Saturday, August 30, 2025

பைபிளும் பரிணாம வளர்ச்சியும்



பைபிளும் பரிணாம வளர்ச்சியும் 

 பைபிள் என்றால் இறை வாக்கு.

பைபிள் மூலம் இறைவன் தனது எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இறைவன் நமக்கு அறிவிக்கும் செய்திதான் பைபிள்.

இறைவன் அறிவிக்கும் செய்தியை நாம் நற் செய்தி என்கிறோம்.

பைபிளில் வார்த்தைகள் இருக்கின்றன, வசனங்கள் இருக்கின்றன, அதிகாரங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் இருக்கின்றன.

இவை எல்லாவற்றிலும் இறைச் செய்தி இருக்கிறது.

நமக்கு ஐம்பொறிகள் சேர்ந்த உடல் இருக்கிறது.  உடலுக்குள் ஆன்மா இருக்கிறது. 

 
"கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, 

அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்."
(தொடக்கநூல் 2:7)

மண்ணால் ஆன உடல்.
அதற்குள் உயிர் மூச்சான ஆன்மா.

இவை இரண்டில் எதற்காக எது?
ஆன்மாவுக்காகத்தான் உடல்.

இரண்டில் அதிக முக்கியத்துவம் பெறுவது ஆன்மா.

அப்படியே பைபிளில் வசனங்கள் இருக்கின்றன.

வசனங்களில் உள்ள வார்த்தைகளைவிட அதிக முக்கியத்துவம் பெறுவது அவற்றில் உள்ள இறைச் செய்தி.

நாம் பேசுகிறோம். பேசுவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

வார்த்தைகளுக்குப் பொருள் கொடுப்பது எது, அகராதியா? அல்லது, பேசுபவரின் குணமா?

பைபிளில் உள்ள வசனங்களுக்கு இறைவனின் பண்புகளின் அடிப்படையில் தான் பொருள் கொடுக்க வேண்டும், நமது விருப்பப்படி அல்ல.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் தங்கள் விருப்பப்படி பொருள் கொடுத்து 40,000 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.

இப்போது விடயத்துக்கு வருவோம்.

பைபிள் நாம் வாழும் பிரபஞ்சமும், அதில் வாழும் உயிர்ப் பிராணிகளும், மனிதர்களும் நேரடியாகப் படைக்கப் பட்டனர் என்று சொல்கிறது.

விஞ்ஞானம், பெருவெடிப்புக் கோட்பாட்டின் படி (Big Bang theory) 

ஏறக்குறைய 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் அடர்த்தியான, வெப்பமான,  சிறிய புள்ளியாக இருந்தது. 

பிறகு, அந்தப் புள்ளி திடீரென்று வேகமாக விரிவடைந்தது,

 இந்த விரிவடைதல் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும்,

அதில் வாழும் உயிரினங்கள்
பரிணாம வளர்ச்சிப்படி மாறி வாழ்கின்றன என்றும் கூறுகிறது.

குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

இப்போ பைபிள் கூறுவது உண்மையா?

அறிவியல் கூறுவது உண்மையா?

உண்மை ஒன்றுதான் அனைத்தையும் படைத்தவர் இறைவன் மட்டுமே.

 உலக வரலாற்று நூல்கள்:  , குறிப்பிட்ட நபர்கள், நிகழ்வுகள் மற்றும் அவை நடந்த காலங்கள் போன்ற உண்மைகளைச் சரிபார்த்து, அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்கின்றன. 

இவற்றின் நோக்கம் கடந்த காலத்தை முடிந்தவரை துல்லியமாகப் பதிவு செய்வது. 

  விவிலியம் நாம்  விசுவசிக்க வேண்டிய உண்மைகளையும், ஆன்மீகக் கருத்துக்களையும் மக்களுக்குக் கற்பிக்க எழுதப்பட்டது. 

 இதன் நோக்கம், பிரபஞ்சத்தின் படைப்பு, 
மனித வாழ்வின் நோக்கம், மற்றும் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவு 
போன்ற ஆழமான உண்மைகளை எடுத்துரைப்பது.



 விவிலியத்தின் தொடக்க நூல் (Genesis), படைப்பைப் பற்றிய ஒரு நேரடியான, காலவரிசைப்படியான அறிவியல் விளக்கத்தைக் கொடுப்பதற்காக எழுதப்படவில்லை. 

மாறாக, 

பிரபஞ்சமும், அதில் உள்ள அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. 

மனிதன் இறைவனது  கட்டளையை மீறி பாவம் செய்தான்.

இறைவன் மீட்பரை அனுப்ப வாக்களித்தார்.

இந்த மறை உண்மைகளே‌ தொடக்க நூலின் முதல் மூன்று அதிகாரங்களிலும் எழுதப்பட்டுள்ளன.

முதல் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்கள் 24 மணி நேர நாட்கள் அல்ல. 

ஒரு நிகழ்வுக்கும் அடுத்த நிகழ்வுக்கும் இடைப்பட்ட காலத்தை குறிக்கும் நாட்கள். 

எவ்வளவு காலம் கடந்திருக்குமோ அவ்வளவு காலம்.

அறிவியல் ரீதியான பரிணாம வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டாலும் அதில் இறைவனின் திட்டம் இருந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

 அறிவியல் ரீதியாகப் பிரபஞ்சம் பரிணாம வளர்ச்சிப் பாதையில் வந்திருந்தாலும்,

 அந்த வளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் வல்லமை இருந்தது என்பதையே விவிலியம்  உணர்த்துகிறது. 

அதாவது, பரிணாமம் என்பது கடவுளின் படைப்புச் செயலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மை படைக்க நமது பெற்றோரை கடவுள் கருவியாகப் பயன்படுத்துவதை நினைவில் கொள்வோம். 

படைப்பவர் கடவுளே.


எனவே, அறிவியல்  ரீதியான பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், (Theory)

 இறையியல் ரீதியான பைபிள் போதனையும்   ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.

 மாறாகப் பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மையை வெவ்வேறு கோணங்களில்  விளக்குகின்றன. 

நாம் உண்ணும் உணவு எவ்வாறு சீரணம் ஆகிறது என்பதை உடற்கூற்றைச் சார்ந்த அறிவியல் விளக்குகிறது.

நமது உடலைச் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வும் இறை வல்லமையால் தான் நடக்கிறது என்பது ஆன்மீக உண்மை.

திருமணத் தம்பதியர் குழந்தை வரம் கேட்டு திருத்தலங்களுக்குச் செல்வத்திலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

அறிவியல் நிகழ்வுகளுக்கும் காரண கர்த்தா இறைவன் தான்.

நோவேயின் காலத்தில் உலகின் பெரும் பகுதியை நீர்ப் பெருக்கால் அழித்தது  யார்?

கடவுள்.

பழைய ஏற்பாட்டு யோசைப்பின் காலத்தில் எகிப்தில் ஏழு ஆண்டுகள் வளத்துக்கும், ஏழு ஆண்டுகள் பஞ்சத்துக்கும் காரணம் யார்?

கடவுள்.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியான காரணத்தைக் கூறுவார்கள்.

இறையியலார் ஆன்மீக ரீதியான காரணத்தைக் கூறுவார்கள்.

அறிவியல் விதிகளைப் படைத்தவரே கடவுள் தான்.

அனைத்துக்கும் ஆதி காரணர் கடவுள்தான்.

பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளலாமா?

கடவுளை மையமாக வைத்து ஏற்றுக் கொள்ளலாம்.

இயற்கையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் இறைவனால் மட்டும் ஏற்படுகிறது.

இயற்கையைப் படைத்தவர் இறைவன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment