Tuesday, August 19, 2025

"இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். (மத்தேயு.19:6)



"இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். 
(மத்தேயு.19:6)

"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."
(தொடக்கநூல் 2:24)

முதலில் படைக்கப்பட்டது ஆதாம். ஒரு உடல், ஒரு ஆன்மா.

ஆதாமின் உடலிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டாள்.

ஏவாளின் உடல் ஆதாமின் உடலுக்கு உரியது. 

அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்றான். 
(தொடக்கநூல் 2:23)

ஆகவே இருவருக்கும் ஒரு உடல்.  ஆனால் ஆன்மாக்கள் இரண்டு.

ஆணும், பெண்ணுமாகிய இருவர் ஒரு உடலாக இருப்பது தான் குடும்பம்.

ஆணையும் பெண்ணையும் ஒரு உடலாக இணைத்தது கடவுள். அதைப் பிரிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை.

"கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்."

இறைவனுடைய பிரதிநிதி குருவானவர்.

அவருடைய முன்னிலையில் இறைவன் இணைத்த திருமணத் தம்பதிகளை யாராலும் பிரிக்க முடியாது.

அதாவது எந்த சட்டமும் அவர்களுக்கு மணவிலக்கு (Divorce) கொடுக்க முடியாது.

கத்தோலிக்கத் திருச்சபையில் மணவிலக்கு(Divorce) என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு திருமணம் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டிய நிபந்தனைகள் யாவை?

1.மணமக்கள் இருவரும் எந்தவிதமான கட்டாயமோ, பயமுறுத்தலோ இல்லாமல்,
 முழு மனதுடன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

சம்மதம் இன்றி கட்டாயமாக நடத்தப்படும் திருமணம் செல்லாது.

 திருமணத்தின் அர்த்தத்தையும், கடமைகளையும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

 மனநலக் கோளாறு உள்ளவர்களாக இருக்கக் கூடாது.

தம்பதியர் இருவரில் ஒருவருக்கு மன நிலைக் கோளாறு இருந்தாலும் திருமணம் செல்லாது.

2.திருமண வயது:

 இந்திய அரசின்‌சட்டப்படி,  ஆணுக்கு 21 வயது, பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

3.திருமண விக்கினங்கள் 

ஞான உறவு
Spiritual relationship):

 திருமுழுக்கு பெறும்போது ஏற்பட்ட உறவு.

ஒருவர் தன்னுடைய ஞானத் தாயையோ ஞானத் தந்தையையோ திருமணம் செய்ய முடியாது.

இரண்டாங்கால் மட்டும் இரத்த உறவு (Second degree consanguinity): 

கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டப்படி, இரத்த உறவில் உள்ள நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

 இந்தத் தடை, "இரண்டாங்கால் மட்டும் இரத்த உறவு" வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாங்கால் என்றால் தந்தை அல்லது தாயுடன் பிறந்தவர்களின் மக்கள்.

அத்தை பிள்ளைகள் 
மாமா பிள்ளைகள், 
சித்தப்பா பிள்ளைகள் 
சித்தி பிள்ளைகள் 
ஆகியோர் இதில் அடங்குவர்.

ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் ஆயர் அவர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

4.ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் திரும்பவும் திருமணம் செய்ய முடியாது.

5.பாலுறவு கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமணம் செய்ய முடியாது.

6.வாழ்நாள் முழுவதும் இணைபிரியாத பந்தத்தை ஏற்படுத்தி, 

ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ப்பதற்கு இருவரும் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்கும் திருமணம் தான் செல்லுபடியாகும்.

ஏதாவது ஒரு நிபந்தனையை மீறியிருந்தாலும் திருமணம் செல்லாது.

இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகாத பட்சத்தில், ஒரு திருமணம் annulment செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதாவது திருமணம் செல்லாது என்று அறிவிக்கப் படலாம்.

பணத்துக்கு ஆசைப்பட்டு நிபந்தனைகளை மீறினால் பணமும் போய்விடும், திருமணமும் போய்விடும்.

நமக்கு முக்கியம் ஆன்மீக வாழ்வும், நிலை வாழ்வும் தான்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment