"அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்."
(லூக்கா.5:15)
இரண்டு காரணங்களுக்காக மக்கள் இயேசுவைத் தேடி வந்தார்கள்.
1.அவரது சொல்லைக் கேட்க.
2.தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெற.
இயேசு சென்ற இடமெல்லாம் மக்களின் நோய்களைக் குணமாக்கினார். ஆகவே நோய்கள் நீங்கி நலம் பெற கூட்டம் கூட்டமாக அவரைத் தேடி வந்தார்கள்.
தேடி வந்தவர்களுக்கு இயேசு நற் செய்தியை அறிவித்தார்.
நற் செய்தியை ஒரு முறைக் கேட்டவர்கள் அதன்பின் அதைக் கேட்பதற்காகவே அவரைத் தேடி வந்தார்கள்.
நாம் உடலும் ஆன்மாவும் சேர்ந்த மனிதர்கள்.
உடலும் நலமாக இருக்க வேண்டும்.
ஆன்மாவும் நலமாக இருக்க வேண்டும்.
உடல் நலமாக இருக்கிறது என்றால் நோய் இல்லாமல் இருக்கிறது என்பது பொருள்.
ஆன்மா நலமாக இருக்கிறது என்றால் அது பாவம் இன்றி பரிசுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.
இயேசு மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் ஆன்மாவுக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுக்க.
உடல் நோயைக் குணப்படுத்துவது அவரது வருகையின் நோக்கம் அல்ல.
ஆனால் மனிதர்களைத் தேடி வரவழைப்பதற்காகவே நோய்களைக் குணமாக்கினார்.
வந்தவர்களுக்கு நற் செய்தியை அறிவித்தார்.
மாணவர்களுக்கு ஏன் காலையிலும், மத்தியானமும் உணவு கொடுக்கப் படுகிறது.
அவர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கற்க.
கல்வி கற்பதற்காவே உணவு அளிக்கப் படுகிறது.
பள்ளிக் கூடம் சென்று, சாப்பிட்டு விட்டு, கல்வி கற்காத மாணவர்களைப் பற்றி என்ன கருத்து சொல்லலாம்?
குற்றால அருவியைப் பார்ப்பதற்காக ஒருவர் சென்னையிலிருந்து தென்காசிக்கு இரயிலில் வந்து அங்கிருந்து குற்றாலத்துக்குப் பேருந்தில் சென்று,
அருவியைப் பார்த்து விட்டு
(குளிக்காமல்)
கடைகளைப் பார்த்து விட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு விட்டு,
சென்னைக்குத் திரும்பிய ஒருவர் எனக்குத் தெரியும்.
"எதற்காகக் குற்றாலத்துக்குப் போனீர்கள்?" என்று கேட்டேன்.
"சார், நான் இரயில்வேயில் வேலை பார்க்கிறேன். வீடு சென்னையில். பிள்ளைகள் குற்றாலத்துக்குப் போக வேண்டும் என்றார்கள். எங்களுக்கு Railway pass இருக்கிறது.
செலவில்லாமல் போய்விட்டு வந்தோம். பிள்ளைகள் குளித்தார்கள். நான் குளிக்கவில்லை."
குற்றாலத்தால் அவருக்கு ஒரு பயனும் இல்லை.
இப்போது நம்மைப் பற்றித் தியானிப்போம்.
இயேசு நமது பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தரவே
மனிதனாகப் பிறந்து,
நற் செய்தியை அறிவித்து, பாடுகள் பட்டு
சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வது பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தத் தனத்தில் வளர்ந்து, நிலை வாழ்வைப் பெற.
நாம் உடல் நோய் நீங்குவதற்காக கிறிஸ்தவர்களாக வாழவில்லை.
ஆனாலும் கடவுள் நமது வேண்டுதலைக் கேட்டு நம்மை நோய்களிலிருந்து குணமாக்குகிறார், நமது விசுவாசத்தை உறுதிப் படுத்த.
நமது அன்னையின் பிறந்த நாள் விழா செப்டம்பர் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.
நிறைய பேர் நேர்ச்சைகளுடன் வேளாங்கண்ணிக்குச் செல்வார்கள்.
கேட்டது உறுதியாகக் கிடைக்கும்.
நோய் நொடிகள் குணமாகும்.
நினைவில் கொள்ள வேண்டியது எல்லாம் நமது ஆன்மீக நலனுக்காக.
பாவ சங்கீர்த்தனம், திருப்பலி, திரு விருந்து, ஏழைகளுக்கு உதவி செய்தல் ஆகியவையே திருப்பயணத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆண்டவர் உலகுக்கு வந்தது நமது ஆன்மாவின் மீட்புக்காக மட்டுமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment