Monday, August 11, 2025

"அதற்கு இயேசு அவரிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்."(மத்தேயு.18:22)



"அதற்கு இயேசு அவரிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு.18:22)

இராயப்பர் இயேசுவிடம் தனக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை ஏழு முறை மன்னித்தால் போதுமா என்று கேட்கிறார்.

அதற்கு இயேசு குற்றம் செய்பவர்களை மன்னிப்பதற்குக் கணக்கே கிடையாது. கணக்கற்ற முறைகள் மன்னிக்க வேண்டும் என்கிறார்.

எனக்கு ஒரு Boarding Prefectஐத் தெரியும். அவருக்கு மாணவர்கள் வைத்திருந்த பெயர் 'Sorry Father.'

மாணவர்கள் ஏதாவது தப்பு செய்து அவரிடம் விசாரணைக்கு வந்தால் விசாரணை ஆரம்பிக்கும் முன்பே குற்றம் சாட்டப்பட்ட மாணவன் "Sorry Father"  என்று சொன்னால் விசாரிக்காமலே மன்னித்து விட்டு விடுவார்.

சம்பந்தப்பட்ட மாணவன் திரும்ப தப்பு செய்ய மாட்டான்.

யாரிடமும் கடுமையாக பேசமாட்டார்.  மாணவர்கள் அவருக்குப் பயப்பட மாட்டார்கள்.

ஆனால் மாணவர்கள் அவரிடம் தந்தைக்குரிய மரியாதை வைத்திருந்தார்கள்.

ஒரு நாள் ஒரு மாணவன் Dismiss பண்ணப்படக்கூடிய அளவுக்கு ஒரு தப்பு செய்து விட்டான்.

விசாரணைக்கு அழைக்கப்படு முன்பே அவனாகவே அவரிடம் சென்று தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு Sorry Father என்று கூறி மன்னிப்புக் கேட்டு விட்டான்.

சாமியாரும் மன்னித்து விட்டு விட்டார்.

குற்றம் செய்வது மனித குணம்.  
மன்னிப்பது தெய்வ குணம்.

To err is human.
To forgive is divine.

இறை மகனாக இருந்ததால்தான் இயேசு மனிதனை மன்னிப்பதற்காக  மனிதனாகப் பிறந்தார்.

மனிதனின் உடல் நோயைக் குணமாக்கு முன் முதலில் அவனுடைய பாவங்களை மன்னித்தார்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயர்கள் இயேசுவின் முன் கொண்டு வந்து நிறுத்திய போது அவர் அவளைத் தண்டிக்கவில்லை.

மன்னித்து விட்டு விட்டார்.

"இனி பாவம் செய்யாதீர்" என்று அறிவுரை கூறி விட்டு விட்டார்.

நாம் பாவம் செய்யப் பயப்பட வேண்டும்.

ஆனால் செய்தபின் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பாவம் செய்ததற்காக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார்.

திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும் திரும்பத் திரும்ப வருந்தி மன்னிப்புக் கேட்டாலும் திரும்பத் திரும்பவும் மன்னித்து விடுவார்.

எத்தனை முறை திரும்பத் திரும்ப?

எண்ண முடியாத முறை.

கடவுள் அவரது எல்லா பண்புகளிலும் அளவற்றவர்.

மன்னிக்கும் பண்பிலும் அளவற்றவர்.

எல்லாம் வல்ல அவரால் மன்னிப்பு விடயத்தில் அவரால் மன்னிக்காமல் இருக்க முடியாது.

பாவ மன்னிப்புப் பெற எத்தனை தடவை வேணுமானாலும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

சங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை கூடும் போது பாவங்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வரும்.

திருவிழாக் காலங்களில் கோவிலை அலங்காரம் செய்வதற்கும், 
கொட்டு மேளத்துக்கும்,
சப்பரம் தூக்குவதற்கும், ‌சாப்பாட்டுக்கும்
 கொடுக்கப் படும் முக்கியத்துவத்தை விட பாவ சங்கீர்த்தனத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டும்.

முந்தியவையால் நமது ஆன்மாக்களைச் சுத்தப்படுத்த முடியாது.

எத்தனை குருக்கள் பூசை வைக்கிறார்கள் என்பதை விட எத்தனை குருக்கள் பாவ சங்கீர்த்தனம் கேட்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

எத்தனை பேர் அசன விருந்து சாப்பிடுகிறார்கள் என்பதை நாம் எண்ணுவோம்.

எத்தனை பேர் பாவ மன்னிப்பு பெற்றார்கள் என்பதைக் கடவுள் எண்ணுவார்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.

இறைவனின் அன்புக்கு அளவில்லை.

இரக்கத்துக்கும் அளவில்லை.

மன்னிப்புக்கும் அளவில்லை.

மன்னிக்கும் குணம் ஒரு சமுத்திரம் போல.

சமுத்திரத்தில் குதித்து நீராடி மகிழ்வோம்.

தனது மன்னிக்கும் பண்பைக் கடவுள் நம்மோடும் பகிர்ந்துள்ளார்.

நாமும் மன்னிப்போம், மன்னித்துக் கொண்டேயிருப்போம்.

"விண்ணகத் தந்தையே, நாங்கள் எங்களுக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களை மன்னிப்பது போல எங்கள் பாவங்களை மன்னியும்."

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment