இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் "
(மத்தேயு.17:20)
ஒரு பையனிடமிருந்து சீடர்களால் ஓட்ட முடியாத பேயை இயேசு ஓட்டி விட்டார்.
தங்களால் ஏன் முடியவில்லை என்று சீடர்கள் இயேசுவைக் கேட்டார்கள்.
அதற்கு அவர்களிடம் போதிய விசுவாசமின்மை தான் காரணம் என்று இயேசு சொன்னார்.
"உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது." என்று இயேசு கூறினார்.
கடுகு சிறியதாக இருந்தாலும் அதற்குள் வானத்துப் பறவைகள் வந்து தங்கும் அளவுக்கு கிளைகள் உள்ள பெரிய செடி இருக்கிறது.
ஆல விதை மிகச் சிறியது, அதற்குள் மிகப்பெரிய ஆலமரம் இருக்கிறது.
விசுவாசத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் அதற்குள் இருக்கின்ற ஆன்மீக சக்தி மிகப்பெரியது.
அந்த சக்தியைக் கொண்டு மிகப்பெரிய காரியங்களைச் சாதிக்கலாம்.
நாம் விசுவசிப்பது சர்வ வல்லப கடவுளை.
கடவுளால் எல்லாம் முடியும்.
சர்வ வல்லப கடவுளை உறுதியாக விசுவசித்தால் நம்மால் முடியாத பெரிய காரியங்களைக் கடவுள் உதவியால் சாதிக்கலாம்.
அளவுக்கும், சக்திக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு தேங்காய் அளவு கல்லையும், அதே அளவு களிமண் உருண்டையையும் எடுத்துக் கொள்வோம்.
களிமண் உருண்டையை நமது தலைமீது எறிந்தால் களிமண் உருண்டை உடைந்து விடும்.
அதே அளவு கல்லை நமது தலைமீது எறிந்தால் நமது தலை உடைந்து விடும்.
களிமண்ணை விட கல் சக்தி வாய்ந்தது.
ஒரு கிலோ கல், ஒரு கிலோ பஞ்சு, இரண்டில் எது கனமானது?
இரண்டும் ஒரே அளவு கனம் தான்.
ஆனால் கல்லினால் சாதிக்க முடியாததை பஞ்சினால் சாதித்து விடலாம்.
புனித அந்தோனியார் அளவு கடந்த விசுவாசத்தோடு நற்கருணை ஆண்டவரை நேசித்தார்.
அவரது விசுவாசத்தினால் நற்கருணை ஆண்டவர் முன் ஒரு கழுதையை முழங்கால் படியிடச் செய்ய முடிந்தது.
நாமும் திவ்ய நற்கருணையில் ஆண்டவர் இருப்பதை விசுவசிக்கிறோம்.
ஆனால் நம்முடைய விசுவாசத்தினால் நம்மையே நற்கருணை முன் முழங்கால் படியிட செய்ய முடியவில்லை.
அந்தோனியாருடைய விசுவாசத்தில் உள்ள சக்தி நமது விசுவாசத்தில் இல்லை.
ஒவ்வொரு செபமாலை செபிக்கும் போதும் விசுவாசப் பிரமாணத்தைச் சொல்கிறோம்.
விசுவசிக்கிறோம்.
நமது விசுவாசத்தில் சக்தி இல்லை.
எல்லாம் வல்ல தந்தை இறைவனை விசுவசிக்கிறோம்.
ஆனால் பிரச்சினைகள் வரும் போது என்ன ஆகுமோ என்று ஏன் பயப்படுகிறோம்?
தந்தையின் மேல் சக்தி வாய்ந்த விசுவாசம் இல்லை.
நம்மிடம் ஆழமான விசுவாசம் இல்லை.
விசுவாசத்தின் ஆழத்தை ஸ்கேல் கொண்டு அளக்க முடியாது.
நமது செயலைக் கொண்டு தான் அளக்க முடியும்.
நோயினால் மரணம் நெருங்கும் போது நாம் பயந்தால் நமது விசுவாசத்தில் ஆழம் இல்லை.
மரண நேரத்திலும் மகிழ்ச்சியாய் இருப்பவனுக்கு விண்ணக வாழ்வின்மேல் ஆழமான விசுவாசம் இருக்கிறது.
மரணம் பேரின்ப வாழ்வின் ஆரம்பம் என்று உறுதியாக விசுவசிப்பவன் மரணத்தை கரம் கூப்பி வரவேற்பான்.
உறுதியாக விசுவசியாதவன்தான் பயப்படுவான்.
எந்த மகன் மூலம் ஆபிரகாமின் சந்ததியைப் பலுகிப் செய்வேன் என்று ஆண்டவர் சொன்னாரோ அதே மகனைத் தனக்குப் பலி கோடுக்கச் சொன்னார்.
அபிரகாமும் அவனைப் பலியிட அழைத்துச் சென்றார்.
செத்தவன் மூலம் எப்படிச் சந்ததி பலுகும் என்ற சந்தேகம் அவருக்கு வரவில்லை.
ஏனெனில் அவரது விசுவாசம் மிக உறுதியானது.
கடவுளால் முடியாதது எதுவும் இல்லை.
உதவிகளைக் கேட்டு நீண்ட நேரம் வார்த்தைகளால் செபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மரம் வைத்தவருக்கு தண்ணீர் ஊற்றத் தெரியும்.
படைத்தவருக்குக் காப்பாற்றத் தெரியும்.
எனக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.
அவருக்குத் தெரிந்ததை நான் அவருக்கு ஞாபகமூட்ட வேண்டிய அவசியம் இல்லை.
என் கடன் பணி கிடப்பதே என்று இறைப்பணியிலும், பிறர் பணியிலும் முழு நேரத்தையும் செலவிடுவோம்.
அவர் ஒரு குறைவுமின்றி நம்மை வழிநடத்துவார்.
இறைவனின் வல்லமையைப் பற்றி தியானிப்போம்.
நமது விசுவாசத்தை ஆழப் படுத்துவோம்.
நம்மால் சாதிக்க முடியாததை இறைவன் அருளால் சாதிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment