Sunday, August 24, 2025

"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"(மத்தேயு .23:17)



"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"
(மத்தேயு .23:17)

 மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும், 

"திருக்கோவிலின்மீது ஆணையிட்டால். ஒன்றுமில்லை; 

ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்."

என்று கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி 

இயேசு அவர்களைப் பார்த்து,

"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"

என்கிறார்.

கோவில் என்றால் என்ன?

 இறைவனை அனைவரும் பொதுவாக வழிபடுவதற்காக மக்கள் ஒன்று கூடும் இடம். 

அவரவர் வீட்டில் தனித்தனியே வழிபடுபவர்கள் கிறிஸ்தவ சமூகம் எந்த முறையில் எல்லோரும் ஒன்று கூடி ஒரே குடும்பமாக வழி படுவதற்காக கட்டப்பட்டிருப்பது தான் கோவில், ஆலயம்.

நமது ஆலயத்தில் மனுமகனான இறைமகன் திவ்ய நற்கருணையில் வாசம் செய்கிறார். 

ஆகவே ஆலயம் இறைவன் வாழும் வீடு. நாம் இறைவனின் பிள்ளைகள், ஆகவே ஆலயம் நமது வீடு.

வீட்டின் பராமரிப்புக்காகவும் அதில் வாழும் மக்களின் பராமரிப்புக்காகவும் தேவைப்படும் பணத்தை ஈட்ட மக்கள் வேலைக்குச் செல்கிறார்கள். 

ஆலயத்தைப் பொருத்தமட்டில் ஆலய பராமரிப்புக்காக நாம் காணிக்கை செலுத்துகிறோம். 

நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது,

ஆலய பராமரிப்புக்காக நாம் காணிக்கை செலுத்துகிறோம்,

காணிக்கைக்காக ஆலயம் பராமரிக்கப்படுவதில்லை. 

வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம்,

சாப்பிடுவதற்காக வாழவில்லை. 

சாப்பிடுவதற்காக வாழ்பவன் மடயன், அதாவது, புத்தியைப் பயன்படுத்த தெரியாதவன்.

ஆண்டவர் பரிசேயர்களை நோக்கி, 

"குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?"

என்று சொல்கிறார். 

அவர்கள் கோவிலை விட அங்கு வசூலாகும் காணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

"யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; 

ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்."

என்று மக்களுக்குப் போதித்தார்கள்.

கோவிலை விட அங்குள்ள பொன்னுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். 

ஆகவேதான் அவர்களை இயேசு "குருட்டு மடையர்கள்" என்கிறார். 

ஆன்மீக ரீதியாக அவர்களுக்கு கண்ணும் தெரியவில்லை, புத்தியை பயன்படுத்தவும் தெரியவில்லை. 

அவர்கள் இப்போது இல்லை. 

இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும் நாம் இப்போது வாழ்கிறோம். 

நாம் ஆலயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட 

அங்கு செலுத்தப்படும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் ஆண்டவரது வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

திருப்பலியின் போது ஏன் காணிக்கை செலுத்துகிறோம்? 

திருப்பலியில் நமது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக. 

உண்டியலில் நாம் ஏன் காணிக்கை போடுகிறோம்? 

ஆலய பராமரிப்புக்காக.

கோவிலுக்கு ஏன் நன்கொடைகள் கொடுக்கிறோம்? 

ஆலய பராமரிப்புக்காகவும், இறை மக்களுக்கு ஆலயம் செய்யும் உதவிகளுக்காகவும்.

நிதித் திரட்டுவது நோக்கம் அல்ல, ஆலயப் பராமரிப்பு தான் நோக்கம். 

நாம் கடவுளிடம் ஏதாவது உதவி கேட்கும் போது நேர்ச்சை செய்கிறோம். 

நாம் கேட்பது கிடைத்துவிட்டால் இவ்வளவு தொகை ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுத்து விடுகிறோம் என்று.

காணிக்கையின் நோக்கம் இறைவனைக் கவர்வது அல்ல.

உலகில் உள்ள அனைத்தும், அதில் வாழும் மக்கள் உட்பட, அவருக்கே சொந்தம். 

அவருக்கு சொந்தமானதை அவரிடம் கொடுப்பதில் என்ன பெருமை இருக்கிறது? 

காணிக்கை கொடுப்பதில் மூலம் நாம் இறை அரசின் குடிமக்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

நாம் இறைவனால் தான் வாழ்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 

காணிக்கை நமது தாழ்ச்சிக்கான அடையாளம்.

ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதாக நேர்வதும் கூட ஒரு காணிக்கை தான். 

கோவில் உண்டியலில் போடுவது எப்படி காணிக்கையோ,  அப்படியே கோவில் முன்னால் கையேந்தி நிற்கும் ஏழைகளுக்குக் கொடுப்பதும் காணிக்கைதான்.

இறைவனால் படைக்கப்பட்டவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் இறைவனுக்கே கொடுக்கிறோம். 

கோவிலில் அசன விருந்து அளிப்பது இந்த நோக்கத்தோடு தான்.

வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அயலானுக்கு என்று ஒதுக்குபவர்கள் பாக்கியவான்கள்.

அவர்களுக்கு இறைவன் தன்னை முழுமையாகக் கொடுத்து விடுவார்.

இறைவன் வாழும் வீடு ஆலயம்.

அனைவருடைய உள்ளங்களிலும் இறைவன் வாழ்கிறார்.

அப்படியானால் அனைவரும் இறைவனுடைய ஆலயங்கள் தான்.

ஆலயங்களைப் பராமரிப்பது நம் அனைவரின் கடமை.

ஆனாலும் ஒன்றை நினைவில் கொள்வோம்.

பராமரிப்புக்கு நாம் கொடுப்பதை விட ஆலயங்கள் தான் முக்கியம். 

ஆகவே நமது அயலானை நிபந்தனையின்றி, சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிப்போம். 

லூர்து செல்வம்

No comments:

Post a Comment