Tuesday, August 5, 2025

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ";ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். (லூக்கா நற்செய்தி 9:33)



அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ";ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். 
(லூக்கா நற்செய்தி 9:33)

இயேசு மறுரூபமானபோது அவரோடு எலியாவும், மோசேயும் பேசிக்  கொண்டிருந்தார்கள்.

இராயப்பர் இயேசுவை நோக்கி

"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று கூறுகிறார்.

இராயப்பரின் வார்த்தைகள் உண்மையான ஆன்மீக வாதிக்கு இருக்க வேண்டிய பண்புகளைச் சுட்டிக் காண்பிப்பதோடு

அவை யாவும் இராயப்பரிடம் இருக்கின்றன என்பதையும் காட்டுகின்றன.

உண்மையான ஆன்மீக வாதிக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை?

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள்.

ஒருவர் யாரோடு சேர் விரும்புகிறாரோ அவரும் அவ்வினத்தைச் சேர்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நன்கு படிக்கின்றவர்களுடன் தான் இருக்க விரும்புவர்.

குடிகாரன் குடிகாரர்கள் கூட்டத்தில் தான் காணப்படுவான்.


இராயப்பர் இயேசுவோடும், மோசசோடும், எலியாவோடும் இருக்க விரும்புகிறார், அதுவும் வேறு‌ மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலை‌ மேல்.

அவர்களுடன் இருக்க விரும்புவதே ஆன்மீகத்தில் மேலான நிலை.

பகல் முழுவதும் TV முன்பு அமர்ந்து நேரத்தை வீணடிப்பவர் ஒண்ணாம் நம்பர் லௌகீகவாதி.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் திவ்ய நற்கருணை முன் அமர்ந்து இயேசுவையே உற்று நோக்கிக் கொண்டிருப்பவர் உண்மையான  ஆன்மீகவாதி.

ஆன்மீக வாதிகளின் மற்றொரு பண்பு சுயநலமின்மை.

இயேசு மறுரூபம் ஆகும் போது மலையில் சீடர்களைச் சேர்த்து ஆறு பேர் இருந்தார்கள்.

ஆனால்  இயேசு, மோசே, எலியா ஆகிய மூவருக்கு மட்டுமே கூடாரங்கள் அமைக்க இராயப்பர் விருப்பம் தெரிவிக்கிறார்.

தனக்கு ஒரு கூடாரம் வேண்டும் என்று ஆசைப் படவில்லை.

ஆனாலும் ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ள  இராயப்பர் இன்னும் ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடையவில்லை என்பதை அவரது வார்த்தைகள் காண்பிக்கின்றன.

ஆன்மீகத்தில் பயிற்சி கொடுப்பதற்காகத்தான் மூன்று சீடர்களையும் இயேசு தன்னோடு அழைத்துச் சென்றார்.

ஆனால் அவர்கள்  தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள்.

 அவர்கள் விழித்தபோதுதான் மாட்சியோடு விளங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். 

அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி,

 ";ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.

அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது கூடாரங்கள் அமைப்போம் என்று கூறவில்லை.

அவர்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து சென்றபோது கூறினார்.

பிரிந்து சென்றவர்களுக்குக் கூடாரம் எதற்கு?

அது மட்டுமல்ல மூவருக்கும் மூன்று கூடாரங்கள் அமைத்தால் மூவரும் எப்படி உரையாட முடியும்?

அதுவும் இராயப்பர் தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். 

அப்படியானால் தூக்கக் கலக்கம் முற்றிலும் போகவில்லை என்று தானே அர்த்தம்.

இதெல்லாம் எதைக் காட்டுகிறது?

இராயப்பருக்கு ஆர்வம் உள்ள அளவுக்கு முதிர்ச்சி (Maturity) இல்லை என்பதைக் காட்டுகிறது.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களைத் தான் இயேசு சீடர்களாகத் தேர்ந்தேடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

அவர்களுக்கான பயிற்சி தூய ஆவியின் வருகையின்போது தான் முழுமை பெறும்.

மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நற்செய்தி ஆசிரியர்கள் சீடர்களுடைய ஆன்மீக அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்திருப்பது நமக்காகத் தான்.

அதை வாசிக்கும் நாம் பயன் அடைவதற்காகத்தான்.

இயேசு‌ மலையில் மறு‌ரூபம் அடைந்தார்.

நடுப் பூசையின் போது திருப்பலிப் பீடத்தில் நமது கண் முன்னாலேயே  அப்பம் இயேசுவின் உடலாகவும், இரசம் இயேசுவின் இரத்தமாகவும் மாறும் காட்சியைப் பார்க்கிறோம்.

சுய உணர்வோடு பார்க்கிறோமா?

அல்லது,

இராயப்பரைப் போல தூக்கக் கலக்கத்தில் பார்க்கிறோமா?

அப்பம் இயேசுவாக மாறும் போது,

"என் ஆண்டவரே, 
என் தேவனே" என்கிறோம்.

இவை புனித தோமையார் இயேசுவின் ஐந்து காயங்களுக்குள் விரலை விட்டுப் பார்த்த பின் கூறிய வார்த்தைகள்.

தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். 
(அரு. 20:28)


இவ்வார்த்தைகளைத் தோமையாரைப் போல உண்மையான விசுவாசத்தோடு சொல்கிறோமா?

அல்லது,
 
இராயப்பரைப் போல நாம் சொல்வது இன்னதென்று தெரியாமல் சொல்கிறோமா?

உண்மையில் நம்மிடம் உண்மையான விசுவாசம் இல்லை.

இருந்தால் திவ்ய நற்கருணை வாங்குமுன் கடவுள் முன் முழங்கால் படியிட மறுப்போமா?

நமது வீட்டுக்கு தமிழக முதல்வர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவரை இரு கை கூப்பி கும்பிட்டு வரவேற்போமா, அல்லது ஒரு கையால் "ஹை" என்று சொல்லி வரவேற்போமா?

முழங்கால் படியிட்டு தொழுவது இறைவனை ஆராதிப்பதற்கு அடையாளம்.

நட்டமாய் நின்று கொண்டு தலையை மட்டும் வளைப்பது வணக்கத்துக்கு அடையாளம்.

புனிதர்களை வணங்க வேண்டும்,

இறைவனை ஆராதிக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிட மறுப்பவர்கள் திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை மறுக்கிறார்கள் என்று அர்த்தம்.

நாம் எப்படி?

சிந்தித்துப் பார்ப்போம்.

நமது வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் ஏற்படாவிட்டால் நாம் பைபிளை வாசித்து ஒரு பயனும் இல்லை.

சீடர்களிடம் ஆர்வம் இருந்தது, ஆனால் குறைகளும் இருந்தன.

அவர்களுடைய குறைகளுக்காக இயேசு அவர்களைத் தள்ளி விடவில்லை.

யூதாசைக்கூட சீடத்துவத்திலிருந்து விலக்கி வைக்கவில்லை.

அவனாகத்தான் விலகி அவரைக் காட்டிக் கொடுத்தான்

அவன் காட்டிக் கொடுத்தபோது கூட அவனைத் "தோழா" என்று தான் அழைத்தார்.

இயேசு அவனிடம், "தோழா, எதற்காக வந்தாய்?" என்று கேட்டார். . 
(மத்தேயு நற்செய்தி 26:50)

அது மட்டுமல்ல சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்களை, யூதாஸ் உட்பட, மன்னித்தார்.

அவனாகத்தான் நாண்டு கொண்டான்.

ஆனாலும் உயிர் பிரிவதற்கு முந்திய வினாடி அவன் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டிருப்பான்.

குறைகள் இருந்த சீடர்களைத்தான் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்க உலகெங்கும் அனுப்பினார்.

தூய ஆவி அவர்கள் மீது இறங்கியபோது குறைகள் நீங்கப் பெற்றார்கள்.

தூய ஆவியின் வல்லமையால் அவர்கள் உலகெங்கும் நற்செய்தியை வெற்றிகரமாக அறிவித்தார்கள்.

நாமும் குறைகள் உள்ளவர்கள் தான்.

ஆனாலும் நாம் திரு அருட்சாதனங்களைப் பெறும் போதெல்லாம் தூய ஆவியைப் பெறுகின்றோம்.

தூய ஆவியின் அருள் வரங்களோடு நாம் ஒத்துழைத்தால் நாமும் குறைகள் நீங்கப் பெற்று உண்மையான சீடர்களாக மாறுவோம்.

நமது குறைகளை விட இயேசுவின் இரக்கம் எவ்வளவோ பெரியது.

ஆகவே குறையுள்ள மனிதர்களை நாம் ஒதுக்க வேண்டாம்.

அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்.

இறைவன் நமது மன்றாட்டைக் கேட்டருள்வார்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment