"விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது."
(மத்தேயு .24:42)
மாணவர்களில் இரண்டு வகையினர் இருக்கின்றார்கள்.
எல்லோருமே ஆண்டு இறுதித் தேர்வுக்குத் தயாரிப்பவர்கள் தான்.
சிலர் கல்வி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆண்டு முழுவதும் தயாரிப்பார்கள்.
சிலர் ஆண்டின் இறுதியில் தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் தயாரிக்க ஆரம்பிப்பார்கள்.
இதற்குக் காரணம் இறுதித் தேர்வின் கால அட்டவணை ஆரம்பித்திலேயே கொடுக்கப் பட்டு விடுவது தான்.
நமது வாழ்வை இறுதித் தேர்வுக்குத் தயாரிக்கும் பள்ளிக் கூடமாகக் கற்பனை செய்து கொள்வோம்.
ஆனால் இறுதித் தேர்வுக்கான கால அட்டவணை கொடுக்கப் படவில்லை.
ஆண்டின் எந்த நாளிலும் முன் அறிவிப்பு இன்றி தேர்வு நடக்குமானால் நாம் என்ன செய்வோம்?
ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே தேர்வுக்குத் தயாரிக்க ஆரம்பித்து விடுவோம்.
நமது பிறப்பு ஆரம்பம்.
இறப்பு இறுதித் தேர்வு.
இறப்பு ஆண்டவர் நம்மை அழைக்க வரும் நாள்.
ஆண்டவர் வாழ்வின் எந்த நேரத்திலும் நம்மை அழைக்க வரலாம்.
நமது குழந்தைப் பருவத்தில் வரலாம்,
இளமைப் பருவத்தில் வரலாம்,
வாலிபப் பருவத்தில் வரலாம்,
முதிர்ந்த வயதில் வரலாம்.
எந்த வினாடியில் வருவார் என்று நமக்குத் தெரியாது.
ஆகவே ஒவ்வொரு வினாடியும் நாம் ஆண்டவருடைய வருகைக்குத் தயாராக இருக்க வேண்டும்.
எப்படித் தயாராக இருக்க வேண்டும்?
விண்ணக வாழ்வுக்கு ஏற்ற விதமாய், அதாவது, ஆன்மாவில் பாவம் இல்லாமல் பரிசுத்த நிலையில் தயாராக இருக்க வேண்டும்.
நமது உடலில் நோய் எதுவும் இல்லையே, நோய் வராமல் சுகாதாரத்தோடு வாழ்ந்தால் முதிர்ந்த வயதில் தான் மரணம் வரும்,
அதுவரை விருப்பம் போல் ஜாலியாக வாழலாம், வயதான பின் பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி வாழ்ந்தால்
வாலிபப் பருவத்திலேயே எதிர் பாராத நேரத்தில் மரணம் வரலாம்.
உடல்நலத்தோடு இருப்பவர்களுக்கு மரணம் வராது என்று கூற முடியாது.
விபத்தினால் வருவதை நம்மால் தடுக்க முடியாது.
எனக்குத் தெரிந்த மாணவன் ஒருவன் ஆண்டு இறுதித் தேர்வு எழுதப் போய்க் கொண்டிருக்கும் போது வழியிலேயே விபத்தில் இறந்து விட்டான்.
அவன் கவனமாகத் தான் போனான்.
ஆனால் எதிரில் பைக்கில் வந்தவன் கவனமில்லாமல் வந்ததால் இவன் இறந்து விட்டான், அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.
எதுவும் நமது கையில் இல்லை.
இவனை அழைக்க வந்த ஆண்டவர் அந்த விபத்தைப் பயன் படுத்திக் கொண்டார்.
நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு ஆண்டில் மூன்று நாள் தியானம் முடிந்து
நான்காவது நாள் காலையில் மாணவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் எதிர் பாராத விதமாய் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான்.
அவன் ஆன்மா தயார் நிலையில் இருந்த போது ஆண்டவர் அவனை அழைத்துச் சென்று விட்டார்.
இதுவும் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்தது.
எங்களுக்குத் தெரிந்த குருவானவர் ஒருவர் எங்களோடு பேசிக்கொண்டிருந்ந போது
"என் தம்பி இன்னும் ஆறு மாதங்களில் குருப்பட்டம் பெறுகிறார்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து அவரைச் சந்திக்க நேர்ந்த போது மாணவர்கள் அவரிடம்,
"சுவாமி, உங்கள் தம்பி எப்போது வருவார்?" என்று கேட்டோம்.
"ஆண்டவரது சித்தம் வேறு மாதிரி இருந்திருக்கிறது."
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பட்டம் பெறவிருந்தது இமய மலையில் உள்ள கர்சியாங்கில்.
பட்டம் பெற வேண்டிய நாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற வேண்டிய குரு மாணவர்களோடு சில குருக்கள் மலையிலுள்ள காட்டுப் பகுதிக்கு picnic போயிருக்கிறார்கள்.
அவர் தனியாக மலை மேல் ஏறியிருக்கிறார்.
திரும்பி வரவில்லை.
எவ்வளவோ தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஒரு ஆண்டு கழித்து அவரது உடல் காடுகளின் நடுவில் உள்ள பாறையில் சாய்ந்து இருந்தது கண்டறியப்பட்டது.
அதற்கு மேல் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் பாறையில் சாய்ந்தபடி பட்டினி கிடந்து இறந்திருக்க வேண்டும் என்று யூகித்தார்கள்.
உடல் அழுகி விட்டது. முகம் மாறிவிட்டது. கையில் வாட்சின் உதவியுடன் அவர்தான் என்பதை உறுதி செய்தார்கள்.
ஆண்டவர் அவரை இமய மலைக் காட்டில் அழைக்க வந்திருக்கிறார்.
அவர் இதைக் கூறிய போது எங்களுள் ஏற்பட்ட உணர்ச்சியைக் கூற வார்த்தைகள் இல்லை.
மூன்று நாள் தியானம் செய்த உணர்வு ஏற்பட்டது.
நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி ஆயிரம் கனவுகள் வைத்திருப்போம்.
நாம் கேட்காமலேயே நம்மை உலகுக்கு அனுப்பிய கடவுள் நம்மைக் கேட்காமலேயே அழைக்க வருவார் .
நம்மை எப்பொழுது அழைக்க வரவேண்டும் என்பதை நித்திய காலமாக தீர்மானித்திருப்பார்.
எப்போது வேண்டுமானாலும் வரலாம். எந்த சூழ்நிலையிலும் வரலாம்.
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது முன் அறிவிப்பு இன்றி வந்து நம்மை அழைத்துச் செல்லலாம்.
நான் சாப்பிடும் போது வரலாம்.
அவருக்குத் திருப்பலி ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது வரலாம்.
பயணத்தின் போது வரலாம்.
அலுவலகத்தில் வரலாம்.
நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது வரலாம்.
எப்போது வந்தாலும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவரையும், நமது பிறனையும் அன்பு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் அவர் நினைவாகவே இருக்க வேண்டும்.
இக்கட்டுரையை எழுதி முடிக்கு முன்பே ஆண்டவர் என்னை அழைக்க வரலாம்.
நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment