Saturday, August 23, 2025

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்." (லூக்கா.13:24)



"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்."
(லூக்கா.13:24)

ஆன்மீக நடைப் பயணத்தில் இரண்டு விதமான பாதைகளை விவிலியம் குறிப்பிடுகின்றது.

ஒன்று அகலமான பாதை. விருப்பம்போல் ஆடிப் பாடி ஜாலியாகப் பயணிக்க ஆசைப்படுபவர்கள் இதன் வழியே செல்வர்.

இறைவனுடைய விருப்பத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் விருப்பப்படி வாழ்பவர்கள் பாவ வாழ்க்கை வாழ்வார்கள்.

பாவத்தையே வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லை.

ஆக அகலமான பாதை விண்ணக வாழ்வுக்குள் இட்டுச் செல்லாது.

அடுத்தது இடுக்கமான பாதை. அகலம் குறைந்தது.

மறை நூல் படி வாழ்பவர்களுக்கான பாதை.

அதன் அகலம் நூல் அளவு தான் இருக்கும்.

மறை நூல் பாதையில் நடப்பவர்களால் ஆடிக்கொண்டு நடக்க முடியாது.

அங்கு இங்கு சாயாமல் நேராக, நேர்மையாக நடப்பவர்கள் தான் இதன் வழியே நடக்க முடியும்.

இதன் வழியே நடப்பவர்கள் உலக ஆசைகளையும், பாவங்களையும் முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்.

சொந்த விருப்பத்துக்கு இங்கே இடம் இல்லை.

கடவுளின் விருப்பம் தான் அவர்களுடைய விருப்பமாக வேண்டும்.

 கடவுளின் கட்டளைப்படி மட்டுமே வாழ  வேண்டும்.

மக்கள் தங்கள் விருப்பம் வாழ முடியாத வாழ்க்கை  கடினமானது.

வாழ்க்கைப் பாதையும் கடினமானது.

பாதை குறுகலாக இருப்பதால் தலையைக் கூட அங்கும் இங்கும் ஆட்ட முடியாது. 

ஆட்டினால் தலை அகலமான பாதைக்கு சென்று விடும்.

நேராக பார்த்து தான் நடக்க வேண்டும்.

மனதில் விண்ணக வாழ்வு மட்டும் தான் இருக்க வேண்டும். 

கண்கள் விண்ணக அரசை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

காதுகள் விண்ணரசின் செய்திகளை மட்டுமே கேட்க வேண்டும். 

விண்ணரசைச் சார்ந்த வார்த்தைகள் மட்டுமே வாயில் வர வேண்டும்.

கால்களை அகல எடுத்து வைத்தால் அகலமான பாதைக்குள் செல்ல நேரிடும்.
ஆகவே குறுகலான பாதை வழியே மட்டும் நடக்க வேண்டும். 

சிலுவைப் பொறியில் ஐம்புலன்களையும் அவித்த நமது ஆண்டவர் நடந்த பாதை. 

நடக்கக் கடினமாக தான் இருக்கும்.

ஆனாலும் குறுகலான சிலுவைப் பாதை வழியே நடந்தால் தான் இயேசு வாழும் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

ஐம்புலன்களின் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் இயேசுவின் விருப்பத்தை மட்டும் மனதில் கொண்டு குறுகலான பாதை வழியே நடப்போம்.

 விடாமுயற்சியோடும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், 
சுயக் கட்டுப்பாட்டோடும், தியாக உணர்வோடும்,  உறுதியான விசுவாசத்தோடும் 
குறுகலான பாதை வழியே நடந்து விண்ணகம் செல்வோம்.


குறுகலான  வாயில் வழியே நுழைவோம்.

இயேசுவோடு ஒன்றித்து நித்திய காலம் அவரோடே வாழ்வோம். 

லூர்து செல்வம்

No comments:

Post a Comment