"அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்."
(மத்தேயு .22:12)
அரசரின் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் திருமண வீட்டுக்குகா கூட்டி வந்தனர்.
வந்தவர்களில் ஒருவர் திருமண உடை அணிந்திருக்கவில்லை.
மாணவர்கள் வீட்டில் எந்த உடை அணிந்திருந்தாலும் பள்ளிக்கூடம் போகும்போது சீருடை அணிந்து போக வேண்டும்.
அல்லது வெளியே அனுப்பப் படுவார்கள்.
அதேபோல தெருவில் சுற்றும்போது என்ன உடை அணிந்திருந்தாலும் திருமண விருந்துக்கு வரும்போது அதற்குரிய உடை அணிய வேண்டும்.
இல்லாவிட்டால் உள்ளே அனுமதிக்கப் படமாட்டார்கள்.
இந்த உவமை விண்ணுலக விருந்துக்கு அழைக்கப் பட்டவர்களைப் பற்றி பேசுகிறது.
லௌகீகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் எப்படி இருந்திருந்தாலும் ஆன்மீகத்துக்குள் நுழையும் போது உண்மையான ஆன்மீக வாதிகளாக மாற வேண்டும்.
லௌகீகத்தில் வாழும் போது அவர்களிடம் உலகப் பொருட்களின் மீது பற்று இருந்திருக்கலாம்.
ஆனால் ஆன்மீகத்திற்குள் நுழைந்த வினாடி உலகப் பற்றை முற்றிலும் விட்டு விட வேண்டும்.
லௌகீகத்தில் வாழும் போது பொருளைத் தேடி அலைந்திருக்கலாம்
ஆனால் ஆன்மீகத்திற்குள் நுழைந்த வினாடி முதல் அருளைத் தேடி புறப்பட வேண்டும்.
இறை அருளோடு வாழ்வது என்றால் பாவம் இல்லாமல் வாழ்வது.
பாவம் இல்லாமல் வாழ்பவன் தான் உண்மையான ஆன்மீகவாதி.
இறைவனிடம் அருள் வரம் கேட்பவன் ஆன்மீகவாதி.
பொருள் வரம் மட்டும் கேட்பவன்?
அறம் செய்வதற்காக பொருளை ஈட்டுபவனும் ஆன்மீகவாதி தான்.
ஆனால் பொருளை அனுபவிப்பதற்காக மட்டும் ஈட்டுபவன் லௌகீகவாதி.
விண்ணக விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் இறை அருளோடு வாழ வேண்டும்.
அதுதான் அவர்கள் அணிந்திருக்கும் திருமண உடை.
புனிதர்களுக்கு விழா எடுக்கிறோம்.
முதல் நாள் கொடி ஏற்றி நவநாள் கொண்டாடி பத்தாவது நாள் விழாவை முடிக்கிறோம்.
கொடி ஏற்றுவது எதற்காக?
நாம் திருவிழாவை ஆரம்பிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக.
நல்லது.
நவநாட்கள் எதற்காக?
திருவிழாவை இறைவனது விருப்பத்தின் படி கொண்டாட அவரது அருளை வேண்டுவதற்காக.
நாம் நவ நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
இறைவனுக்கு எதிரான லௌகீக நாட்டங்கள் நம்மிடம் இருந்தால் அவற்றைக் கழைந்து விட்டு ஆன்மீக நாட்டங்களால் நம்மை நிரப்ப வேண்டும்.
பத்து நாட்கள் விழா கொண்டாடப்பட்டு முடியும் போது நாம் இறை அருளால் நிறைந்திருக்க வேண்டும்.
அதற்காக பத்து நாட்களும் நாம் இறைவனோடு ஒன்றித்து ஆன்மீக வாழ்வை வாழ்வதற்கான அருள் வரங்களை அவரிடம் மன்றாடிக் கேட்க வேண்டும்.
இதற்காகத்தான்
நவநாள் ஜெபங்கள்,
தியானம்,
பாவ சங்கீர்த்தனம்,
திருப்பலி,
திருவிருந்து போன்ற ஆன்மீக காரியங்கள்.
சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் திருவிழாக் காலங்களில் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
அல்லது,
திருவிழா வரி,
ஆடம்பரம்,
அலங்காரம்,
விளம்பரம்,
சாப்பாடு,
புது ட்ரஸ்
போன்ற ஆன்மீகத்துக்கு சம்பந்தம் இல்லாத காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
இறைவன் முன் நமது ஆன்மீக அழகுதான் அழகு,
வெளி அழகுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இல்லை.
திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் நமது ஆன்மாவின் பரிசுத்தத்தனம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
திருவிழா நாட்களில் நமது ஆன்மாவை நாம் இழந்துவிட்டால் திருவிழா கொண்டாடி என்ன பயன்?
விண்ணக விருந்தில் கலந்து கொள்ளும் போது அதற்கான ஆன்மீக ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.
ஆன்மாவின் பரிசுத்த நிலை தான் நமது ஆன்மீக ஆடை.
லௌகீகத்தில் ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்பார்கள்.
ஆன்மீகத்தில் ஆடை இல்லாத மனிதன் அந்த பெயருக்கே அருகதை அற்றவன்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment