"மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்."
(லூக்கா.12:51)
சமாதானம் என்றால் நல்லுறவு.
இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்த போது அவர்கள் இறைவனோடு சமாதான உறவில்தான் இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் பாவம் செய்ததால் உறவை விட்டு வெளியேறி விட்டார்கள்.
ஆனால் இறைவன் மாறாதவர்.
அவர்களைப் படைத்த போது எந்த சமாதான நிலையில் இருந்தாரோ அதை விட்டு மாறவில்லை.
மாறியது மனிதன் மட்டும் தான்.
அவரது உறவுக்குள் மீண்டும் மனிதனைக் கொண்டு வரவே அவர் மனிதனோடு சம தானத்துக்கு (சம இடத்துக்கு) இறங்கினார்.
அதாவது மனிதனாகப் பிறந்தார்.
சமாதானத்தின் தேவன் மீண்டும் மனிதனைச் சமாதான உறவுக்குள் ஏற்றுவதற்காக இறங்கி வந்தார்.
நாம் விண்ணகம் ஏற அவர் மண்ணகம் இறங்கி வந்தார்.
இருவரிடையே சமாதானம் நிலவ வேண்டுமென்றால் இருவரும் சம தானத்தில் (சம நிலையில்) இருக்க வேண்டும்.
அதாவது ஆன்மீகத்தில் இருவரும் பரிசுத்த நிலையில் இருக்க வேண்டும்.
இறைவன் பரிசுத்தர்.
மனிதனும் பரிசுத்தமாக இருந்தால் தான் அவன் பரிசுத்தரோடு சமாதானமாக இருக்க முடியும்.
பாவம் செய்த மனிதன் பாவ மன்னிப்பு பெற்றால்தான் பரிசுத்தமாக முடியும்.
நமக்கு மன்னிப்பு தருவதற்காகவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.
மனிதனை சமாதான உறவுக்குள் அழைக்க வந்த இறைவன்
ஏன் "மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்"
என்று சொல்கிறார்?
இயேசு சொல்வது புரிய வேண்டும் என்றால் அவரது இன்னொரு வாக்கையும் மனதில் கொள்ள வேண்டும்.
"நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல."
(அரு.14:27)
நாம் எதைச் சமாதானம் என்கிறோம்?
இரண்டு பேர் சண்டை போடாமல் இருந்தால் அவர்கள் சமாதானமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.
முதல் உலகப் போரின் இறுதியில் வென்ற நாடுகளும்,
தோற்ற நாடுகளும் வெர்சேய்ல்ஸ் நகரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
இதன் நோக்கம் மீண்டும் உலகப்போர் ஏற்படுவதைத் தவிர்ப்பது.
ஆனால் வெர்சேய்ல்ஸ் சமாதான ஒப்பந்தம் தான் இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்று வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.
உண்மையான சமாதானத்துக்கும்,
உலகம் நினைக்கும் சமாதானத்துக்கும் சம்பந்தமே இல்லை.
நாடுகளுக்கு இடையே, அல்லது, மக்களிடையே சண்டை இல்லாதிருந்தால் சமாதானம் என்பது உலகம் நினைக்கும் சமாதானம்.
ஆனால் எங்கே இறையன்பும் பிறரன்பும் நிலவுகிறதோ அங்கே தான் உண்மையான சமாதானம் நிலவ முடியும்.
சமூகத்தின் சிறு அலகான குடும்பத்தை எடுத்துக் கொள்வோம்.
குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் லௌகீகவாதிகள்
பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள்.
ஆகவே பண விடயத்தில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
பணம் ஈட்டும் வேலையை ஒற்றுமையாகச் செய்பவர்கள்.
அவர்களுக்கு இயேசுவின் நற் செய்தி அறிவிக்கப்படுகிறது.
பிள்ளைகள் நற் செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள்.
லௌகீக பாதையை விட்டு விட்டு ஆன்மீக பாதைக்கு வருகிறார்கள்.
பணம் ஈட்டுவதை விட இறை அன்புக்கும் பிறர் அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால் பெற்றோர் நற் செய்தியை ஏற்கவில்லை, மனம் திரும்பவில்லை.
பணமே எல்லாம் என்று நினைப்பதிலிருந்து மாறவில்லை.
இப்போ குடும்பத்தில் என்ன நடக்கும்?
கருத்து வேறுபாடு தலை தூக்கும்.
பணவிசயத்தில் பெற்றோர் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள்.
'தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர். "
(லூக்கா.12:53)
இதைத் தான் இயேசு
'மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்" என்கிறார்.
லௌகீக வாதிகள் நினைக்கிற சமாதானம் வேறு, ஆன்மீக வாதிகள் நினைக்கிற சமாதானம் வேறு.
லௌகீகத்தில் கூட கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக செயல் பட்டால் அதுவே லௌகீக வாதிகளுக்கு சமாதானம் தான்.
ஆனால் ஆன்மீக வாதிகள் லௌகீக வாதிகளோடு ஒத்துப் போக முடியாது.
கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையில் நிலவும் சமாதானமே உண்மையான சமாதானம்.
ஆண்டவர் நற் செய்தியை அறிவித்த போது யூத மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு விட்டதே.
பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவேயில்லையே.
அதன் காரணமாகத்தானே இயேசு பாடுகள் படவும், சிலுவையில் மரிக்கவும் நேரிட்டது.
இந்திய மொத்த மக்கள் தொகையில் 1.57சதவீதம் பேரே கத்தோலிக்கக் கிறித்தவர்கள்.
நாம் சிறுபான்மையினர்.
மற்ற மக்களிடமிருந்து நம்மைப் பிரித்து வைத்திருப்பதே நாம் பின்பற்றும் இயேசுவின் போதனை தான்.
இயேசுவின் போதனைப் படி அனைவரையும் நேசிக்கிறோம்.
ஆனால் நமது வாழ்க்கை இயேசுவின் நற்செய்தியின் படியானது.
ஆகவே மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்து விட வித்தியாசமானது.
நாம் வாழும் இயேசுவின் சமாதானம் உலகம் தரும் சமாதானத்தைப் போன்றது அல்ல.
இதைத் தான் இயேசு "மண்ணுலகில் சமாதானத்தை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சொல்கிறார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment