உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
(லூக்கா நற்செய்தி 6:36)
நமது விண்ணகத் தந்தை எந்தெந்த வகையில் நம்மோடு இரக்கம் உள்ளவராய் இருக்கிறார்?
ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைத் தின்றால் "சாவீர்கள்" என்று தந்தை நமது முதல் பெற்றோரிடம் கூறியிருந்தார்.
பாவத்தின் விளைவாக நிகழ்ந்தது ஆன்மீக மரணம்.
பாவம் ஆன்மாவின் உயிராகிய தேவ இஷ்டப் பிரசாதத்தை நீக்கி விடுகிறது.
ஆனால் கடவுள் மனிதர்களை அப்படியே விட்டு விடவில்லை.
தனது இரக்கத்தின் மிகுதியால்
மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
அவரும் தனது சிலுவை மரணத்தின் மூலம் நம்மை நித்திய மரணத்திலிருந்து மீட்டார்.
தனது சாயலாக நம்மைப் படைத்த கடவுள் அவரது இரக்க சுபாவத்தையும் நம்மோடும் பகிர்ந்துள்ளார்.
அவர் இரக்கமாய் செயல் புரிந்தது போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.
நாமும் நமது பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களைத் திருத்த வேண்டுமே தவிர தண்டிக்கக் கூடாது.
நாம் பாவம் செய்யும் போது இறைவனுக்கு பகைவர்களாக மாறுகிறோம்.
ஆனால் கடவுள் நம்மை நேசிப்பதை நிறுத்தவில்லை.
நமது பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்கிறார்.
நாமும் நம்மை பகைப்பவர்களையும் நேசிக்க வேண்டும்.
இதை எழுதும் பொழுது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு மன்னன் தன்னை எதிர்த்துப் போரிட வந்த எதிரியோடு போரிட்டு வென்று அவனையும் அவனது படை வீரர்களையும் கைது செய்தான்.
தனது வெற்றியை விழாவாகக் கொண்டாடத் தீர்மானித்தான்.
அவனுடைய அமைச்சர்கள் அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்கள்.
வெற்றி விழா கொண்டாடும் முன் கைது செய்யப்பட்ட அனைத்து எதிரிகளையும் அழித்து விட வேண்டும்.
அமைச்சர்களின் ஆலோசனையை மன்னன் ஏற்றுக்கொண்டார்.
விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.
பெரிய மேடையும் பந்தலும் போடப்பட்டன.
விழா நாளன்று விழாவில் கலந்து கொள்ள வந்த மக்கள் அனைவரும் பந்தலில் அமர்ந்திருந்தனர்.
அமைச்சர்கள் விழா மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
மேடையில் ஏறிய மன்னன் மக்களை நோக்கி,
"அன்பு மக்களே, வெற்றி விழா ஆரம்பிக்கும் முன் அமைச்சர்களின் ஆலோசனைப்படி நான் சிறைச்சாலைக்குச் சென்று அனைத்து விரோதிகளையும் அழித்துவிட்டு வருகிறேன்."
என்று கூறிவிட்டு சில படை வீரர்களோடு மன்னன் சிறைச்சாலைக்குச் சென்றான்.
ஒரு மணிநேரம் நேரம் ஆகிவிட்டது.
மன்னனின் வருகையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று நடந்தது.
தோள் மேல் கை போட்டு இரண்டு மன்னர்களும் வந்து கொண்டிருந்தார்கள்.
கைது செய்யப்பட்ட வீரர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து மகிழ்ச்சி பொங்க வந்து கொண்டிருந்தார்கள்.
வீரர்கள் மக்களோடு பந்தலில் அமர்ந்தார்கள்.
இரண்டு மன்னர்களும் மேடை மேல் ஏறினார்கள்.
அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
மன்னன் மைக் முன்னால் நின்று கொண்டு மக்களைப் பார்த்து,
"அன்பு மக்களே, அமைச்சர்களின் ஆலோசனைப்படி நான் அனைத்து எதிரிகளையும் அழித்துவிட்டேன்.
இப்போது என்னோடு வந்திருப்பவர்கள் நமது நண்பர்கள்.
நான் எதிரிகளை மன்னித்த வினாடியில் பகைமை அழிந்தது, நட்பு பிறந்தது.
மக்களே ஒன்றை அறிந்து கொள்ளுங்கள், பகைவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி அவர்களை மன்னிப்பது தான்.
இனி அவர்கள் நமது எதிரிகள் அல்ல, நண்பர்கள்."
மக்கள் கரகோஷம் செய்து மன்னர் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.
நமது விண்ணக தந்தை இரக்கமாய் இருப்பது போல இந்த கதையில் வரும் மன்னனும் இரக்கமாக இருந்தார்.
நாமும் நமது பகைவர்கள் மீது இரங்கி அவர்களை மன்னித்து நண்பர்களாக்கிக் கொள்வோம்.
நண்பர் ஒருவர் ஒவ்வொரு நாளும் காலை உணவை யாருடனாவது பகிர்ந்து உண்ட பின்தான் அவர் உண்பார்.
ஒரு நாள் காலை பத்து மணி வரை யாரும் வரவில்லை.
நண்பர் வரும் ஆளை அழைப்பதற்காகத் தெருவில் நின்று கொண்டிருந்தார்.
பத்தரை மணிக்கு வந்த நபரை சாப்பிட அழைத்தார்.
அவரும் அழைப்பை ஏற்று வந்தார்.
சாப்பிடும் முன் அவரை நோக்கி, "நமக்கு உணவைத் தந்த கடவுளுக்கு நன்றி கூறி விட்டு சாப்பிடுவோம்" என்றார்.
ஆனால் அவர்,
"கடவுள் உணவு தரவில்லை.
சாப்பிட அழைத்த உமக்கு நன்றி. கடவுளுக்கு ஏன் நன்றி?
எத்தனை பேர் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் கடவுள் சாப்பாடு கொடுக்கிறாரா?"
என்று கூறியதோடல்லாமல் கடவுளைத் திட்ட ஆரம்பித்தார்.
"நான் கடவுள் பக்தி உள்ளவன்.
அவரைத் திட்டும் உமக்கு சாப்பாடு கிடையாது. நீர் போகலாம்." என்றார்.
அவரும் எழுந்து போய் விட்டார்.
நண்பர் திரும்ப தெருவுக்கு வந்தார்.
கொஞ்சம் பொறுத்து இயேசு வந்து கொண்டிருந்தார்.
"ஆண்டவரே வாருங்கள். நான் உங்களை எதிர் பார்க்கவில்லை. வாருங்கள் சாப்பிட்டு விட்டு பேசுவோம்."
"நான் அனுப்பிய ஆளுக்கு ஏன் நீ சாப்பாடு கொடுக்கவில்லை."
"நீங்கள் அனுப்பிய ஆளா அது?
அவன் உங்களைத் திட்டுகிறான். உங்களைத் திட்டுபவனுக்கு எப்படி சாப்பாடு கொடுப்பேன்."
"அவன் என்னை ஐம்பது ஆண்டுகளாகத் திட்டிக் கொண்டு தான் இருக்கிறான்.
நான் அவனுக்குச் சாப்பாடு கொடுத்து அவனைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்.
"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்;
உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
என்று நான் சொன்னதை எத்தனை முறை வாசித்திருக்கிறாய்.
பட்டினியாய் இருப்பவன் மீது இரக்கப் படாவிட்டால் நீ என்னை ஆண்டவரே என்று கூப்பிட்டு என்ன பயன்?"
"ஆண்டவரே என்னை மன்னியுங்கள்.
நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?"
"அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து சாப்பாடு கொடு."
"ஆண்டவரே, உங்களுக்கு?"
"நீ அவனுக்கு அளிக்கும்போது எனக்கே அளிக்கிறாய்."
"நன்றி ஆண்டவரே, வருகிறேன்."
இரக்கம் அன்பின் குழந்தை.
நாம் அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். நம்மை இகழ்வோரையும் அன்பு செய்ய வேண்டும். அவர்கள் கட்டத்தில் இருக்கும்போது அவர்கள் மேல் இரங்க வேண்டும்.
யாராவது நம்மைக் கோபத்தில் அடித்தால் நமக்குப் பதிலுக்குக் கோபம் வரக்கூடாது, இரக்கம் வர வேண்டும்.
"ஐயோ, பாவம். நம்மை அடிக்கும்போது அவனுக்கும் கை வலிக்குமே.
வீணாக சக்தி விரயமாகுமே."
என்று நினைத்து அவன்மீது இரக்கப்பட வேண்டும்
யாராவது நம்முடைய பொருட்களைத் திருடினால் அவனுடைய இல்லாமையை நினைத்து இரக்கப்பட வேண்டும்.
"உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்."
உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். "
இது நமது இரக்கத்தை வலியுறுத்தும் ஆண்டவரின் வார்த்தைகள்.
நாம் கட்டப்படும் போது மற்றவர்கள் நம்மீது இரங்கி உதவ வேண்டும் என்று எதிர் பார்ப்போம்.
அதையே நாம் மற்றவர்களுக்குச் செய்வோம்.
"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
இவை நமது ஆண்டவரின் வார்த்தைகள்.
நாம் வாழ வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட வார்த்தைகள்.
நமது விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment