செப வாழ்வில் பொறுமை.
Patience in the life of prayer.
ஆன்மீக வாழ்வில் வெற்றிகரமாக நடைபோட நாம் ஈட்ட வேண்டிய புண்ணியங்கள் ஏழு,
அவற்றில் ஒன்று பொறுமை.
பொறுமை கடவுளின் இயல்பான பண்புகளில் ஒன்று.
கடவுள் துவக்கமில்லாதவர்.
காலங்களைக் கடந்தவர்.
நித்தியத்திலிருந்தே உலகையும் மனிதர்களையும் படைக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் நித்தியத்திலிருந்தே உலகைப் படைக்கவில்லை.
அதற்குரிய நேரம் வந்தபின் என்று சொல்ல முடியாது, ஏனெனில் உலகைப் படைத்த பின்தான் நேரம் ஆரம்பித்தது.
தனது திட்டப்படி உலகையும், மனிதனையும் படைத்தார்.
ஆதாம் ஏவாள் பாவம் செய்தவுடன் மீட்பரின் வருகையை அறிவித்து விட்டார்.
ஆனாலும் மனிதனாகப் பிறக்க 4000ஆண்டுகள் பொறுமையாக இருந்தார்.
மீட்புப் பணிக்காக 33 ஆண்டுகள் வாழ்ந்த இயேசு
30 ஆண்டுகள் திருக்குடும்பத்தில் பொறுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்ந்து விட்டு மூன்று ஆண்டுகள் தான் பொது வாழ்வில் ஈடுபட்டார்.
பொது வாழ்விலும் தான் பாடுகள் படுவதற்குரிய நேரம் வரும் வரை பொறுமையாக நற்செய்தியை அறிவித்தார், சென்ற இடமெல்லாம் நன்மையையே செய்தார்.
வியாழன் மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை வரை ஒரு நாள் பாடுகள் பட்டு மரிப்பதற்காக உலகில் பிறந்து 33 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தார்.
இயேசுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் பொறுமை.
செபவாழ்வில் நம்மிடம் இல்லாத பண்பு பொறுமை.
உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் இறைவனுக்கு உரியவை.
நாம் நமக்கு வேண்டியதை இறைவனிடம் கேட்கிறோம்.
நாம் கேட்பது உடனே கிடைக்க வேண்டும்.
இறைவன் அவர் விருப்பப்படி தான் கொடுப்பார்.
நம்மால் பொறுமையாக இருக்க முடியாது.
ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.
கற்பனைதான். கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஒரு அப்பாவி வாலிபப் பையன் தன் அம்மாவிடம்,
"அம்மா, என் வயதுள்ள என் நண்பன் கையில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறான்.
எனக்கும் ஒரு குழந்தை வேண்டும்."
"சரிப்பா. உனக்கு ஒரு பெண் பார்க்கிறோம். திருமணம் முடி.
திருமணம் முடிந்தால் உனக்குக் குழந்தை கிடைக்கும்."
திருமணம் முடிந்தது.
முதல் இரவில் முதலில் சந்தித்தவுடன் மனைவியிடம்,
"எங்கே குழந்தை?"
"என்ன சொல்றீங்க?"
"நான் குழந்தையைக் கொஞ்சுவதற்காகத்தான் திருமணம் முடித்தேன்.
எங்கே என் குழந்தை?"
"உங்கள் குழந்தை குறைந்தது பத்து மாதம் கழித்து தான் வரும்."
"திருமணம் முடித்தால் மனைவி குழந்தை தருவாள் என்று எனது அம்மா சொன்னாங்க."
"கட்டாயம் தருவேன், பத்து மாதம் கழித்து. முதலில் வந்து உட்காருங்க."
"அதெல்லாம் முடியாது. நீ குழந்தையைத் தந்த பின்புதான் உன் பக்தத்திலேயே வருவேன்." என்று கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியேறி விட்டான்.
நாமும் வேண்டுதல் விடயத்தில் கடவுளிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.
நாம் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.
நாம் கேட்டதை எப்போது தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது கடவுளின் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.
நாம் கேட்பது கிடைக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
நாம் கேட்டது கிடைக்கா விட்டாலும் அதற்குப் பதிலாக ஆண்டவர் எதையாவது தரும் வரைப் பொறுமையாக இருக்க வேண்டும்.
கேட்டது கிடைத்து விட்டால் நன்றி கூறுவது எளிது.
கேட்டது கிடைக்காவிட்டாலும் நாம் நன்றி கூற வேண்டும்.
கேட்டதைத் தராதது நமது நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொண்டால் அதற்கு நாம் நன்றி கூறுவோம்.
ஆனால் சில நேரங்களில் கிடைத்ததில்,
அல்லது
கிடைக்காததில், உள்ள நன்மை நமக்குப் புரியாவிட்டால் அதற்கு நன்றி கூறுவது கடினமாக இருக்கும்.
எழுதியிருக்கும் தேர்வில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டியிருப்போம்.
கேட்டபடி வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.
ஆனால் தோல்வி கிடைத்தால்?
அது எப்படி நமக்கு நல்லது என்று நமக்குத் தெரியாது, கடவுளுக்குத் தெரியும்.
நமக்குத் தெரியாவிட்டாலும் கடவுளின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நன்றி கூற வேண்டும்.
வாழ்க்கை காரண, காரிய நிகழ்வுகளின் தொடர்ச்சி.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும்.
ஒவ்வொரு நிகழ்வும் இன்னொரு நிகழ்வுக்குக் காரணமாக இருக்கும்.
அனைத்துக்கும் ஆதி காரணர் இறைவன்.
சில காரணங்கள் உடனடியாக காரியத்தை விளைவிக்கும்.
யாராவது நம்மை அடித்தால் உடனே வலிக்கிறது.
ஒரு மரத்துக்குக் காரணம் விதை.
ஆனால் விதை மரமாக பல ஆண்டுகள் ஆகலாம்.
ஒருவன் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகப் படிக்கிறான்.
படிப்பு காரணம்,
வேலை காரியம்.
பல ஆண்டுகள் பொறுமையுடன் படித்தால்தான் வேலை கிடைக்கும்.
பொறுமை நமது பண்பாக மாற வேண்டும்.
நம்மிடமிருந்து பிரிக்க முடியாத இயல்பாக மாறவேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்தில்
வெறுமனே அமைதியாகக் காத்திருப்பது மட்டும் பொறுமை அல்ல.
காரணம் காரியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
காரணத்திலிருந்து காரியம் பிறக்க பொறுமை உதவியாக இருக்க வேண்டும்.
இவ்வுலகத் துன்பங்கள் காரணம்.
மறுவுலக பேரின்பம் காரியம்.
துன்பப்படாமல் பேரின்பத்தை அடைய முடியாது.
ஆனால் வெறும் துன்பம் பேரின்பத்துக்குக் காரணம் ஆகாது.
துன்பம் சிலுவையாக மாறி, சிலுவையில் நாம் மரணித்தால் தான் பேரின்ப வாழ்வு கிட்டும்.
துன்பத்தை எப்படி சிலுவையாக மாற்றுவது?
நமது துன்பத்தை சிலுவையில் மரித்த இயேசுவுக்காக, அவருக்கு ஒப்புக் கொடுத்து அனுபவித்தால்தான் இயேசுவோடு பேரின்ப வாழ்வில் ஒன்றிக்க முடியும்.
புனித அல்போன்சா அதைத் தான் செய்தாள்.
அவள் வாழ்நாள் முழுவதும் துன்பப் பட்டாள்.
இயேசுவுக்காக அதை பொறுமையுடன் அனுபவித்தாள்.
புனிதை ஆனாள்.
புனித பிரான்சிஸ் அசிசியும் அதைத்தான் செய்தார்.
இயேசுவின் ஐந்து காயங்களையும் வரமாகப் பெறும் அளவுக்கு சிலுவையை பொறுமையாகச் சுமந்தார்.
நாமும் சிலுவையைப் பொறுமையாகச் சுமப்போம்
ஏழு தலையான புண்ணியங்களுக்கு எதிராக ஏழு தலையான பாவங்கள் உள்ளன.
பொறுமைக்கு எதிரான பாவம் கோபம்.
அதிலும் முன் கோபம் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
கோபத்தினால் உறவுகளை இழக்க நேரிடும்.
பொறுமை கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
நம்மிடம் பொறுமை இருந்தால் நமக்குக் கோபம் வராது.
மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கோபப்படும் போது நாம் பொறுமையாக இருந்தால் மற்றவர்கள் திருந்துவார்கள்.
நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும் நாம் மனம் திரும்புவதற்காக கடவுள் நாட்கணக்காக, மாதக்கணக்காக, சில சமயங்களில் வருடக்கணக்காகக் கடவுள் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
புனித அகுஸ்தீனார் மனம் திரும்ப கடவுள் முப்பது ஆண்டுகள் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார்.
இயேசுவுக்கு ஒரு வயது நடக்கும் போது, அவர் பெற்றோருடன் எகிப்துக்குப் போய்க் கொண்டிருந்த போது ஒரு திருடன் அவரைச் சந்தித்தான்.
அவன் மனம் திரும்ப இயேசு அவனுக்கு 33 ஆண்டுகள் கொடுத்தார்.
கடைசியில் இயேசுவுடன் சிலுவையில் தொங்கும் போது மனம் திரும்பி, நல்ல கள்ளன் என்று பெயர் வாங்கியதுடன், இயேசு இறந்த அன்றே அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.
'' இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்."
(லூக்கா நற்செய்தி 23:43)
கடவுளுக்கு பொறுமை என்ற பண்பு இல்லாவிட்டால் ஆதாம், ஏவாள் பாவம் செய்த அன்றே மனுக்குலம் அழிந்திருக்கும்.
நமக்கு வரும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பொறுமையாக சகித்துக் கொள்வோம்.
நமது துன்பம் பேரின்பமாக மாறும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment