"அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, "உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்."
(மத்தேயு.17:24)
யூத சமய சட்டப்படி யூதர்கள் கோவிலுக்கு வரி கொடுக்க வேண்டும்.
இயேசு சீமோனைப் பார்த்து,
''சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது?
இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்?
தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?" என்று கேட்டார்.
சீமோன், "மற்றவரிடம் இருந்துதான்"
இயேசு, "அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.
ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது.
எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு;
முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய்.
அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து" என்றார்
"ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது."
என்ன பொருளில் இயேசு இதை கூறுகிறார்?
கோவில் இயேசுவின் தந்தையின் ஆலயம்.
தந்தைக்கு மகன் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. .
ஆயினும் இயேசு இறைமகன் என்று தெரியாதவர்களும் மக்களிடையே இருப்பார்கள்.
அவர்கள் இயேசு வரி கட்டாததைத் தவறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
அத்தகைய வாய்ப்பைத் தவிர்க்கவே இயேசு வரி கட்ட அவசியம் இல்லாவிட்டாலும்
வரி கட்டத் தீர்மானிக்கிறார்.
இப்போது ஒரு கேள்வி எழும்.
சீடர்கள் பன்னிருவர். ஆனால் ஏன் சீமோனுக்கு மட்டும் வரி கட்ட ஏற்பாடு செய்தார்?
இயேசு நிருவவிருக்கும் திருச்சபைக்கு அவர்தான் தலைவர்.
உலகில் இயங்கவிருக்கும் திருச்சபைக்குத் தலைவராக சீமோன் நியமிக்கப் படவிருக்கிறார் என்பதற்கு முன் அடையாளமாக
சீமோனின் வரியையும் இயேசுவே செலுத்தினார்.
இந்நிகழ்விலிருந்து இரண்டு உண்மைகள் தெளிவாகின்றன.
1.எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
2. சீமோன் இராயப்பர்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் என்று இயேசு தீர்மானித்து விட்டார்.
இந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்நிகழ்வு நற்செய்தி நூலில் எழுதப் பட்டுள்ளது.
இன்றைய வாழ்வில் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஒருசந்தி நாட்களில் ஒருசந்தி இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அவர்களும் நோன்பு இருப்பது இறைவனுக்கு ஏற்ற செயல்.
இயேசு பாவம் செய்ய முடியாதவர், ஆனால் நமது பாவங்களுக்காகச் சிலுவையைச் சுமந்தார்.
நாம் பாவிகள்,
நமது பாவங்களுக்காவும், நமது அயலானின் பாவங்களுக்காவும் நாம் சிலுவையைச் சுமக்கலாமே.
இதுவும் ஒரு பிறரன்புச் செயல்தான்.
நாம் சுகமாக இருந்தாலும் சுகமில்லாத மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளலாம்.
நாம் குறைவாகச் சாப்பிட்டு மற்றவர்களோடும் உணவைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆசிரியர் மட்டும் தான் பாடம் நடத்த வேண்டும் என்ற சட்டம் இல்லை.
யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பாடம் எடுக்கலாம்.
நமது முன்மாதிரிகையை மறீறவர்களும் பின்பற்ற வாய்ப்பு உண்டு.
நாம் என்ன செய்தாலும் அதைப் பார்க்கும் மற்றவர்கள் அப்படியே செய்ய வாய்ப்பு உண்டு.
இயேசு எங்கு சென்றாலும் மக்களுக்கு நன்மையையே செய்தார்.
நாமும் அப்படியே செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment