"மக்களைஅனுப்பிவிட்டு, அ வர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்."
(மத்தேயு.14:23)
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்து விட்டு
இயேசு சீடர்களைப் படகில் ஏற்றி மறு கரைக்கு அனுப்பினார்.
இயேசு அவர்களோடு செல்லாமல் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.
இந்த வசனத்தை வாசிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதில் ஒரு கேள்வி எழும்.
"தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக"
இயேசு இறைமகன், அதாவது, இறைவன்.
"இறைவன் இறைவனிடம் வேண்டுவதற்காக"
தூய தம திரித்துவக் கடவுள் மறை உண்மை பின்னணியில் இந்த வார்த்தைகளைத் தியானிக்க வேண்டும்.
மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.
மூவரும் வெவ்வேறு ஆட்கள்,
மூவரும் ஒருவருள் ஒருவர் ஒன்றித்து இருக்கிறார்கள்.
ஒன்றித்து இருப்பதுதான் செபம்.
மூவரும் எப்போதும், எல்லா இடங்களிலும் ஒன்றித்து இருக்கிறார்கள்.
எப்போதும், எல்லா இடங்களிலும் என்ற வார்த்தைகள் கடவுளுக்குப் பொருந்தாது, ஏனெனில் கடவுள் காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டவர்.
ஆனால் மனிதன் என்ற முறையில் அவை இயேசுவுக்கு பொருந்தும்.
அவர் பிறந்ததும், வாழ்ந்ததும் காலத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டுதான்.
ஆகவே இயேசு உலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளும்,
எல்லா இடங்களிலும் அவர் இறைவனோடு (தந்தையோடும், தூய ஆவியோடும்) ஒன்றித்துதான் வாழ்ந்தார்.
தந்தை இறைவனோடும், தூய ஆவி இறைவனோடும் ஒன்றிக்க இறைமகன் இயேசு மலைமீது ஏற வேண்டிய அவசியம் இல்லை.
அவர் போதிக்கும் போதும், ஓய்வு எடுக்கும் போதும்,
ஒரே வார்த்தையில், எப்போதும், மற்ற இரண்டு ஆட்களோடு ஒன்றித்துதான் வாழ்ந்தார்.
"இறைவன் இறைவனிடம்" மகனாகிய கடவுள் தந்தையாகிய கடவுளிடம் வேண்டுவதற்காக.
ஒன்றிப்பாகிய செபம் நித்திய காலமும் நடந்து கொண்டு தானிருக்கிறது.
மூன்று ஆட்களும் இடத்துக்கும் காலத்துக்கும் அப்பாற்பட்டு செபித்துக் கொண்டிருந்தாலும்
இறைமகன் மனுமகனுமாய் இருக்கிறார் என்ற மறை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,
நாம் இறைவனோடு ஒன்றிக்க நேரம் இடம் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என்று
நமக்குப் போதிப்பதற்காகவும் இயேசு மலை மேல் ஏறுகிறார்.
இயேசு தனியே வேண்டச் சென்றது நாமும் பொது செபங்களில் கலந்து கொண்டால் மட்டும் போதாது,
ஒவ்வொருவரும் தனியாகவும் செபிக்க வேண்டும் என்று நமக்குக் கற்பிப்பதற்காக இயேசு தனியே மலை மேல் ஏறினார்.
நாமும் செபிக்க நேரம், இடம் ஒதுக்க வேண்டும்.
சிலர் வாழ்க்கையே செபம் கருத்துக்குத் தவறான பொருள் கொடுத்துக் கொண்டு,
கோவிலுக்கு வரமாட்டார்கள், ஞாயிறு திருப்பலிக்கு வர மாட்டார்கள்.
ஏன் என்று கேட்டால்,
"நான் கிறித்தவனாக வாழ்கிறேன்" என்பார்கள்.
யூதர்கள் தங்கள் தலைக் குழந்தையை கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது யூத மதச் சட்டம்.
இயேசு கடவுள். அவரைக் காணிக்கையாக அவருக்கே ஒப்புக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் அன்னை மரியாள் இயேசுவை கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தாள், நமக்கு முன் மாதிரிகையாக.
இயேசு கடவுள். அவர் திரு முழுக்குப் பெற வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் நமக்கு முன் மாதிரிகை காட்ட திரு முழுக்குப் பெற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விழாவுக்கும் பெற்றோருடன் செருசலேம் ஆலயத்துக்கச் சென்றார்.
அவர் எப்போதும் தந்தையோடு ஒன்றித்து இருக்கிறார்.
நம்மைப் போல வாய் திறந்து செபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆயினும் வாய் திறந்து செபித்தார், நமக்கு முன் மாதிரிகையாக.
நாம் இயேசுவைப் பின்பற்றி இன்னொரு இயேசுவாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment