"உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."
(லூக்கா.12:34)
செல்வம் இருவகை, பொருள் செல்வம், அருள் செல்வம்.
பொருள் செல்வம் இவ்வுலகை சார்ந்தது.
நமது உடல், அது வாழ்வதற்கான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் பணம், சொத்துக்கள் போன்றவை பொருட்செல்வத்தில் அடங்கும்.
அருட்செல்வம் விண்ணுலகை சார்ந்தது.
ஆன்மீக வாழ்வில் வளர்வதற்கான இறையருள், இறையன்பு, பிறரன்பு, இரக்கம் நற்செயல்கள், தாழ்ச்சி முதலான எழுவகைப் புண்ணியங்கள் போன்றவை இதில் அடங்கும்.
பொருட்செல்வம் இவ்வுலகைச் சார்ந்ததாகையால் நாம் உலகில் வாழும் மட்டும் நம்மோடு இருக்கும்.
நாம் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் போது நம்முடன் வராது.
நமது உடல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடும்.
மற்றவற்றை இவ்வுலகில் வாழ்கின்ற மற்றவர்கள் அனுபவிப்பர்.
அருட்செல்வம் நித்திய காலம் வாழப்போகும் ஆன்மாவைச் சார்ந்ததாகையால் நாம் இவ்வுலகில் வாழும் போதும், மறுவுலகம் செல்லும் போதும் எப்போதும் நம்மோடு இருக்கும்.
இப்போது சிந்திப்போம் நாம் தேட வேண்டியது பொருட் செல்வத்தையா? அருட்செல்வத்தையா?
அழியும் செல்வத்தையா? அழியாச் செல்வத்தையா?
நாம் எந்த செல்வத்தைத் தேடுகிறோமோ அதைச் சுற்றி தான் நம் எண்ணங்கள் வட்டமிடும்.
தேன் இருக்கும் மலரைத் தேனீக்கள் வட்டமிடுவது போல
நமக்கு எந்தச் செல்வத்தின் மீது ஆசை இருக்கிறதோ அதைச் சுற்றி தான் நமது எண்ணங்களும் இருக்கும்.
வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தின் ஆரம்பம் (Starting point) சிந்தனை தான்.
சிந்தனைதான் சொல்லாகி,
சொல் செயலாகி,
மூன்றும் சேர்ந்து வாழ்க்கை ஆகும்.
சிந்தனையின் பிறப்பிடம் உள்ளம்.
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."
நமது உள்ளம், அதாவது, சிந்தனைகளின் பிறப்பிடம் எங்கிருக்கும்?
நாம் ஆசைப்படும் செல்வத்தின் மீது இருக்கும்.
அதாவது எந்தச் செல்வத்தின் மீது ஆசைப் படுகிறோமோ அந்தச் செல்வத்தின் மீது இருக்கும்.
ஆன்மீக செல்வத்தின் மீது நாம் ஆசைப்பட்டால் நாம் எப்போதும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம்.
பகலில் பணி செய்து கொண்டிருக்கும் போதும் இரவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போதும் நமது சிந்தனை நாம் வாழப்போகும் இறையரசைப் பற்றியே இருக்கும்.
நமது சொல்லும் செயலும் அதைப் பற்றியே இருக்கும்.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் விண்ணக பேரின்ப அரசை ஈட்டுவதிலேயே குறியாக இருப்போம்.
ஒரு காதலன் தனது காதலியை பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பான்.
அவளைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருப்பான்.
அவளை அடைவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பான்.
அவனது ஒவ்வொரு செயலும் அதற்காகவே இருக்கும்.
நாம் இயேசுவின் அரசின் மீது ஆசைப்பட்டால் நாம் எப்போதும் இயேசுவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம்.
யாரிடம் பேசினாலும் இயேசுவைப் பற்றியே பேசுவோம்.
ஒவ்வொரு செயலும் இயேசுவை அடைவதேயே நோக்கமாக இருக்கும்.
இறைவன் நம்மை விண்ணக வாழ்வுக்காகத்தான் படைத்தார்.
விண்ணக வாழ்வே நமது இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம்.
விண்ணக வாழ்வுக்காக இவ்வுலகில் வாழ்வது கடினமா அல்லது எளிதா?
லௌகீக வாழ்க்கை தான் எளிது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,
ஏனெனில் லௌகீக வாழ்க்கை வாழ்க்கை வாழ்வோர் தங்கள் விருப்பம் போல் வாழலாம்,
ஆன்மீக வாழ்க்கை வாழ்வோர் இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும்.
அது கடினம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் ஆன்மீக வாழ்க்கையை நமது விருப்பமாக்கிக் கொண்டால்,
அதைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால்,
நமது விருப்பப்படி வாழலாமே.
ஒவ்வொரு வினாடியும் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால்,
நமது சொல்லும் செயலும் அதை பற்றியதாகவே இருக்கும்.
சிந்தனையும் சொல்லும் செயலும் ஆன்மீகத்தைப் பற்றியே இருந்தால் ஆன்மீக வாழ்க்கை தான் எளிது.
"பகலும் இரவும் ஓய்வே எடுக்காமல் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாயே, கட்டமாக இல்லை?"
"என் மனைவிக்கு ஒரு வைர அட்டிகை வாங்கிக் கொடுக்க வேண்டும். அதற்காக என் உயிரை வேண்டுமானாலும், சந்தோசமாக."
இதை அப்படியே ஆன்மீகத்துக்கு மாற்றுங்கள்.
" இரவும் பகலும் ஓய்வே எடுக்காமலும், ஒன்றும் சாப்பிடாமலும் திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிட்டு செபமாலை செபித்துக் கொண்டிருக்கிறாயே, கட்டமாக இல்லை?"
"என் இயேசுவோடு நித்திய காலமும் இணைந்து பேரின்பம் அனுபவிக்கப் போகிறேன் என்பதை எண்ணும் போது இரவும் பகலும் முழங்கால் படியிட்டு செபிப்பது ஒரு கட்டமா?
மகிழ்ச்சிகரமான அனுபவம்."
நித்திய கால பேரின்ப வாழ்க்கைக்கு முன் இவ்வுலக சிற்றின்ப வாழ்க்கை தூசிக்குச் சமம்.
உண்மையிலேயே விண்ணக வாழ்வின் மீது ஆசை இருந்தால் நமது எண்ணமெல்லாம் அங்கேயே இருக்கும்.
நாமும் அங்கே இருப்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment