சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
(லூக்கா .5:5)
சீமோன் இரவு முழுவதும் மீன் பிடிக்க முயன்றும் எதுவும் கிடைக்காததால் படகைக் கரையில் கொண்டு வந்து விட்டு விட்டு வெறும் வலையை அலசிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த இயேசு சீமோனுடைய படகைக் தண்ணீருக்குள் தள்ளச் சொல்லி
அதன்மீது ஏறி மக்களுக்குப் போதித்தார்.
போதித்து முடித்தபின் சீமோனை நோக்கி
"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.
சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை;
ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
சீமோன் மீனவர். அவரது தொழிலே அதுதான்.
தொழில் ரீதியாக இயேசு தச்சர்.
ஆனால் அவர் மீது சீமோன் வைத்திருந்த உறுதியான விசுவாசம் காரணமாக அவர் சொன்ன படி செய்தார்.
வலைகள் கிழியக்கூடிய அளவுக்கு, பெருந்திரளான மீன்கள் அகப்பட்டன.
இதைக் கண்ட சீமோன், இயேசுவின் கால்களில் விழுந்து,
"ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.
சீமோனின் வார்த்தைகளைத் தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
சீமோன் தன் சகோதரர் அந்திரேயாவுடன் இயேசுவை முதன்முதல் சந்தித்தது யோர்தான் நதி கரையில் உள்ள பெத்தானியாவில்.
முதல் சந்திப்பிலேயே இயேசு சீமோனை நோக்கி
"நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார்.
"கேபா" என்றால் "பாறை" என்பது பொருள்.
முதல் சந்திப்புலேயே யாரும் சொல்லாமலேயே சீமோனின் தந்தை யாரென்று இயேசு கூறி விட்டார்.
அதோடு அந்திரேயா இயேசுவோடு தங்கி அவரே மெசியா என்பதை அறிந்து சீமோனிடம் கூறியிருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட விசுவாசம் தான் கெனசரேத் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவரை இயக்கியிருக்கிறது.
''இரவு முழுவதும் முயன்றோம். ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. ஆனாலும் உம்மை நான் விசுவசிக்கிறேன். ஆகவே நீர் சொன்னபடி வலையைப் போடுகிறேன்."
என்று இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்.
இத்தகைய விசுவாசம் நம்மிடமும் இருக்க வேண்டும்.
நாம் ஆண்டவரிடம் ஏதாவது கேட்டால் அது கிடைத்து விட்டது என்று விசுவசிக்க வேண்டும்.
"ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.''
(மாற்கு.11:24)
படகுகள் மூழ்கும் அளவுக்கு மீன் கிடைத்தவுடன் சீமோன் எப்படி எதிர்வினை ஆற்றினார்?
How did he react?
"இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.
அவர் உலகியல் ரீதியாக மகிழ்ச்சிக் கடலில் நீந்தவில்லை.
மாறாக ஆன்மீக ரீதியாக பரிசுத்தராகிய இயேசுவின் முன் பாவியாகிய தான் நிற்க அருகதை அற்றவன் என்பதை உணர்ந்ததோடு தனது உணர்வை ஆண்டவரோடு பகிர்ந்து கொள்கிறார்.
தலையான புண்ணியங்களுள் முதன்மையானது தாழ்ச்சி.
தான் பாவி என்று ஏற்றுக் கொள்வது புண்ணியம்.
"தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான் என்பது இயேசுவின் போதனை.
அவரது தாழ்ச்சிக்குப் பரிசாகத் தான் இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக்கினார்.
அவ்வளவு மீன்களைப் பிடிக்க உதவி விட்டு இயேசு அவரை நோக்கி,
"இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்."
என்று சொன்னவுடனே சீமோன் பிடித்த அத்தனை மீன்களையும், படகையும், வலைகளையும் அப்படியே விட்டு விட்டு இயேசுவின் பின் சென்றார்.
அந்திரேயாவும், அருளப்பரும் யாகப்பரும் அப்படியே செய்தார்கள்.
சீமோனுடைய மாமியார் வீடு கப்பர்நாகூமில் இருந்தது.
அங்கிருந்து தான் அவர் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தார்.
இராயப்பர் இயேசுவின் சீடர் ஆனபின் இயேசு கப்பர்நாகூம் நகரையே தன் தங்குமிடமாகத் தேர்வு செய்து கொண்டார்.
இந்த விபரங்கள் எல்லாம் இப்போது எதற்காக?
சீமோனின் வார்த்தைகள் எந்த அளவுக்கு நமது ஆன்மீகப் பாதையில் நம்மை வழி நடத்த உதவுகின்றன என்பதைப் பற்றி தியானிப்பதற்காக.
"இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்."
பிறந்த காலத்திலிருந்தே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் எனக்குத் தெரியாதது 30 ஆண்டுகள் தச்சு வேலை செய்த உங்களுக்குத் தெரியுமா என்று அவர் கேட்கவில்லை.
நம்மால் முடியாததும் இயேசுவால் முடியும் என்று நம்பினார்.
"மனிதரால் இயலாதது எல்லாம் கடவுளால் இயலும்."
என்ற மறை உண்மையை நம்
மனதில் ஆழமாகப் பதிய வைப்போம்.
நமது ஆன்மீகப் பாதையில் வழி நடக்கும் போது ஏதாவது செயல் நம்மால் முடியாது என்று தோன்றினால் முழுமையான விசுவாசத்தோடு இறைவனை நோக்கி செபிக்க வேண்டும்.
இங்கு மற்றொரு உண்மையையும் மனதில் கொள்ள வேண்டும்.
சீமோன் அந்திரேயாவுடன் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்ட பின்புதான் முதன் முதலில் பெத்தானியாவில் சந்தித்தார்.
அப்போது ஏற்பட்ட அர்ப்பண உணர்வு கெனசரேத் ஏரியில் மீன் பிடிக்கும் போதும் நீடித்தது.
ஆகவேதான் அவரால் இயேசு சொன்னவுடன் சொன்னபடி செய்ய முடிந்தது.
ஆகவே
"அனைத்திற்கும்
மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.
அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு.6:33)
என்று இறை வாக்குக்கு ஏற்ப சீமோனைப் போல் இறையரசை முதலில் தேடுவோம்.
நாம் நினைத்தது நினைத்தது நிறைவேற இறைவனே உதவுவார்.
"ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்ற சீமோனின் வார்த்தைகள் நமது ஆன்மீக வாழ்வில் எப்படி உதவும்?
இந்த வார்த்தைகள் குறிக்கும் தாழ்ச்சியை நமது ஆன்மீகப் பாதையில் ஊன்று கோலாகப் பயன்படுத்தி நடக்க வேண்டும்.
"ஆண்டவரே, நீர் பரிசுத்தர் நான் பாவி, உமது அருகில் வர அருகதை அற்றவன். ஆகவே எனது பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்ளும்."
என்று அடிக்கடி செபிக்க வேண்டும்.
"ஆண்டவரே, என் நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதி அற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லி அருளும் என் ஆன்மா குணமடையும்."
என்ற செபத்துக்கும், சீமோனின் செபத்துக்கும் நோக்கம் ஒன்றுதான்.
திவ்ய நற்கருளை வாங்கும் முன் நாம் இதை செபித்ததும் இயேசு நமது இல்லத்திற்கு வருகிறார்.
சீமோன் செபித்த பின் இயேசு அவரை அழைத்துக்கொண்டு போகிறார்.
தாழ்ச்சியுடன் இயேசு நம்மை வழிநடத்த விட்டு விடுவோம்.
அவ்வளவு மீன்பாடு கிடைத்தும்,
அதை அனுபவிக்க முழு சுதந்திரம் இருந்தும்,
இயேசு அழைத்தவுடன் அனைத்தையும் ஏரிக்கரையில் விட்டு விட்டு அவரோடு சென்று விடுகிறார்.
சீமோனைப் பின்பற்றி நாமும் இயேசு அழைக்கும் போது இருப்பதை விட்டு விட்டு அவர் பின்னால் செல்வோம்.
தருவதும் அவரே, அழைப்பதும் அவரே,
நமக்கு அனைத்திலும் அவரே, அவர் மட்டுமே முக்கியம்.
பைபிளை
வாசிப்போம்,
யோசிப்போம்,
வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment