Wednesday, August 13, 2025

"அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்."(மத்தேயு.25:40)



"அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்."
(மத்தேயு.25:40)

இறையன்பும், பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

இறையன்பு இருக்கும் இடத்தில் பிறரன்பும் இருக்கும்.

ஒன்று இல்லாத இடத்தில் அடுத்ததும் இருக்காது.

நாம் நமது அயலானுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு நாம் கொடுக்கும் காணிக்கை.

நமது பிறனுக்குச் செய்வதை நாம் இறைவனுக்கே செய்கிறோம்.


நாம் நினைத்தது நடந்தால் ஆயிரம் ரூபாய் கோவிலில் காணிக்கை போடுவதாக நேர்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நினைத்தது நடந்தது.

காணிக்கை போடக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

சுகமில்லாத ஏழை ஒருவன் பிழைக்க வேண்டுமென்றால் மருத்துவம் பார்க்க ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

இறைவனுக்காக வைத்திருந்த பணத்தை அவனுக்குக் கொடுத்து விட்டோம்.

நாம் இறைவனுக்கு நேர்ச்சையை நிறைவேற்றி விட்டோமா?

கோவிலுக்கும் காணிக்கை போட்டுத்தான் ஆக வேண்டுமா?

நமது அயலானுக்குக் கொடுப்பதை இறைவனுக்கே கொடுக்கிறோம்.

நமது அயலானில் நாம் இறைவனைக் காண வேண்டும்.

கோவில் காணிக்கையும் மக்கள் பணிக்காகத்தான் செலவழிக்கப் படுகிறது.

கடவுள் நமது அயலானுக்கு நம் மூலமாகத்தான் உதவி செய்கிறார்.

நாம் கடவுளின் கரங்களாகச் செயல்பட வேண்டும்.

"கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். "
(1அரு .4:12)

கடவுள் எப்போதும் அவரால் படைக்கப் பட்டவர்களின் உருவில் நம்மோடு இருக்கிறார்.

அவர்களை அன்பு செய்யும் போது கடவுளை அன்பு செய்கிறோம்.

தாய் குழந்தைக்குப் பாலூட்டும் போது அன்னை மரியாள் செய்ததைச் செய்கிறாள்.

தந்தை தன் மகனை வளர்க்கும் போது புனித யோசேப்பு செய்ததைச் செய்கிறார்.

அயலான் கட்டத்தில் இருக்கும் போது கண்டு கொள்ளாதவன் இராயப்பரைப் போல் இயேசுவை மறுதலிக்கிறான்.

தனது அயலானைத் துன்பத்துக்கு உள்ளாக்குகிறவன் பரிசேயர்களைப் போல் நடந்து கொள்கிறான்.

அயலானின் கண்ணீரைத் துடைப்பவன் புனித வெரோனிக்காவை போல் நடந்து கொள்கிறான்.

அயலானைக் காட்டிக் கொடுக்கிறவன் யூதாசை போல் நடந்து கொள்கிறான்.

யாரெல்லாம் நோயாளிகளைத் தேடிச் சென்று அவர்கள் குணமடைய உதவுகிறார்களோ அவர்கள் இயேசுவாகவே வாழ்கிறார்கள்.

பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அனைவரும் இயேசுக்களே.

உயிர்த்த இயேசுவை உலகிற்கு அறிவிப்பவர்கள் மகதலா மரியாள்கள்.

வாழ் நாளெல்லாம் இயேசுவாக வாழ்வோம்.

சிலுவையைச் சுமந்து சென்று மரிப்போம்.

ஒரு நாள் உயிர்ப்போம்.

உயிர்த்த இயேசுவோடு ஒன்றித்து முடிவில்லா காலம் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment