Wednesday, August 6, 2025

இரவும் பகலும் இறை வாக்கு நம்மோடு.




இரவும் பகலும் இறை வாக்கு நம்மோடு.


நாம் ஒவ்வொரு வினாடியும், அதாவது, எப்போதும் இறைவன் சந்நிதானத்தில் வாழ வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பம்.

இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். 
(1 தெசலோனிக்கர் 5:17)

ஆனால் நாம் இறைப் பிரசன்னத்தில் வாழ நேரம் ஒதுக்கியிருக்கிறோம்

காலை செபத்துக்குக் கால் மணி நேரம், 

இரவு செபத்துக்குக் கால் மணி நேரம், 

ஞாயிறு திருப்பலிக்கு ஒரு மணிநேரம் 

என்று நேரம் ஒதுக்கி அந்நேரத்தில் இறைவனோடு ஒன்றித்திருக்க முயல்கிறோம்.

ஆனால் பெரும்பாலும் நமது முயற்சி முழு வெற்றி பெறுவதில்லை.

அப்போது தான் செபத்தோடு சம்பந்தம் இல்லாத எண்ணங்கள் மனதில் நுழைய போராடும்.

அவற்றை நுழைய விடாமல் நாம் செய்யும் போராட்டத்தில்  செப நேரம் கடந்து விடும்.

ஆனாலும் தினமும் நாம் போராடி செபித்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

ஆனாலும் முழு வெற்றி என்று கூற முடியாது, ஏனெனில் நாம் பலகீனர்கள்.

அது மட்டுமல்ல நாம் செபம் செய்ய அமரும் போதே அதை விட முக்கியமான வேலை இருப்பது போல் தோன்றும்.

"இன்று School inspection. சீக்கிரம் போக வேண்டும்." என்று எண்ணிக் கொண்டே செப நேரத்தைக் குறைத்து விடுவோம்.

ஆனால் நாம் இறைப் பணியாளர்கள் என்பதற்கு முதலிடம் கொடுத்தால் செப நேரத்தைக் குறைக்க  மாட்டோம்.

நாம் வாய்மொழி செபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மனதில் பராக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆகவே மௌனமாக, 
 மனதை ஆண்டவரில் ஒரு நிலைப்படுத்தி செபித்தால் பராக்குகள் ஏற்படாது.

இவ்வாறு குறைந்த நேர செபத்தில் மனதுக்கு பயிற்சி கொடுத்தால் அது முழு நேர செபத்துக்கு உதவியாக இருக்கும்.

முழு நேர செபம் என்றால்?

இரவும் பகலும், 24 மணி நேரமும் ஆன செபம்.

அப்படியானால் இரவில் தூங்க வேண்டாமா?

பகலில் நமது அந்தஸ்தின் கடமைகளைச் செய்ய வேண்டாமா?

ஆசிரியர் பாடம் நடத்த வேண்டாமா?

விவசாயி நிலத்தில் வேலை செய்ய வேண்டாமா?

உண்மையில் நமது அந்தஸ்தின் கடமைகளும் செபம் தான், அவற்றைக் கூலிக்காகச் செய்யாமல் இறைவனது மகிமைக்காகச் செய்தால்.

தூக்கம் கூட செபம் தான், தூக்கத்தை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டால்.

"தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே" என்று செபித்துக் கொண்டு படுத்தால் தூக்கமும் செபம் தான்.


விவசாயி நிலத்தில் வேலை செய்தால் பண ரீதியாக வருமானம் வரும்.

அது இயல்பு.

ஆனால் பணி புரிபவன் பண வருமானத்தை நோக்கமாகக் கொள்ளாமல் இறைவனின் மகிமைக்காக நிலத்தில் வேலை செய்தால் 

லௌகீகம் சார்ந்த வருமானம் வருவதோடு அவனது நித்திய பேரின்ப வாழ்வும் நிச்சயிக்கப் படுகிறது.

இதனால் அவனது லௌகீக வருமானம் ஆன்மீக வருமானமாக மாறி விடுகிறது.

அது மட்டுமல்ல அவன் குறைந்த நேர செபத்தின்போது பராக்கின்றி செயல்புரிய பயிற்சி பெற்று விட்டபடியால் தனது முழு நேர வேலையையும் பராக்கின்றி செய்வான்.

இதனால் வேலைத்தரம் அதிகரிப்பதோடு அதன் விளைவாக வருமானமும் அதிகரிக்கும்.

இவ்வுலகில் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான பொருள் வளமும்,  மறுவுலகில் பேரின்ப வாழ்வுக்கான அருள் வளமும் அதிகரிக்கும்.

காலை செபத்தின்போது நாம் வாசிக்கும் பைபிள் வாசகம் பகல் முழுவதும் நம்மை வழி நடத்தும்.

காலையில் பகைவனை நேசிப்பது பற்றிய பைபிள் வசனத்தை வாசித்திருந்தால் அது உள்ளத்தின் அடியில் தங்கி

நமது சொல்லாலும் செயலாலும் நண்பர்களைச் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

யாராவது நம்மைப் பார்த்து திட்டினால் நாம் பதிலுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தால் அப் புன்னகை அவனை நமது நண்பனாக்கி விடும்.

காலையில் வாசித்து நாம் செல்லுமிடமெல்லாம் நம்மோடு வரும் இறை வாக்கு குற்றம் செய்வோரை மன்னிக்கும்,

சண்டை இருக்கும் இடத்தில் சமாதானத்தை விதைக்கும், 

வெறுப்பை அன்பாக மாற்றும்,

கவலையை மகிழ்ச்சியாக மாற்றும்,

பசிப்பவர்களுக்கு உணவு கொடுக்கும்,

தவிப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும்,

அவதிப் படுபவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும்.

இயேசு சென்ற இடமெல்லாம் என்ன செய்தாரோ அதையெல்லாம் அவரது வாக்கும் செய்யும்.

தினமும் இரவும் பகலும் செபிப்போம், இறைவன் நம்மோடு தான் இருக்கிறார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment