Friday, August 29, 2025

நித்திய காலமாகத் தீர்மானிக்கப் பட்ட இறைவனின் மீட்புத் திட்டம்.




நித்திய காலமாகத் தீர்மானிக்கப் பட்ட இறைவனின் மீட்புத் திட்டம்.


ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு.

ஈசாக்கு ஏசாவுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட ஆசீர்வாதங்களை யாக்கோபு தந்தையை ஏமாற்றி வாங்கிக் கொண்டான்.

ஏமாற்றுவது பாவம்.

சாக்கடையில் விழுந்தவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதிப்பது போல் பாவிகளை மீட்க வந்த இயேசு ஏமாற்றிய அந்தப் பாவியின் வம்சத்தில் தான் மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவும், திரு முழுக்கு யோவானும் யாக்கோபின் வம்சத்தினர்.

ஆனால் ஏரோது மன்னர்கள் ஏசாவின் வம்சத்தில் பிறந்தவர்கள்.

ஒரு ஏரோது இயேசுவைக் கொல்ல முயன்றான்.

அந்த முயற்சியில் மாசில்லாக் குழந்தைகளைக் கொன்றான்.

இன்னொரு ஏரோது திரு முழுக்கு யோவானைக் கொன்றான் 

நம்மைப் பாவத்திலிருந்து மீட்கப் பிறந்த இயேசுவும், அவரின் முன்னோடி திரு முழுக்கு யோவானும், வில்லனாகச் செயல் புரிந்த ஏரோதும் ஒரே வம்சத்தினர்,
ஈசாக்கின் வம்சத்தினர்.


இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடம் ஏதாவது இருக்கிறதா?

தியானிப்போம்.


யாக்கோபு பாவம் செய்தவன்.

அவனுடைய வம்சத்தில் இயேசுவும், யோவானும் பிறந்தது இயேசு பாவத்தை வெறுத்தாலும் பாவியை நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

நாம் எவ்வளவு பெரிய பாவத்தை எத்தனை முறைகள் செய்தாலும் நம்மீது கடவுள் கொண்டுள்ள அன்பு இம்மி அளவு கூட குறையாது.

ஒருவன் கடவுளை வெறுத்தாலும் அவர் அவன்மீது அன்பு செய்து கொண்டுதானிருப்பார்.

சாத்தானைக் கூட கடவுள் நேசிக்கிறார்.  ஏனெனில் அவர் மாறாதவர். தன் அன்பின் காரணமாகத்தான் அவர் லூசிபெரைப் படைத்தார்.

லூசிபெர் சாத்தானாக மாறியிருக்கலாம். ஆனால் அவரைப் படைக்கக் காரணமான இறை அன்பு மாறாது.

நாம் தவறு செய்தாலும், கடவுள் நம்மை தன் திட்டங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது பாவம்.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் பாடுகளுக்குக் காரணமாக இருந்தது பாவம்.

ஆனால் அவர்களைத் தனது மீட்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

  ஏசா வழிவந்த ஏரோது மன்னர்கள், இயேசுவையும் யோவானையும் எதிர்த்தனர்.

ஏசா குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் ஏரோது கெட்டவனாக மாறவில்லை.

எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் அவனவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறுவதற்கு அவனவன்தான் பொறுப்பு.

அனைவரையும் படைப்பவர் கடவுள்.

யாக்கோபின் வம்சத்தில் மனிதனாகப் பிறந்த அதே இறைமகன் தான் ஏசாவின் வம்சத்தில் ஏரோதுவைப் படைத்தார்.

ஏரோது தன்னைக் கொல்லத் தேடுவான் என்றும், ஆயிரக்கணக்கான மாசில்லாக் குழந்தைகளை கொல்வான் என்றும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியுமே!

ஏரோதுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

நாம் எப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்.

ஒரு மனிதன் எந்த வம்சத்தில் பிறந்தாலும், அவனது செயல்களும் தெரிவுகளுமே அவனது ஆன்மீக நிலையைத் தீர்மானிக்கின்றன.


 ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், ஒருவர் தவறான பாதையில் செல்ல முடியும்.

 அதேபோல, குறைபாடுகள் உள்ள குடும்பத்தில் பிறந்தாலும், ஒருவர் கடவுளுக்கு உகந்தவராக மாற முடியும்.

யாக்கோபு ஏமாற்றியது பாவம், ஆனால் கடவுள் அந்தப் பாவத்தையும் தன் மீட்புத் திட்டத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டார்.

 இது, கடவுளின் அளவற்ற இரக்கத்தையும், மனிதர்களின் குறைகளைத் தாண்டிச் செயல்படும் அவரது வல்லமையையும் காட்டுகிறது.


மேலும், ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்த ஒருவரைக் கொல்வதற்கு அதே வம்சத்தைச் சேர்ந்த இன்னொருவர் முயன்றது,

பாவத்தின் விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது.

 வம்சாவளி ஒற்றுமையைக் கூட, பாவத்தால் ஏற்படும் விளைவு சீர்குலைத்து விடுகிறது.


நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மீகப் பாடங்கள்.


 மனிதர்களின் தவறுகளைத் தாண்டியது கடவுளின் திட்டம்.

 நாம் தவறு செய்தாலும், கடவுள் நம்மைக்  கைவிடுவதில்லை. 

 நம்மையும் தன் மீட்புத் திட்டத்தில் பயன்படுத்துகிறார்.

யாக்கோபு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.


  நாம் எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும், நல்லவராகவும் கெட்டவராகவும் மாறுவதற்கான சுதந்திரம் நமக்கு உண்டு. 

ஏரோது மன்னர்களின் வரலாறு, நம்முடைய சொந்தத் தேர்வுகள்தான் நம்முடைய ஆன்மீக வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

கடவுள் நித்தியர். நித்திய காலமும் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போகின்றவை அனைத்தையும் அறிந்தவர்.

பாவம் தவிர மற்ற அனைத்தும் அவரது திட்டப்படி தான் நடக்கின்றன. அவரது விருப்பத்துக்கு எதிர் மாறான பாவத்தைக் கூட தனது திட்டத்திற்கு அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஏசா, யாக்கோபு ஆகியோரின் வம்ச வரலாறு இதைத்தான் சுட்டிக் காண்பிக்கிறது. 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment