மனிதர்கள் அனைவருக்கும் மீட்பர் ஒருவரே.
உண்மையான செபவாழ்வு உலகைத் துறந்து வாழும் குருக்களுக்கும், துறவற சபையினருக்கும் மட்டுமே உரியது,
ஏனேனில் அவர்கள் சோதனைகள் நிறைந்த உலக வாழ்வை முற்றிலுமாக விட்டு விட்டு முழுமையான ஆன்மீக சூழ்நிலையில் வாழ்கிறார்கள்.
இது நமது எண்ணம். செபம் என்றால் என்ன என்பதை நாம் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
எல்லா மக்களையும் ஒரே கடவுள்தான் படைத்தார்.
எல்லோரையும் தன் சாயலில் தான் படைத்தார்.
எல்லோரும் தன்னோடு ஒன்றித்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் படைத்தார்.
நமது வீட்டில் உள்ளவற்றை நமது பயன்பாட்டுக்காக வைத்திருக்கிறோம்.
எல்லாம் நமக்கு உரியவை, நாம் பயன்படுத்துபவை.
ஆனால் எல்லாம் ஒரே மாதிரியாகப் பயன்படுவதில்லை.
கார், பைக் போன்ற வாகனங்கள் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.
நாற்காலி உட்காரப் பயன்படுகிறது.
கட்டில் தூங்கி ஓய்வெடுக்கப் பயன்படுகிறது.
எல்லாம் ஒரே மாதிரியாகப் பயன்படுவதில்லை, ஆனால் பயன்படுகின்றன்.
இறைவனால் படைக்கப்பட்ட நாம் அவர் நம்மைப் படைத்து பராமரித்து வருவதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.
வார்த்தையால் மட்டுமல்ல, நமது வாழ்க்கையாலும் நன்றி கூற வேண்டும்.
நமது நன்றி வாழ்க்கை தான் நமது செப வாழ்வு.
கடவுள் எல்லோரையும் அவரது சாயலில் படைத்திருந்தாலும், எல்லோரையும் ஒரே மாதிரியாகப் படைக்கவில்லை.
வித்தியாசமான திறமைகளோடு (With different talents) படைத்திருக்கிறார்.
அவரவர் திறமைகளுக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாறுபடும்.
எப்படி நாம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாகப் பயன்படுகிறதோ
அவ்வாறே நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக வாழ்வோம்,
ஆனால் எல்லோரும் கடவுளுக்காக வாழ்வோம்.
கடவுளுக்காக வாழ்வதே செப வாழ்வு.
கடவுள் நம்மில் சிலரை குருத்துவ அந்தஸ்துக்கு அழைக்கிறார்.
அவர்களில் சிலரை ஆயர் அந்தஸ்துக்கு அழைக்கிறார்.
சிலரை சந்நியாச வாழ்வுக்கு அழைக்கிறார்.
இவர்கள் திருமணம் என்னும் தேவதிரவிய அனுமானத்தைப் பெறாமல் இறைவனுக்காக வாழ்பவர்கள்.
துறவற வாழ்க்கைக்கு அழைக்கப் படாமல் உலகில் வாழ்பவர்களும் அவர்கள் வாழும் நிலையில் இறைவனுக்காக வாழ்பவர்கள் தான்.
பரிசுத்த வாழ்வு துறவரத்தில் உள்ளவர்களுக்கும், இல்லற வாசிகளுக்கும் பொதுவானது.
திருக்குடும்பத்தில் யோசேப்பு ஒரு Widower.
திருமண வாழ்க்கையைப் புனிதமாக வாழ்ந்தவர்.
அவரது மனைவி இறந்த பின்
அவரை இறைமகன் இயேசு தன் வளர்ப்புத் தந்தையாகத் தேர்வு செய்தார்.
அன்னை மரியாள் மனைவி ஆனபின்னும் துறவியாகவே வாழ்ந்தாள்.
இருவரும் இயேசுக்காகவே செபவாழ்வு வாழ்ந்தார்கள்.
துறவிகள் மட்டுமல்ல இல்லற வாசிகளும் கற்பு நெறியோடு வாழ வேண்டும்.
கற்பு அனைவருக்கும் பொதுவானது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத் தீர்மானமப் படி அனைத்துக் கிறிஸ்தவர்களும் குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
குருக்களும் ஆயர்களும் பணிக் குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள்.
இல்லறவாசிகள் பொதுக்குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள்.
இல்லறவாசிகளாகிய நாம் திருப்பலி காண்பதற்கோ, திருப்பலி நிகழ்வில் கலந்து கொள்வதற்கோ கோவிலுக்குச் செல்லவில்லை.
நாமும் குருவோடு இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுக்கச் செல்கிறோம்.
காணிக்கைப் பொருள்கள் பீடத்திற்கு கொண்டுவரப்பட்டதும்,
குருவானவர் அவற்றை ஆசிர்வதித்து
"சகோதர சகோதரிகளே,
எனது பலியும் உங்களது பலியும்,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்புடையதாகும்படி மன்றாடுங்கள்." என்று செபிக்கிறார்.
"எனது பலியும் உங்களது பலியும்,"
என்ற வார்த்தைகள் திருப்பலியைக் குருவானவரும் இறை மக்களும் இணைந்து ஒப்புக் கொடுக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம்.
குருக்களின் வாழ்க்கை முறையும் இல்லற வாசிகளின்
வாழ்க்கை முறையும் வித்தியாசமாக இருந்தாலும்
இருவர் வாழ்வதும் இறைவனோடு ஒன்றித்த செபவாழ்வுதான்.
அருள் நிறைந்த அன்னை மரியாள் அவளது நிலைக்கு ஏற்ப அனைவரிலும் மேலான செப வாழ்வு வாழ்ந்தாள்.
மற்ற புனிதர்கள் அவர்களது நிலைக்கு ஏற்ப செப வாழ்வு வாழ்ந்தார்கள்.
நாம் நமது நிலைக்கு ஏற்ப செப வாழ்வு வாழ்வோம்.
100 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் ஒன்று இருக்கிறது.
50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் ஒன்று இருக்கிறது.
20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் ஒன்று இருக்கிறது.
ஒரு தம்ளரும் இருக்கிறது.
நான்கையும் நீரால் நிறப்புவோம்.
100 லிட்டர் பாத்திரத்தோடு ஒப்பிடும்போது தம்ளரில் குறைந்த அளவு தண்ணீர் தான் இருக்கிறது.
ஆனாலும் 100 லிட்டர் பாத்திரத்தைப் போலவே தம்ளரும் நிறைந்திருக்கிறது.
அன்னை மரியாள் அவள் அளவுக்கு இறைவனால் நிறைந்திருக்கிறாள்.
நாம் பொடியர்கள் தான், ஆனாலும் நம் அளவு இறைவனால் நிறைந்திருப்போமே.
ஆண்டவர் இயேசு அனைவருக்கும் பொதுவானவர்.
அன்னை மரியாளுக்கும் மீட்பர் அவர்தான்.
நமக்கும் மீட்பர் அவர்தான்.
புனிதர்கள் வாழ்ந்தது போலவே நாமும் முழு முயற்சி எடுத்து இறைவனுக்காக வாழ்வோம்.
அவர்களைப் போலவே நாமும் நித்திய பேரின்பத்தில் இறைவனோடு ஒன்றித்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment