் சுற்றி வாழும் கெட்டவர்களை திருத்த வேண்டும் என்றால்  முதலில் நாம்‌ நல்லவர்களாக வாழ வேண்டும்.

கோவில் பக்கமே போகாதவன் மற்றவர்களிடம் "ஞாயிறு திருப்பலிக்கு செல்லுங்கள்'' என்று அறிவுரை கூற முடியுமா?

நாம் திருந்தி வாழாமல் மற்றவர்களை திருத்த முற்பட்டால் அவர்கள் நம்மை பார்த்து

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?"

என்ற நற் செய்தி வசனத்தை‌ நம்மை நோக்கிக்  கூறுவார்கள்.

மற்றவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவதற்கு அவர்களுடைய குற்றம் குறைகளைக் காண முயற்சி செய்யக் கூடாது.

அவர்களை குற்றங்களிலிருந்து விடுவித்து அவர்களை நல்லவர்களாக மாற்றும் நல்ல எண்ணத்தோடு குற்றம் குறைகளை கவனிக்கலாம்.

மருத்துவர் ஒருவரை குணமாக்க அவரது நோய் நொடிகளைப் பற்றி ஆராய்வது போல நாம் மற்றவர்கள் விடயங்களில் நல்ல நோக்கத்தோடு தலையிடலாம்.

அவர்க்கு முன் நாம் ஆன்மீகச் சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நமது வாழ்வில் தவறுகள் இல்லாதிருந்தால் தான் நம்மால் மற்றவர்களுடைய தவறுகளை சுட்டி காண்பிக்க முடியும்.

சதா இருமிக் கொண்டிருக்கும் மருத்துவர் இருமலுக்கு மருந்து சொல்ல அருகதை அற்றவர்.
 

மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவரிடம் சென்று 

'எனக்கு ஒரு கடிதம் எழுதித் தர  முடியுமா? என்று யாராவது கேட்பார்களா?

வகுப்பில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூற வேண்டுமென்றால் 

ஆசிரியர் தயாரிப்புடன் வகுப்புக்குள் நுழைய வேண்டும்.

நினைவில் வைத்துக் கொள்வோம்.

சமூகத்தைச் சீர்திருத்த நினைக்குமுன் நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment