"ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்."
(மத்தேயு.19:14)
சிறு பிள்ளைகளைப் போன்றவர்களுக்கே விண்ணக வாழ்வு உரியது.
இயேசு பிறந்தவுடனே அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மாசில்லாக் குழந்தைகள்தான்.
மாசில்லாத் தன்மை சிறு பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய பிறவித் தன்மை.
பெரியவர்களுக்குத் தெரிவது போல சிறுவர்களுக்கு பாவத்தைப் பற்றியும் புண்ணியத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது.
ஆகவே அவர்களால் பாவம் செய்ய முடியாது.
சிறு வயதிலேயே மரிப்பவர்களும் பாக்கியவான்கள்.
சிறுவர்களைப் போல் மாசில்லாமல் வாழும் பெரியவர்களும் பாக்கியவான்கள்.
அன்னை மரியாள் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே சென்மப் பாவ மாசில்லாமல் உற்பவித்தாள்.
அது கடவுள் அவளுக்கு அளித்த விசேச வரம்.
நாம் திரு முழுக்குப் பெறும்போது நமது சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு மாசற்றவர்களாய் மாறுகிறோம்.
இந்த மாசற்ற தன்மையை நாம் இறுதிவரைப் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் நாம் வளர வளர பாவத்தினால் மாசற்றத் தன்மையை இழந்து விடுகிறோம்.
பாவம் என்றால் என்ன என்று தெரிந்த பிறகு அதில் விழாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சிறுவர்களின் மற்றொரு நல்ல குணம் பெரியவர்கள் கூறும் உண்மையை எதிர்க் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது.
இயேசுவின் போதனையை சிறுவனைப் போன்ற மனப்பக்குவம் உள்ள சாதாரண மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் சட்டம் படித்த பரிசேயர்களும், மறைஏற்நூல் அறிஞர்களும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.ஏற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமல்ல அவரது வார்த்தைகளில் குறை கண்டு பிடிக்கவே அவரது பின்னால் சென்றார்கள்.
சென்றது மட்டுமல்ல அவரது சிலுவை மரணத்துக்கு அவர்களே காரணமானார்கள்.
சிறு பிள்ளைகளைப் போல நம்மை வழிநடத்துபவர்கள் கூறுவதைக் கேட்டு அதை நம்பி அதன் வழி நடப்பவர்கள் மீட்புப் பெறுவார்கள்.
ஞாயிறு திருப்பலியின் போது குருவானவர் வைக்கும் பிரசங்கத்தை
அதைப் பின்பற்றுவதற்காகக் கேட்காமல்
அதிலுள்ள பிழைகளைக் கண்டு பிடித்து விமர்சனம் செய்வதற்காகவே கேட்பவர்களும் நம்மில் இருக்கிறார்கள்.
தாய் கூறுவதைக் குழந்தைகள் போல இறை வாக்கைக் கேட்பவர்கள் பாக்கியசாலிகள்.
குழந்தைகளுடைய மற்றொரு தன்மை அவர்களுடைய தாழ்ச்சி.
எந்தக் குழந்தையும் தன் தாயை விட தான் சிறந்தது என்று எண்ணாது.
தன்னுடைய இயலாமையை முழுவதும் உணர்வதால் தான் அது முழுக்க முழுக்க தன் தாயைச் சார்ந்திருக்கிறது.
அதன் செயல்கள் அனைத்தும் தாயின் சொற்படி தான் நடக்கும்.
அதன் நடவடிக்கைகளுக்கு தாய் தான் பொறுப்பு.
ஆகவே குழந்தை தவறாக நடக்க வாய்ப்பே இல்லை.
ஆன்மீகத்தில் குழந்தைகளைப் போல் இருப்பவர்கள் தங்களால் சுயமாக எதையும் செய்ய முடியாது என்பதையும்,
தங்கள் நற்செயல்களுக்கு முழுக்க முழுக்க கடவுளை மட்டும் சார்ந்திருப்பதையும் உணர்வார்கள்.
அந்த நிலைதான் ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.
என்னால் எல்லாம் முடியும் என்று எண்ணுபனால் ஆன்மீக வாழ்வு வாழவே முடியாது.
எல்லாம் வல்ல இறைவன் கையில் தன்னை ஒப்படைத்து விட்டு வாழ்பவன் எக்ஸ்பிரஸ் வண்டியில் பயணிப்பவனுக்குச் சமம்.
அவன் வண்டியில் அமர்ந்திருந்தாலே போதும்.
எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறாதவன் நடந்தே பயணிக்க வேண்டும்.
களைத்துப் போய் வழியில் உட்கார்ந்தால் ஊர்ப்போய்ச் சேர முடியாது.
நம்மால் சுயமாகச் செய்ய முடியாது என்பதை உணர்வோம்.
நம்மை முற்றிலும் கடவுளிடம் ஒப்படைப்போம்.
"நான் எங்கே வாழ்கிறேன், கடவுள் தான் என்னில் வாழ்கிறார்"
என்று புனித சின்னப்பரோடு நாமும் சேர்ந்து சொல்வோம்.
நாமும் இறைவனிடம் நம்மை முழுவதும் அர்ப்பணிப்போம்.
"இறைவா, இதோ நான் உமது அடிமை."
அடிமை இறைவன் சொன்னதைச் செய்தால் போதும்.
இறைவன் திருப்தி அடைவார்.
நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு இறைவனின் திருப்தியே போதும்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment