"அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்."
(மத்தேயு.19:21)
நிலை வாழ்வை அடைய விரும்புகிறவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.(17)
நிறைவுள்ளவர்களாக வாழ விரும்புகிறவர்கள் தங்கள் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும். (21)
நிலை வாழ்வை அடைவதற்கும்,
நிறைவுள்ளவர்களாக வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்?
அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்றால்,
நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
முதல் தரத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் 60க்கு மேல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தனிச் சிறப்புடன் (With Distinction) வெற்றி பெற வேண்டுமென்றால்
80 க்கு மேல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.
35 மதிப்பெண்கள் பெற்றால் Pass.
34 மதிப்பெண்கள் பெற்றால்
Fail.
ஆன்மீகத்தில் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் மோட்சம்.
கீழ்ப்டியா விட்டால் நரகம்.
நிலை வாழ்வு பெற குறைந்த பட்சம் பாவம் இல்லாமல் வாழ வேண்டும்.
பாவத்தை விலக்குவதோடு புண்ணிய வாழ்வு வாழ்ந்தால் மோட்சத்தில் பேரின்பம் அதிகரிக்கும்.
நிறைவாழ்வு (Perfect life) வாழ்ந்தால்மோட்ச பேரின்பம் மிகவும் அதிகரிக்கும்.
உலகியல் ரீதியாக ஒப்பிட்டால்
அன்றாடக் கூலிக்குச் செலவுக்குப் பணம் போதாது.
மாதச் சம்பளக்காரனிடம் செலவுக்குப் பணமிருக்கும்.
இலட்சாதிபதியிடம் செலவு போக மிச்சம் இருக்கும்.
கோடிஸ்வரனிடம் மிச்சம் மிக அதிக பணம் இருக்கும்.
தேர்வில் Pass பண்ணினால் போதுமா?
அல்லது,
Distinction எடுத்து Pass பண்ண வேண்டுமா?
மாணவன் முடிவு எடுக்க வேண்டும்.
நிலை வாழ்வை அடைந்தால் மட்டும் போதுமா?
அல்லது,
மிக அதிகமான பேரின்பத்தை அனுபவிக்க கூடிய நிறை வாழ்வு வேண்டுமா?
தீர்மானிக்க வேண்டியது ஆன்மீகவாதி தான்.
நிலைவாழ்வு என்றாலே பேரின்ப வாழ்வு தான்.
அவரவருக்கு பேரின்பம் முழுமையானது தான்.
ஆனால் அவரவர் ஆன்மாவின் பரிசுத்த நிலைக்கு ஏற்ப பேரின்பத்தின் அளவு மாறுபடும்.
வீட்டில் உள்ள எல்லா பாத்திரங்களிலும் நீர் நிரம்பி உள்ளது.
ஆனாலும் பாத்திரத்தின் அளவுக்கு ஏற்ப நீரின் அளவு மாறுபடும்.
விவசாயி நிலத்தை புல் பூண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது.
அதில் பயிர் ஏற்ற வேண்டும்.
ஆன்மாவை பாவம் இல்லாமல் வைத்திருந்தால் மட்டும் போதாது.
அதில் புண்ணியமாகிய பயிரை ஏற்ற வேண்டும்.
நாம் போடும் உரத்துக்கும், பாய்ச்சும் நீருக்கும் ஏற்ப மகசூலின் அளவு இருக்கும்.
அதே போல் தான் உலகில் நாம் செய்யும் நற்செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நமது விண்ணக பேரின்பத்தின் அளவு இருக்கும்.
நிறைவுள்ளவராக வாழ்வது என்றால் என்ன?
நம்மைப் பரிபூரணமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வது நிறைவான வாழ்வு.
அன்னை மரியாள் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
உலகப் பொருள்களின் மீது இம்மி அளவு கூட பற்று இருக்கக் கூடாது.
பற்று இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இயேசு உனக்கு உள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு என்கிறார்.
சுயநலமின்றி, ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு மனமுவந்து உதவ வேண்டும். தன்னிடம் உள்ளதை தேவைப் படுவோர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கடவுளை முழுமையாக நம்ப வேண்டும். கடவுளின் பராமரிப்புக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.
அதற்காகத்தான் "பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
கடவுள் மேலும், அயலான் மேலும் நிபந்தனையற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு என்ன நேர்ந்தாலும்,
நாம் கேட்டது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
இறைவன் மீதும் அயலான் மீதும் நாம் கொண்டுள்ள அன்பு குறையக் கூடாது.
''உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு.5:48)
பணிக்குருத்துவப் பணிக்கு அழைக்கப்படுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விளக்கவே
இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று கூறுகிறார்.
நம்மை ஆன்மீக பாதையில் வழி நடத்தும் நமது குருக்களுக்கு உலகியல் ரீதியாகச் சொந்தமானது எதுவுமே இல்லை.
நாம்தான் அவர்களுக்கு எல்லாம்.
குருக்களைப் போல நாமும் புண்ணிய வாழ்வில் வளர்வோம்.
நமது ஆன்மீக வாழ்வுக்கு அன்னை மரியாளை முன் மாதிரிகையாகக் கொள்வோம்.
லூர்து செல்வம்
.
No comments:
Post a Comment