பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.
(லூக்கா.6:2)
ஒரு ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே சென்றபோது அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்
பரிசேயருள் சிலர், "ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.
செய்யக் கூடாத எதை சீடர்கள் செய்து விட்டார்கள்?
பசியின் காரணமாகத் தானியக் கதிர்களைக் கொய்து, கசக்கித் தின்றார்கள்.
பரிசேயர்கள் சட்டத்தை அதன் எழுத்துப்படி கடைப்பிடிக்க வலியுறுத்துபவர்கள்.
அவர்களுடைய கருத்துப்படி கதிர்களைக் கொய்வது வயலில் அறுவடை செய்வதற்குச் சமம்.
கசக்குவது மில்லில் அரைப்பதற்குச் சமம்.
அறுவடை செய்வதும், மில்லில் அரைப்பதும் ஓய்வுநாளில் தடை செய்யப்பட்டவை.
ஆகவே சீடர்கள் ஓய்வு நாளில் செய்யக் கூடாததைச் செய்தார்கள்.
ஆனால் சீடர்கள் செய்தது தங்கள் பசியை அமர்த்தவே கதிர்களைக் கசக்கித் தின்றார்கள்.
இதை விளங்க வைக்க இயேசு "தாமும் தமமுடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?". என்று கேட்டார்.
பழைய ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இயேசு குறிப்பிடுகிறார்
தாவீது மன்னரும் அவருடைய 400 வீரர்களும் சவுல் அரசனின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஓடிப்போனபோது பசி அமர்த்த
அஹிமலேக் குருவிடம் சென்றார்கள். அப்போது, அவர் வேறு உணவு இல்லாததால், அவர் அவர்களுக்கு காணிக்கை அப்பத்தைக் கொடுத்தார்.
(1சாமுவேல். 21:1-6)
பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது இறைவனுக்கு உணவு அளிப்பதற்குச் சமம். இது இயேசுவின் நற் செய்தி.
இயேசு அவர்களிடம், "ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.
(லூக்கா.6:5)
இயேசுவின் சீடர்கள் இரவும் பகலும் அவரோடே இருந்தார்கள்.
அவர்களுடைய பசியை அமர்த்துவது அவருடைய பொறுப்பு.
தானிய வயல்கள் மூலம் அவர்களுடைய பசியை அமர்த்தினார்.
அவர் கடவுள். கடவுளுக்கு உலகிலுள்ள அனைத்தும் கட்டுப்பட்டவை.
இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ளாத பரிசேயர்களுக்கு இயேசு சொன்னது புரிந்திருக்காது.
நாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்.
ஓய்வு நாளில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
ஓய்வு நாள் முழுக்க முழுக்க இறைப்பணிக்கென்று ஒதுக்கப்பட்ட நாள்.
எல்லா நாட்களும் இறைப் பணிக்கான நாட்கள் தான்.
ஓய்வு நாள் விசேசித்த விதமாய் இறைப் பணிக்கானது.
தினமும் தான் சாப்பிடுகிறோம், திருவிழா சமயத்தில் வித்தியாசமாகச் சாப்பிடுவதில்லை?
அதேபோல.
நமக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள்.
அன்று திருப்பலிக்குச் செல்கிறோம்.
ஆனால் அதோடு ஓய்வுநாள் கடமை முடிந்து விடுவதில்லை.
"ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே"
என்று இயேசு கூறுகிறார்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;
"தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;
அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;
நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;
நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;
சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார்.
(மத்தேயு .25:35,36)
மேற்கூறப்பட்ட ஆண்டவரின் விருப்பத்துக்கு இணங்க வாரம் முழுவதும் நாம் செயல்பட வேண்டும்.
ஓய்வு நாளில் நற்செயல்களுக்கு ஓய்வு கொடுத்து விடக்கூடாது.
எப்படி பணி நாட்கள் ஆண்டவருக்கு உரியவையோ அப்படியே ஓய்வு நாளும் ஆண்டவருக்கு உரியது.
ஆகவே நாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலியில் கலந்து கொண்ட பின் பகலில் ஏழைகளுக்கு உதவும் நற்செயல்களை செய்ய வேண்டும்.
பசிப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
அன்னியர்களை உபசரிக்க வேண்டும்.
ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்க வேண்டும்.
நோயுற்றோரைக் கவனிக்க வேண்டும்.
சிறையில் இருப்பவர்களுச்கு ஆறுதல் கூற வேண்டும்.
இவற்றைச் செய்யும் போது நாம் இறைவனை வழிபடுகிறோம்.
வார நாட்களில் இவற்றைச் செய்ய நேரம் போதாமல் இருந்திருக்கலாம்.
ஓய்வு நாள் முழுவதையும் அவற்றுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
நாம் செய்கிறோமா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.
ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் வீட்டுக்கு ஓடாமல் கொஞ்ச நேரம் நின்று வந்தவர்களின் நலம் விசாரிக்கலாமே?
ஒருவரை பார்த்து புன் சிரிப்பு சிரிக்கும் போது இயேசுவைப் பார்த்தே புன்னகை பூக்கிறோம்.
குறைந்த பட்சம் இயேசுவுக்கு ஒரு Tea வாங்கிக் கொடுக்கலாமே!
கோவிலுக்கு வெளியே கை ஏந்துபவர்களுக்குக் கொடுக்கும் போது இயேசுவுக்கே கொடுக்கிறோம்.
ஓய்வு நாளில் பிறர் அன்புப் பணி செய்வதன் மூலம் இறைப்பணி ஆற்றுவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment