"நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
(மாற்கு.6:23)
ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்திருந்தான்.
அது தவறு என்று திரு முழுக்கு யோவான் சுட்டிக்காட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஏரோதியாள் அவரைக் கைது செய்யும்படி ஏரோதுவைக் கேட்டுக் கொண்டாள்.
அவளைத் திருப்திப் படுத்துவதற்காக அவரைக் கைது செய்தான்.
ஏரோதியாளைத் திருப்திப் படுத்துவதற்காக யோவானைக் கைது செய்தது போலவே நடனமாடிய அவளது மகளைத் திருப்திப் படுத்துவதற்காக,
"நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
இது சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டு கொடுத்த வாக்குறுதி.
அவள் தனது தாயின் விருப்பப்படி யோவானின் தலையைக் கேட்டாள்.
ஏரோது இதை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் வாக்குறுதி கொடுத்தது கொடுத்ததுதானே.
வேறு வழியின்றி தனது விருப்பத்துக்கு மாறாக யோவானின் தலையை வெட்டச் செய்தான்.
சிந்தியாமல் கொடுத்த வாக்குறுதிக்காக அவனுக்குக் கிடைத்த தண்டனை இது.
பைபிளில் இது ஏரோதுவுக்கு கிடைத்த தண்டனை என்று நேரடியாகக் கூறப்படாவிட்டாலும்,
இந்தச் செயல் அவனது மனதிற்குப் பெரும் வேதனையையும், குற்றவுணர்வையும் அளித்திருக்க வேண்டும்.
பிறர் செய்த தவறுகளிலிருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுளுடைய கட்டளையை நமது முதல் பெற்றோர் மீறியதால் அவர்களுடைய பிள்ளைகளுடைய வாழ்வு பாதிக்கப்பட்டது.
குடும்பத்தில் பெற்றோர் செய்கிற பாவங்கள் துர்மாதிரிகையாக செயல்பட்டு குடும்பத்தினர் அனைவரின் ஆன்மீக வாழ்வையும் பாதிக்கும் என்று பெற்றோர் உணர வேண்டும்.
குடிகாரத் தந்தையின் மகனும் குடிகாரனாக மாறுவதை அனுபவப் பூர்வமாக பார்க்கிறோம்.
ஏரோதுவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?
உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் சரியான விளைவுகளைத் தராது.
ஏரோது உணர்ச்சி வசப்பட்டு வாக்குக் கொடுத்ததால்
அவன் காப்பாற்ற ஆசைப்பட்ட யோவானை அவனே கொன்று விட்டான்.
நமது அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் கோபம், பொறுமை இன்மை, பேராசை போன்ற வேண்டாத குணங்களின் காரணமாக நாம் எடுக்கும் அவசர முடிவுகள் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒரு சிறு வாக்குவாதம்.
மனைவி விலை உயர்ந்த பட்டுச்சேலை ஒன்று வாங்க ஆசைப்படுகிறாள்.
கணவனின் பொருளாதாரம் நிலை அதற்கு ஒத்து வரவில்லை.
இதன் காரணமாக அவர்களே வாக்குவாதம் ஏற்படுகிறது.
வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது.
மனைவி உணர்ச்சிவசப்பட்டு,
"ஒரு சேலை கூட எடுத்துத் தர வக்கில்லாத உங்களோடு வாழ்வதும் ஒன்றுதான், சாவதும் ஒன்றுதான்.
இனி உங்களோடு வாழப்போவதில்லை.
எங்கள் அம்மா வீட்டுக்கு போகிறேன்.
உயிர் போனாலும் திரும்பி வர மாட்டேன்.
இதுதான் உங்களோடு பேசும் கடைசி வார்த்தை." என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டு தனது பொருட்களையும் எடுத்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய் விடுகிறாள்.
அதே கோப உணர்வோடு நாட்கள் கடக்கின்றன.
நாட்கள் மாதம் ஆகிறது.
கோபம் போய்விட்டது.
ஆனால் தன்மான உணர்ச்சி இருவரையும் கட்டி போட்டு விட்டது.
உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்காக வருந்தினாலும் மாதங்கள் கடந்தும் ஒன்று சேர முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர் உலகில் உள்ளனர்.
காரணம் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுதான்.
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் நல்ல விளைவுகளைத் தராது.
ஏரோது தன் அற்பமான கௌரவத்திற்காக யோவானைக் கொன்றான்.
ஒரு அரசனாக, அவன்
தான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கலாம்.
ஆனால் உணர்ச்சிவசப்பட்டு வாக்குக் கொடுத்ததால், அவன் ஒரு தவறான முடிவை எடுத்து, பின்னர் வருந்தினான்.
தம்பதியரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல சூழ்நிலைகளுக்குப் பொருந்தும்.
கோபம், பொறுமையின்மை அல்லது பேராசை போன்ற உணர்வுகள் நம்மை அவசரமான, முதிர்ச்சியற்ற முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றன.
உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைத் தவிர்ப்பது எப்படி?
ஒரு நிமிடம் அமைதியாக இருப்போம்.
கோபம் அல்லது மன வருத்தம் ஏற்படும்போது, உடனே பதில் அளிக்க வேண்டாம்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, நமது மனதை அமைதிப்படுத்திக் கொள்வோம்.
பின்விளைவுகளை யோசிப்போம்.
நாம் எடுக்கப்போகும் முடிவின் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி யோசிப்போம்.
நமது வார்த்தைகள் அல்லது செயல்கள் மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பதை சிந்திப்போம். .
மன்னிப்பு கேட்போம்.
உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால், தயங்காமல் மன்னிப்பு கேட்போம்.
இது நமது உறவை காப்பாற்ற உதவும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம்.
நாம் எடுத்த முடிவுகள் சரி என்று பிடிவாதம் பிடிக்காமல், நமது முடிவுகளை மாற்றிக்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்வோம்.
இது நமது வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.
கணவனும் மனைவியும் தங்கள் கோப உணர்வைக் கட்டுப்படுத்தியிருந்தால்,
அந்தப் பட்டுச் சேலை பிரச்சனையாக மாறியிருக்காது.
உறவை பாதித்திருக்காது.
இது ஒரு உதாரணம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கத் தூண்டும் சந்தர்ப்பங்கள் நிறைய வரும்.
அப்போதெல்லாம் ஏரோதுவையும், திரு முழுக்கு யோவானையும் நினைத்துக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment