"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்."
(மத்தேயு.19:24)
"இயேசு தம் சீடரிடம், "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்."
என்று சொல்லி விட்டு அதை உறுதிப்படுத்த
"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்;
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கிறார்.
"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது". என்றால் என்ன?
ஊசியின் காதில் நூல் மட்டும் நுழைய முடியும் என்பது நமது அனுபவம்.
ஆனால் இயேசு குறிப்பிடுவது நமது ஊசியை அல்ல.
இயேசுவின் காலத்தில் எருசலேம் நகரின் சுவர்களில் இருந்த ஒரு சிறிய நுழைவாயிலுக்கு ஊசியின் காது என்று பெயர்.
இந்த வாயில், இரவில் கோட்டைக்கு வெளியே செல்லும் ஒட்டகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டது.
இந்த வாயில் வழியாக முதுகில் பாரம் உள்ள ஒட்டகம் நுழைவது மிகக் கடினம்.
ஒட்டகத்தின் முதுகில் உள்ள பாரத்தை இறக்கி வைத்த பிறகே அது வாயில் நுழைய முடியும்.
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம். (எளிது அல்ல.)
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.
"ஊசியின் காதுக்குள் கூட ஒட்டகம் எளிதில் நுழைந்து விடலாம், செல்வத்தின் மீது பற்று உள்ளவர்கள் விண்ணரசில் நுழைவது கடினம்."
செல்வத்தின் மீது பற்று உள்ளவர்கள் விண்ணரசில் நுழைவது எவ்வளவு கடினம் என்பதை எடுத்துக்காட்ட இயேசு இவ்வாறு கூறுகிறார்.
செல்வர் இறையாட்சிக்குள் நுழைய முடியாது என்று இயேசு சொல்லவில்லை, கடினம் என்று சொல்கிறார்.
ஊசியின் காது வழியாக முதுகில் பாரம் உள்ள ஒட்டகம் நுழைவது மிகக் கடினம். பாரத்தை இறக்கி வைத்து விட்டால் நுழைவது எளிது.
செல்வர்களைப் பொறுத்த மட்டில் செல்வத்தின் மீது உள்ள பற்றுதான் பாரம்.
இப்போது ஒப்புமை புரியும்.
முதுகில் பாரத்தோடு ஒட்டகத்தால் ஊசியின் காதுவழியே நுழைவது கடினம்.
பாரத்தை இறக்கி வைத்து விட்டால் நுழைவது எளிது.
செல்வத்தின் மீது உள்ள பற்று என்ற பாரத்தோடு இறையாட்சிக்குள் நுழைவது கடினம்.
பற்றை விட்டு விட்டால் நுழைவது எளிது.
சிலருக்கு கையில் பைசா இருக்காது, ஆனால் மனம் நிறைய ஆசை இருக்கும்.
அவர்களும் மனதளவில் செல்வர்கள் தான்.
சிலருக்கு கையில் நிறைய பணமிருக்கும், பணத்தின் மீது பற்று இருக்காது. அவர்கள் மனதளவில் ஏழைகள் தான்.
ஏழைகள் பாக்கியவான்கள் என்று சொன்னாலும்,
எளிய மனத்தோர் பாக்கியவான்கள் என்று சொன்னாலும் ஒரே பொருள் தான்.
இப்போது நண்பர் ஒருவர் கேட்கிறார்.
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் என்று சொல்கிறார், முடியாது என்று சொல்லவில்லை.
அப்படியானால் கஷ்டப்பட்டாவது இறையாட்சிக்குள் நுழைந்து விடலாமா?
அதற்கும் இயேசு பதில் சொல்கிறார்.
"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.
(மத்தேயு.19:26)
எப்படி இயலும்?
கடவுளால் எல்லாம் இயலும், நமக்கு வேண்டியது விசுவாசம்.
பற்றுள்ளவன் தன்னைப் பற்றிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விசுவாசத்தோடு வேண்ட வேண்டும்.
அவனது விசுவாசத்துக்குப் பரிசாக புதுமை செய்தாவது பற்றிலிருந்து விடுதலை பெற கடவுள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.
உதாரணத்திற்கு,
செல்வத்தின் மீது பற்றுள்ள ஒருவன் கடவுளிடம் வேண்டுகிறான்,
"கடவுளே, நான் பைபிள் வாசித்தேன்.
நான் வாசித்த வசனம்,
மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
சீடர்கள் இதைக் கேட்டு, "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.
(மத்தேயு.19:24,25,26)
நான் செல்வத்தின் மீது பற்றுள்ளவன். ஆனால் உமது ஆட்சிக்குள் வரவேண்டும். நீர் நினைத்தால் முடியும்."
என்று வேண்டினான்.
சில தினங்கள் கழித்து அவனுக்குச் சுகமில்லை.
டாக்டரைப் பார்த்தான். குணப்படுத்த சில இலட்சங்கள் ஆகும் என்றார்.
உடனே அவன் மனதில் ஓடிய எண்ணம்,
"என்னிடம் பணம் இருப்பதால் தான் இந்த நோய் வந்தது. வைத்தியத்துகுக் கொடுக்கும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுத்தாலும் பயன் உண்டு."
என்று எண்ணிக் கொண்டு படுத்தான்.
காலையில் எழுந்து டாக்டரிடம் போனான்.
அவர் ஆச்சரியத்தோடு "இன்று உனக்கு நோய்க்கு உரிய அறிகுறியே இல்லை. எப்படியோ குணமாகி விட்டது." என்றார்.
அவன், " டாக்டர், பணம் இல்லாததால் வைத்தியம் பார்க்க முடியாத யாரும் இருந்தால் அவனுக்குரிய வைத்தியச் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன்." என்று கூறி விட்டு,
கோவிலுக்குச் சென்று திவ்ய நற்கருணை நாதருக்கு நன்றி கூறினான்.
அன்று முதல் பற்றற்றான் பற்றினைப் பற்றி வாழத் தொடங்கினான்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." (350)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment