Tuesday, August 26, 2025

"இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்."(லூக்கா .7:15)


"இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்."
(லூக்கா .7:15)

ஒரு ஏழை விதவைத் தாய்க்கு ஆறுதலாக இருந்த ஒரே மகன் இறந்து விட்டான்.

இயேசு அவள் மீது பரிவு கொண்டு இறந்தவனுக்கு உயிர் கொடுத்து, அவனை அவனது தாயிடம் ஒப்படைத்தார்.

இயேசு கடவுள் என்ற கோணத்திலிருந்து இதைப் பற்றி தியானிப்போம்.

இதை தியானிப்பதற்கு முன் இன்னொரு இறை வசனத்தைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு நாள் இயேசு சீடர்களோடு சென்றுகொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். 

சீடர்கள் இயேசுவிடம் 

"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்;காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று  கேட்டார்கள். 

அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்."

இவ்வார்த்தைகளைக் கூறியவர் கடவுள். 

அவரின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.

அவன் குருடனாக பிறந்ததற்கு காரணம் அனைத்துக்கும் ஆதி காரணராகிய கடவுள்தான்.

 அவரது மகிமை வெளிப்படும்பொருட்டே அவனை அப்படி பிறக்கச் செய்தார்.


Suppose,

இதே கேள்வியைச் சீடர்கள் விதவை தாயின் இறந்த மகனைப் பற்றியும் கேட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

"இந்தப் பையன் இறந்ததற்கு இவன் செய்த பாவம் காரணமா? இவனுடைய அம்மா செய்த பாவம் காரணமா?"

என்று கேட்டால் ஆண்டவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் அம்மா செய்த பாவமும் அல்ல; 

கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படி இறந்தார்."

என்றுதான் சொல்லியிருப்பார்.

அனைத்தையும் படைப்பவர் கடவுள். 

பாவம் தவிர, மற்ற அனைத்தும் அவரது விருப்பப்படி தான் நடக்கின்றன.

பாவம் மட்டும் அவருடைய விருப்பத்திற்கு எதிரானது.

நாம் பிறந்தது, வளர்ந்தது. கற்றது, நோய் வாய்ப்பட்டது, சுகமானது, நோயிலையே தொடர்வது, விழுவது, எழுவது போன்ற அனைத்தும் அவரது விருப்பப்படிதான் நடக்கின்றன. 

நடப்பது அனைத்தும் அவரது மகிமை வெளிப்படவே.

செழிப்பு, பஞ்சம், புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி, தொற்று நோய்கள்... எதுவும் அவரது அனுமதியின்றி நம்மைத் தாக்க முடியாது.

அவை யாவும் அவரது மகிமை வெளிப்படவே அனுமதிக்கப்படுகின்றன. 

வேளாங்கண்ணியில் நடக்க முடியாத படி ஒரு பையனை ஏன் கடவுள் படைத்தார்? 

அன்னை மரியாள் மூலம் அவரது மகிமை வெளிப்படுவதற்காக. 

எது நடந்தாலும் இறைவனாலேயே என்ற விசுவாசம் நமது மனதில் ஆழமாக பதிந்திருந்தால், 

நமக்கு என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். 

என்ன நேர்ந்தாலும் இறைவனது மகிமைக்காக அவருக்கே ஒப்புக் கொடுப்போம்.

பாவம் அவரது விருப்பத்திற்கு எதிரானதாகையால் நாம் பாவம் செய்ய மாட்டோம்.

பாவத்துக்கு  நாம்தான் பொறுப்பு.

பாவம் கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது.

ஆனாலும்  மனிதனைத் தன் சாயலாகப் படைத்த கடவுள் பரிபூரண சுதந்திரம் என்ற தனது பண்பையும் அவனோடு பகிர்ந்து கொண்டார். 


மனிதன் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி பாவம் செய்தான். 

ஆனால் சுதந்திரம் கடவுளால் கொடுக்கப்பட்டிருப்பதால் அதில் அவர் தலையிடவில்லை. 

தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.

ஆனாலும் மனிதன் செய்த பாவத்தையும் தனது மகிமை வெளிப்பட கடவுள் பயன்படுத்திக் கொண்டார். 

தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க அவர் வல்லமை பெற்றவர். 

மனிதனாக பிறந்து, 
பாடுகள் பட்டு, 
சிலுவையில் மரித்து மனிதனுடைய பாவத்துக்குப் பரிகாரம் செய்ததின் மூலம் அவன் மேல் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தினார்.

பாவிகளை மன்னித்து அவருடைய மகிமைக்காக அவர்களை வாழச் செய்தார்.

தனது அன்பின் மிகுதியால் பாவிகளைக்கூட புனிதர்களாக மாற்றினார். 

புனித அகுஸ்தீனார் 30 ஆண்டுகள் பாவியாக வாழ்ந்தவர். 

மனம் திரும்பி  புனிதரானார்.

மன்னிக்கப்பட்ட பாவிகளுக்கு நித்திய பேரின்ப வாழ்வை அளிப்பதன் மூலம் அவரது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நமது நோய் மருத்துவருடைய திறமையை வெளிக் கொணர்வது போல, 

நமது பாவம் கடவுளுடைய அன்பை நாம் உணரும்படி செய்திருக்கிறது. 

தனது மரணத்தால் நமது பாவத்தை வென்றதோடு 

தனது உயிர்ப்பால் அவரது மகிமையை நாம் உணரும்படி செய்திருக்கிறார். 

பாவம் செய்பவர்கள் அதற்காக வருந்துவது மூலம் பாவ மன்னிப்புப் பெற்று நித்திய பேரின்ப வாழ்வை ஈட்ட நமக்கு வரம் தந்திருக்கிறார்.

கடவுள் நித்திய காலமும் மகிமையோடு வாழ்பவர். 

உலகில் நிகழும் எல்லா நிகழ்வுகளும் அவரது மகிமையை நாம் அறியச் செய்கின்றன. 

பாவிகளாகிய நாம் பாவ மன்னிப்பு பெறும்போது அவரது அளவுகடந்த அன்பை உணர்கிறோம்.

இயற்கையைப் படைத்தவர் அவர். 

அது அவருக்கு கட்டுப்பட்டது. 

எத்தகைய இயற்கை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் நாம் அதில் கடவுளுடைய மகிமையைக் காண வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.

மரணம் நேர்ந்தால்?

மகிழ்ச்சியோடு நன்றி கூற வேண்டும், ஏனெனில் மரணம் தான் விண்ணக வாழ்வுக்கான நுழை வாயில்.

இவ்வுலக வாழ்வு முடியும்போது விண்ணக வாழ்வு ஆரம்பிக்கிறது. 

"இறைவா, உமக்கு நன்றி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment