Monday, September 15, 2025

இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். (லூக்கா.7:32)



இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். 
(லூக்கா.7:32)



நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரில் சிறுவர்கள் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டு,

ஒரு பையன் சப்தமாகக் கூறுவான்,

"எல்லோரும் வாங்கடா வீடு கட்டுவோம்."

உடனை எல்லோரும் தனித்தனியாகவோ, ஓரிருவர் சேர்ந்தோ மணலால் வீடு கட்டி, சோறு பொங்கி, கறி வைத்து சாப்பிட்டு விளையாடுவோம்.

திடீரென்று ஒருவன் எழுந்து,

"வாங்கடா எல்லோரும் வீட்டை அழிப்போம்" என்று கத்துவான்.

உடனே அனைவரும் எழுந்து கால்களால் வீடுகளை அழித்து விட்டு அவரவர் வீடுகளை நோக்கி ஓடுவோம்.

இயேசுவின் காலத்தில் யூத சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு:

திருமண வீட்டில்  சில சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் குழல் ஊதுவார்கள்.

இதன் மூலம் மற்ற சிறுவர்களை நடனமாட அழைப்பார்கள். 

எல்லா சிறுவர்களும் குழல் ஊதுவதற்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள்.

இது ஒரு திருமண விழாக் கால விளையாட்டு.

துக்க வீட்டில்  சில சிறுவர்கள் ஒப்பாரி வைப்பார்கள்.   

 இதன் மூலம் மற்ற சிறுவர்களை துக்கத்தில் பங்கேற்க அழைக்கிறார்கள்.

மற்ற சிறுவர்கள் ஒப்பாரிக்கு ஏற்ப அழுவார்கள்.

இயேசு அவர் காலத்திய மக்களை

 விளையாட்டில் குழல் ஊதும்போது கூத்தாடாத,

ஒப்பாரி வைக்கும் போது அழாத சிறுவர்களுக்கு ஒப்பிடுகிறார்.

அதாவது அன்றைய தலைமுறை மக்களின் மனநிலையையும், ஆன்மீகப் பிடிவாதத்தையும் விளக்க இந்த விளையாட்டை ஒரு உருவகமாகப் பயன்படுத்துகிறார்.

இந்த விளையாட்டு திரு முழுக்கு யோவான்  மற்றும் இயேசுவின் நற்செய்திப் பணியைக் குறிக்கிறது. 

யோவான் தன்னுடைய கடுமையான தவ வாழ்வின் மூலம் 

 மக்கள் கடவுளின் வருகைக்காக மனந்திரும்பி, மகிழ்ச்சியோடு ஆயத்தமாக வேண்டும் என்று 

 குழல் ஊதி கூத்தாட அழைக்கும் சிறுவனைப் போல அழைத்தார்.

ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக  உணவு அருந்தாமலும் 
திராட்சை மது குடிக்காமலும் அழைத்த அவரை, "பேய் பிடித்தவன்" என்று மக்கள் அழைத்தார்கள். 

இயேசு பாவம் செய்தவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.

அவருடைய செயல் மூலம் 

மக்கள் பாவத்திற்காகவும், மனித மனதுடைய கடினத்தன்மைக்காகவும் வருந்த வேண்டும் என்று 
 ஒப்பாரி வைத்து அழ அழைக்கும் சிறுவனைப் போல‌ அழைத்தார்.

மக்கள் அவர் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக அவரை , "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்று அழைத்தார்கள். 


விளையாட்டு உருவகத்தின் மூலம் இயேசு சொல்ல வந்த செய்தி,

 இயேசுவின் காலத்து மக்கள், யோவானின் செய்தியையும் ஏற்கவில்லை, இயேசுவின் செய்தியையும் ஏற்கவில்லை.

இந்த வசனத்தை தியானிக்கும் போது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

இன்று நமக்கு நற் செய்தியை அறிவிப்பவர்கள் இயேசுவின் பிரதிநிதிகளாகிய குருக்கள்.

அவர்கள் நற் செய்தியை அறிவிக்கும் போது நாம் செய்ய வேண்டியது நற் செய்தியைக் கேட்பது, அதைத் தியானிப்பது, அதை வாழ்வாக்க வேண்டியது மட்டுமே.

அக்காலத்து யூதர்கள் செய்தது போல நற் செய்தியை அறிவிப்பவர்களை விமர்சிப்பது அல்ல.

பரிசேயர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றது நற் செய்தியை கேட்க அல்ல, அவரைக் குறை சொல்ல.

குருவானவர் திருப்பலியின் போது பிரசங்கம் செய்யும் போது சிலர் குருவானவர் கூறுவதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

அவர் கூறும் விதத்தில் குறைகள் இருக்கிறதா என்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை பிரசங்கம் வீண்.

ஆசிரியரது போதனையைக் கவனியாமல் அவரது கண், மூக்கு, செவி, வாயை ஆராய்ந்து கொண்டிருப்பவனுக்கு போதனை வீண்.

அன்று இயேசுவை குறை  சொல்லிக் கொண்டு திரிந்தவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

திரும்பவும் அறைய வேண்டாம், Please.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment