"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
(லூக்கா.1:43)
மனுமகனான இறைமகன் தன் நற் செய்திப் பணியை ஆற்ற பிறக்கும் வரைக் காத்திருக்கவில்லை.
அவர் மனிதனாக உற்பவிக்கும் முன்பே மரியாள் தன்னை அவரது அடிமையாக அர்ப்பணித்து விட்டாள்.
உற்பவித்த உடனே தனது அடிமையை நற் செய்திப் பணிக்கு அனுப்பி வைத்தார்.
நற்செய்தி வாயாலும், வார்த்தைகளாலும் மட்டும் அறிவிக்கப்படுவதல்ல.
செயலாலும் அறிவிக்கப் படுவது.
"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி"
"உனது அயலானுக்கு என்ன செய்கிறாயோ அதை எனக்கே செய்கிறாய்."
இது இயேசுவின் நற்செய்தி.
"இறைச் சிந்தனை, இறைச்சொல், நற்செயல் ஆகிய மூன்றின் உருவம்தான் மரியாள்.
மரியாள் தன் வயிற்றில் அப்போது தான் உற்பவித்திருந்த மகனால்
உந்தப்பட்டு,
அவரது பிறரன்பு பற்றிய நற்செய்தியைத் தன் சொல்லாலும் செயலாலும் நடைமுறைப் படுத்தப் புறப்பட்டு விட்டாள்.
யூதேயாவின் மலை நாட்டில் எருசலேம் ஆலயத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் தன் கணவர் சக்கரியாவுடன் வாழ்ந்து வந்த எலிசபெத் என்னும் உறவினர்
முதிர்ந்த வயதில் கருத்தரித்திருப்பதாக கபிரியேல் தூதர் மூலம் அறிந்த மரியாள்
அவளை வாழ்த்தவும், அவளுக்கு சேவை செய்யவும் புறப்பட்டு விட்டாள்.
நாசரேத்திலிருந்து எலிசபெத்தின் வீட்டுக்குத் தூரம் 120 கி.மீ.
இன்றைய போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில்,
14 வயது பெண் வயிற்றில் அப்போதுதான் உற்பவித்த குழந்தையுடன்
மலை நாட்டில் நடைப்பயணம், தனியே.
மிகக் கடினமான பயணம், வேறு வழியின்றி செல்பவர்களுக்கு.
விருப்பமாகச் செய்பவர்களுக்கு கல் சுமையும் கரும்புச் சுவைதான்.
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்ததும் எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
எலிசபெத் உண்டாகியிருப்பது கபிரியேல் மூலம் மரியாளுக்குத் தெரியும்.
மரியாள் உண்டாகியிருப்பதை தூய ஆவியின் தூண்டுதலால் மட்டுமே எலிசபெத் அறிந்தாள்.
அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறி வாழ்த்தினார்.
பைபிள் மட்டும் போதும் என்று கூறும் நமது பிரிந்த சகோதரர்களில்சிலர்,
மரியாள் இயேசுவின் தாய், இறைவனின் தாய் அல்ல என்கிறார்கள்.
மரியாள் ஆண்டவரின் தாய் என்பதைத் தூய ஆவியே எலிசபெத் மூலம் உறுதிப்படுத்தி விட்டார்.
இறைப் பணிக்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்தவர்கள் தூய ஆவியால் தான் வழி நடத்தப் படுகிறார்கள்.
தூய ஆவி அன்பின் தேவன்
கடவுள் ஒருவர்,
ஆட்கள் மூவர்.
முதல் ஆள் தந்தை.
இரண்டாம் ஆள் மகன்.
மூன்றாம் ஆள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் அன்பு.
அன்பின் காரணமாக நடக்கும் எல்லா செயல்களுக்கும் தூய ஆவியை காரணராகக் குறிப்பிடுகிறோம்.
தந்தை மனுக்கலத்தைப் படைத்தார்.
மனுக்குலத்தை மீட்க மகன் மனிதனாப் பிறந்தார்.
மனித குலத்தின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் மனித உரு எடுத்ததால்
அவர் தூய ஆவியின் வல்லமையால் மனித உரு எடுத்ததாகக் குறிப்பிடுகிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபை இறையன்புப் பணிகளைச் செய்து கொண்டிருப்பதால் அதைத் தூய ஆவி வழி நடத்துவதாகக் குறிப்பிடுகிறோம்.
ஆனாலும் கடவுள் ஒருவரே என்ற மறை உண்மை மனதில் இருக்க வேண்டும்.
கடவுள் உலகைப் படைத்தார்.
கடவுள் உலகை மீட்டார்.
கடவுள் திருச்சபையை வழி நடத்துகிறார், என்பது மறை உண்மை.
மரியாள் இறைவனின் தாய் என்ற மறை உண்மையை எலிசபெத்துக்கு வெளிப்படுத்தியது அவரை ஆட்கொண்ட தூய ஆவியானவர்.
தூய ஆவி நம்மை வழிநடத்துகிறார் என்பது பற்றி தியானிப்போம்.
இறைமகன் மரியின் வயிற்றில் மனிதனாகப் பிறந்து,
30 ஆண்டுகள் திருக்குடும்பத்தில் கீழ்ப்படிந்து வாழ்ந்து,
மூன்று ஆண்டுகள் நற் செய்தியை அறிவித்து,
சீடர்களுக்குப் பயிற்சி கொடுத்து
நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்து
இராயப்பரின் தலைமையில் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவினார்.
ஆனாலும் தூய ஆவி சீடர்கள் மேல் இறங்கி வந்த பெந்தகோஸ்து நாளையே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதுகிறோம்.
சீடர்கள் இயேசுவின் கையில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருந்தாலும் பயிற்சி முழுமையானது தூய ஆவியின் வருகையின்போது தான்.
அது வரை தாங்கள் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்த ஜான் மாற்கின் இல்லத்தை விட்டு வெளியே வர பயந்து கொண்டிருந்தார்கள்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் மக்கள் எருசலேமில் கூடும் பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வர தீர்மானித்தார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் நற் செய்தியை அறிவிக்க அது வசதியாக இருக்கும்.
இயேசு விண்ணகம் எய்திய பின் அன்னை மரியாள் தான் சீடர்களுக்குப்
பாதுகாவலியாக இருந்து செயல்பட்டாள்.
தூய ஆவி இறங்கி வந்தவுடன் சீடர்கள் விசுவாசத்தில் உறுதி அடைந்தார்கள், பயம் நீங்கி போதிக்கத் திடன் பெற்றார்கள்.
பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட சீடர்கள் நற் செய்தியை போதித்த முதல் நாளே மூவாயிரம் பேர் திரு முழுக்குப் பெற்றார்கள்.
பன்னிரு சீடர்களும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று நற் செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.
அன்னை மரியாள் அருளப்பரின் பாதுகாப்பில் அவர் நற் செய்தியை அறிவித்த எபேசு நகரில் தங்கியிருந்தாள்.
கி.பி.48ஆவது ஆண்டு அன்னை மரியாளுக்குச் சுகமில்லை.
தூய ஆவியால் இச்செய்தி அனைத்து சீடர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
தோமையாரைத் தவிர அனைவரும் எபேசு நகருக்கு வந்து விட்டார்கள்.
மரியாள் மரணம் அடைந்தாள்.
மறுநாள் அன்னையை கிறித்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தார்கள்.
அடக்கம் செய்த மறுநாள் தோமையார் வந்து சேர்ந்தார்.
"நான் அன்னையின் முகத்தைப் பார்க்க வேண்டும்" என்று பிடிவாதம் செய்தார்.
அவருக்காகக் கல்லறையைத் திறந்தார்கள்.
உள்ளே அன்னையின் உடல் இல்லை.
தாயின் உடல் மண்ணுக்கு இறையாவதை மகன் விரும்பவில்லை என்பதை உணர்ந்தார்கள்.
அன்னை மகனால் விண்ணக வாழ்வுக்கு ஆன்ம சரீரத்தோடு எடுத்துச் செல்லப் பட்டாள் என்று தீர்மானித்தார்கள்.
அக்காலம் முதல் அன்னையின் விண்ணேற்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
எல்லாம் தூய ஆவியின் செயல்.
சீடர்களை வழி நடத்திச் சென்றவர் தூய ஆவி.
அவர்களுடைய போதனையில் தவறு எதுவும் ஏற்படாதபடி அவர்தான் பாதுகாத்தார்.
அவர்கள் போதிக்க ஆரம்பிக்கும்போது அவர்கள் கையில் நற் செய்தி நூல்கள் இல்லை.
இயேசு மரித்தது கி.பி. 33 ல்.
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.
உயிர்த்த 50 வது நாளில் சீடர்கள் மேல் தூய ஆவி இறங்கினார்.
சீடர்கள் போதிக்கத் துவக்கிய நாளில் திருச்சபையின் பாரம்பரியம் ஆரம்பித்தது.
நற் செய்தி நூல்களும், நிருபங்களும் கி.பி 65 ற்குப் பிறகு தான் எழுதப்பட்டன.
அதாவது இயேசுவின் போதனை எழுத்து வடிவம் பெற்றது கி.பி.65க்குப் பிறகுதான்.
கி.பி 382ல்தான் கத்தோலிக்கத் திருச்சபை 72 புத்தகங்களைத் தொகுத்து பைபிளை உருவாக்கியது.
பைபிள் தொகுக்கப்பட்ட நான்காம் நூற்றாண்டு வரை திருச்சபையின் பாரம்பரியத்தில் மட்டும் தான் இயேசுவின் போதனை மக்களை அடைந்தது.
பைபிளைப் பெற்றதே பாரம்பரியம் தான்.
பாரம்பரியத்தின் உதவி இல்லாமல் பைபிளைப் புரிந்துகொள்ள முடியாது.
அதனால்தான் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாத பிரிவினை சபையினர் பைபிளுக்குத் தப்புத் தப்பாக பொருள் கொடுக்கின்றன.
பாரம்பரியத்திலும், பைபிளிலும் தூய ஆவியின் வழி நடத்துதல் இருக்கிறது.
தூய ஆவியின் வழி நடத்துதலின்படிதான் சீடர்கள் போதித்தனர்.
திருச்சபையின் தலைவர் பாப்பரசர் தூய ஆவியின் வழி நடத்துதல்படி தவறா வரத்துடன் திருச்சபையை ஆள்கிறார்.
தொடர்ந்து நமது ஆயர்களையும், குருக்களையும், நம்மையும் தூய ஆவி தான் வழி நடத்தி வருகிறார்.
நாம் திரு அருட்சாதனங்களைப் பெறும் போது நம்முள் இயங்கும் தூய ஆவியின் வரங்களின் உதவியால் நாம் ஆன்மீகப் பாதையில் வழி நடத்தப் படுகிறோம்.
தூய ஆவி தனது வரங்களாலும், தூண்டுதலாலும்
(Inspiration) நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்தி வருகிறார்.
நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழையும் வரை அவரது வழி நடத்துதல் தொடரும்.
விண்ணகத்தில் பரிசுத்த தம திரித்துவத்தோடு ஒன்றித்து நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.
நாமும் ஒருநாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment