Friday, August 22, 2025

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்." (மத்தேயு.23:11)



"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."
(மத்தேயு.23:11)

இயேசு இறைமகன்.
அனைத்தையும் படைத்தவர்.
அனைவரிலும் பெரியவர்.

நாம் அவருடைய தொண்டர்கள்.

நமது தலைவராகிய அவர் என்ன செய்தார்?

அவருடைய தொண்டர்களாகிய நம்மைப் போல மனிதனாகப் பிறந்தார்.

பிறந்து 30 ஆண்டுகள் தன்னால் படைக்கப்பட்ட யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

மூன்று ஆண்டுகள் சாதாரண மக்களுக்கு சேவை செய்து கொண்டே நற்செய்தியை அறிவித்தார். 

அவர் செய்த முக்கியமான சேவைகள் நோயாளிகளைக் குணமாக்கியது, இறந்தவர்களை உயிர்ப்பித்தது, பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தது,
பாவங்களை மன்னித்ததன் மூலம்  ஆன்மாக்களைப் பரிசுத்தமாக்கியது
போன்றவை.

தலைவராக இருப்பவர் தொண்டர்களுக்குத்
 தொண்டு செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாக புனித வியாழன் அன்று தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.

தனது வாழ்வின் இறுதி நாளில் தலைவராகிய அவர் தொண்டர்களாகிய நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தொண்டு என்றால் சேவை.

இன்று நமக்கு ஆன்மீக சேவை செய்து கொண்டிருப்பவர்கள் யார்? 

நமது தலைவராகிய இயேசுவின்  பிரதிநிதிகள். 

இயேசுவாக நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

திருப்பலியின் போது அவர்கள் கூறும் 

"இது என் சரீரம்"
"இது என் ரத்தம்"

என்ற வார்த்தைகளும்,

பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அவர்கள் கூறும், 

"நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்"

என்ற வார்த்தைகளும் 

தனது குருக்களின் மூலம் இறைமகன் இயேசுவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு விளக்குகின்றன.

அதாவது குருக்களின் உருவத்தில் மக்களிடையே தொண்டாற்றிக் கொண்டிருப்பவர் இறை மகன் இயேசுவே. 

தலைவர் அவருடைய தொண்டர்களுக்குத் தொண்டு புரிகிறார்.

தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும்? 

தலைவருக்குத் தொண்டு செய்பவன் தான் தொண்டன். 

நாம் நமது அயலானுக்குத் தொண்டு செய்யும் போது நமது தலைவருக்குத் தொண்டு செய்கிறோம். 

அயலானுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அவனை நாம் நேசிக்க வேண்டும். 

ஆகவே நாம் அயலானை நேசிக்கிறோம். 

நேசிக்கும் போது நேசத்தின் உருவாகிய இயேசுவைப் பிரதி பலிக்கிறோம்.

நாம்  அயலானை நேசித்து அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்யும்போது மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண்பார்கள். 

அதாவது நமது தலைவரைக் காண்பார்கள். 

இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும். 

நாம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும்போது மற்றவர்கள் நம்மில் நமது தலைவராகிய இயேசுவைக் காண்பார்கள். 

மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டுமென்றால் நாம் அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."

நாம்  மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும் போது  பெரியவர்களாக மாறுகிறோம்.

இயேசு தன்னை நேசிப்பது போல நம்மையும் நேசிக்கிறார். 

அவரைப் பின்பற்றி நாமும் நம்மை நேசிப்பது போல நமது பிறரை நேசிக்க வேண்டும். 

இயேசு நம்மை நேசிப்பதன் காரணமாக நமக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார். 

நாமும் இயேசுவைப் பின்பற்றி நமது பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். 

கிறிஸ்துவைப் போல் வாழ்ந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment