Monday, August 25, 2025

"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்."(மத்தேயு.23:25)



"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்."
(மத்தேயு.23:25)

யூத மக்களை மத ரீதியாக வழிநடத்தி வந்த மறை நூல் அறிஞர்கள்,  பரிசேயர்கள் ஆகியோரின் வாழ்க்கையின் உட்புறம் பாவங்கள் நிறைந்ததாகவும் 

வெளிப்புறம் தூய்மையானது போல தோற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று கூறிய 

இயேசு உட்புறம் தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாக இருந்து உட்புறம் அசுத்தமாக இருந்தால் 

அந்த பாத்திரங்களில் நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சியைத் தருவதற்கு பதிலாக நோய்களையே உற்பத்தி செய்யும்.

அதுபோல அழகான உடலுக்குள் பாவங்கள் நிறைந்த ஆன்மா வசிக்குமானால் அப்படிப்பட்டவர்கள்
 நிலைவாழ்வை அடைய மாட்டார்கள். 

ஆன்மீகத்தில் புறத் தூய்மையை விட அகத்தூய்மையே முக்கியம்

அகத்தில் அசுத்தத்தை வைத்துக்கொண்டு புறத்தில் தூய்மையானவர்களைப் போல நடிப்பவர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்கிறார்.

மனிதர்களுக்கு நம்முடைய புறம் மட்டும் தான் தெரியும், அகம் தெரியாது.

ஆகவே நமது புறத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தீர்மானித்து விடுவார்கள்.

ஆகவே நமது நடிப்பால் அவர்களை ஏமாற்றி விடலாம்.

ஆனால் கடவுளுக்கு நமது அகமும் தெரியும், புறமும் தெரியும்.

கடவுளை ஏமாற்ற முடியாது.

கடவுளைப் பொருத்த மட்டில் நமது அகம், அதாவது, ஆன்மா தூய்மையாக இருப்பதே முக்கியம்.

ஆன்மா தூய்மையாக இருக்கிறது என்றால் அது பாவம் இன்றி பரிசுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.

நமது ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் ஆன்மீகம்.

ஆன்மாவைப் பொருத்த மட்டில் நோய் என்பது பாவம்.

ஆன்மா நோய் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆன்மா நோய்வாய்ப் பட்டால், அதாவது, நாம் பாவம் செய்ய நேரிட்டால் ஆன்மீக மருத்துவராகிய குருவானவரை அணுகி, பாவ மன்னிப்புப் பெற்று குணமாக
வேண்டும்.

உடல் நோய்வாய்ப் பட்டால், அது ஆன்மாவை எந்த வகையிலும் பாதிக்காது.

மாறாக உடல் நோயை சிலுவையாக ஏற்றுக் கொண்டு, சிலுவையைச் சுமந்து ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் நமது ஆன்மா அதிக பரிசுத்தமாக மாறும்.

விண்ணகத்தில் நமது பேரின்பம் அதிகரிக்கும்.

நாம் உலகில் பிறந்ததே பாவம் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்ந்து விண்ணக வாழ்வை ஈட்டுவதற்காகத் தான்.

பர்ணஞானம் அல்போன்சா சகோதரி தன் வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டு, நோயின் உதவியால்தான் புனித அல்போன்சாவாக மாறினாள்.

புனித பிரான்சிஸ் அசிசியார் தனது பரிசுத்தமான வாழ்வுக்கு பரிசாக இயேசுவிடமிருந்து ஐந்து காய வரம் பெற்றார்.

காயங்களின் வேதனையை இயேசுவுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்.

நமது உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம்.

தூய்மையான உள்ளத்தில் தூய்மையான சிந்தனை பிறக்கும்.

சிந்தனை தூய்மையானால் சொல்லும், செயலும் தூய்மையாக இருக்கும்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தூயவர்களாக வாழ தூய ஆவியின் வரம் கேட்டு வேண்டுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment